யுத்தக் குற்றம் இடம்பெற்றிருப்பின் பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்படும்" - Sri Lanka Muslim

யுத்தக் குற்றம் இடம்பெற்றிருப்பின் பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்படும்”

Contributors

இலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டு யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பின் அவை தொடர்பில் கண்டறிந்து உள்நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைவாக குற்றவாளிகளுக்கு பாரபட்சமின்றி உரிய தண்டனைகள் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

கடந்த 30 வருடங்களாக தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் கனிந்துள்ளது என்றும் ஜனாதிபதி கூறினார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனிடம் கேட்பதற்கு என்னிடமும் கேள்வி இருக்கின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர்கள் சிலர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, ”நாட்டை பிரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஒருபோது இடமளியாது” என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் அங்கு தெரிவித்தார்.

இலங்கையிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் வெளிப்படையானவர்கள். அதனால் எம்மிடம் மறைப்பதற்கென எதுவுமில்லை என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட குழுவினர் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ளமை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘இந்திய வெளிவிவகார அமைச்சர் இங்கு எம்மோடு உள்ளார். இது எனக்கு திருப்தியளிக்கிறது’ என்று ஜனாதிபதி கூறினார்.

தமிழ்நாட்டிலுள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை விஜயத்தை தவிரித்துக்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறதே என இந்திய ஊடகவியலாளர் ஒருவர் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ‘அவ்வாறு ஒரு விடயத்தினை இந்திய பிரதமர் எனக்கு சொல்லவில்லையே’ என்று குறிப்பிட்டார்.

அத்துடன், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் சிட்டினியில் நடைபெற்ற மாநாட்டிலும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கவில்லை என்பதையும் ஜனாதிபதி இதன்போது ஞாபகமூட்டினார்.

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்குபற்றுவதன் மூலம் இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு எவ்வித குறைபாடும் ஏற்படப் போவதில்லை என்பதை இந்தியா தனது விஜயத்தின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team