ரணிலின் நாடாளுமன்ற வருகை : நடக்கப் போவது என்ன? - Sri Lanka Muslim

ரணிலின் நாடாளுமன்ற வருகை : நடக்கப் போவது என்ன?

Contributors

– நௌசாட் முஹைடீன் –

சமூக ஊடகங்களில் நேற்று (20.06.2021) முதல் ஒரு செய்தி மிகத் துரிதமாக பகிரப்பட்டு வருகின்றதை அவதானித்தேன். தென் இலங்கை ஊடகம் ஒன்றினால் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் அந்தச் செய்தியில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தற்போது அரசில் அதிருப்தி அடைந்துள்ள அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கும் இடையில் மூன்றாம் தரப்பொன்றின் மூலமாக (பௌத்த மதகுரு ஒருவர்) அரசியல் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதன்படி விமல் வீரவன்சவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேற்பாளராகக் களமிறக்கி தனது முழு ஆதரவை வழங்க ரணில் விக்கிரமசிங்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், தக்க தருணம் வரும் வரை விமல் வீரவன்ஸ அரசுக்குள் அமைதியாக இருந்து தனது காய் நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், மைத்திரிபால சிறிசேனவைப் போல் உரிய நேரத்தில் அவர் வெளியேறி பொது வேற்பாளராகக் களம் இறங்க வேண்டும் எனவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாம்.

இந்த செய்தி சரியா பிழையா அல்லது உண்மையா பொய்யா என்றெல்லாம் ஆராய நான் விரும்பவில்லை. ஆனால் அது எழுதப்பட்டுள்ள விதத்தை வைத்து அது பற்றிய ஒரு சிறு கருத்தை மட்டும் இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன்.

எமக்கு கிடைக்கும் சில அரசல் புரசலான தகவல்களையும் கிசுகிசுக்களையும் அடிப்படையாகக் கொண்டு நாம் சில சந்தர்ப்பங்களில் செய்திகளை உருவாக்குவதுண்டு. இதை உண்மை என்று ஊர்ஜிதம் செய்யவும் முடியாது பொய் என்று நிராகரித்து விடவும் முடியாது. எங்களுக்கு மட்டுமே உரிய, அதாவது செய்திப் பிரிவில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே உரிய பரிபாஷையில் அதை “அத்த ரோல்” என்ற சிங்கள சொல்லைக் கொண்டு குறிப்பிடுவோம். இதை வாசிக்கும் எனது சமகால சகாக்களுக்கு இப்போது பழைய நினைவுகள் ரோல் ஆகத் தொடங்கும் என நினைக்கிறேன். நூற்றுக் கணக்கான “அத்த ரோல்” போட்டவர்களை நான் அறிவேன். இது சரியா பிழையா என்ற தர்ம நியாயங்களுக்கு இங்கு இடமில்லை. எமக்கு கிடைத்த ஒரு தகவலை மக்களோடு ஏதோ ஒரு வகையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கம் மட்டும் தான் இங்கு உள்ளது. எமக்கே உரிய தொழில் தர்மங்களைக் கடைப்பிடித்து மிகவும் நியாயமான முறையிலும், கௌரவமாகவும், பிரதம ஆசிரியர் மற்றும் செய்தி ஆசிரியர் ஆகியோரின் அனுமதியோடு இதை நாம் செய்வதுண்டு. இதைத்தான் இன்று சமூக ஊடகங்கள் எந்தக் கட்டுப்பாடும் இன்றி செய்து கொண்டிருக்கின்றன.

நான் மேலே குறிப்பிட்டுள்ள செய்தியை வாசித்ததும் அதன் முதல் இரண்டு பந்திகள் எழுதப்பட்டுள்ள விதம் அதன் பிறகு தொடர்ந்து வரும் பந்திகள் எழுதப்பட்டுள்ள விதம் என்பனவற்றை வாசித்ததும் எனக்கு இந்த விடயம் தான் நினைவுக்கு வந்தது. பத்திரிகைகளின் இன்றைய நிலையில் இது போன்ற இன்னும் பல சுவாரஸ்யமான விடயங்களை எதிர்ப்பார்க்கலாம் என்றும் நினைக்கின்றேன்.

இந்தச் செய்தியின் நம்பகத்தன்மை எவ்வாறு வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் இவ்வாறு ஒரு விடயம் நடக்காது என்று மட்டும் யாராலும் மறுக்க முடியாது. காரணம் இதில் பிரதான பாத்திரம் ஏற்கப் போகின்றவர் மீண்டும் ரணில் விக்கிரமசிங்க. மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் மீண்டும் பின்கதவு வழியாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து இந்த நாட்டின் ஆட்சிப் பீடத்தில் இன்னொரு கோமாளியை அமர வைக்க நினைப்பது முற்றிலும் கேவலமான ஒரு முயற்சி. ஒரு பொதுத் தேர்தலில் ஒரு மாவட்ட மக்களால் நிராகரிக்கப்பட்டு, அவர் தலைமையிலான கட்சியில் போட்டியிட்ட அனைவரும் தேசிய ரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட பின்னரும் தனக்கு இன்னமும் அடுத்த தலைவரை உருவாக்கும் செல்வாக்கு இருப்பதாக எந்த அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க நம்புகின்றார் என்பதும் புரியவில்லை.

அரசியல் ஒரு சாக்கடை அதில் எது வேண்டுமானாலும் கலக்கலாம் என்று சுமார் 35 அல்லது 40 வருடங்களுக்கு முன்பே தனது துக்ளக் திரைப்படத்தின் மூலம் (அந்த காலத்தில் தடை செய்யப்பட்ட படம். இப்போது இணையத்தில் காணலாம்) கூறியவர் நடிகரும் பிரபல அரசியல் விமர்சகருமான ஷோ. இன்றைய நிலையில் அரசியலில் பிரதான சாக்கடைகளின் சங்கமங்களும் சகஜமாகி விட்டன.

மறுபுறம் விமல் வீரவன்ச அரசியலில் தனது நிலையைத் தக்க வைத்துக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர். அவரை அரசாங்கமே தூண்டிவிட்டு அரசின் அதிருப்தியாளர் போல் சித்தரித்து அவருக்குப் பின்னால் அணிவகுத்து நிற்க தமது தரப்பில் இருந்து யார் யார் எல்லாம் தயாராக இருக்கின்றார்கள்? தமது உண்மையான ஆதரவாளர்கள் யார்? அதிருப்தியாளர்கள் யார்? என்பதை அடையாளம் கண்டு கொள்ள அரசாங்கம் வகுக்கும் ஒரு சூட்சுமமாக ஏன் இது இருக்கக் கூடாது? அல்லது தற்போது அமைதி காத்து வரும் விமல் வீரவன்ஸவின் தனிப்பட்ட உண்மையான நிலைப்பாட்டை அறிந்து கொள்ள அரசு வகுத்த தந்திரமாக ஏன் இது இருக்கக் கூடாது? தற்போது பரவிக் கொண்டிருக்கும் செய்தியில் நூறு வீதம் உண்மை இருக்குமானால் அது வெளியே கசிவதற்கு உரிய தருணம் இதுவல்ல என்பதே எனது கணிப்பாகும்.

எவ்வாறாயினும் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற வருகை நல்ல சகுணம் அல்ல. அரசாங்கமே அவரை செங்கம்பளம் விரித்து நாடாளுமன்றத்துக்குள் வரவேற்றாலும் அதில் ஆச்சரிம் இல்லை. என்னைப் பொறுத்தமட்டில் ரணிலின் நாடாளுமன்ற வருகையால் இரண்டு விடயங்கள் நடக்கலாம்.

ஒன்று சஜித் பிரேமதாஸ அணியின் ஒற்றுமைக்கு ஆப்பாக ரணிலின் வருகை அமையலாம். மற்றது சஜித் அணியில் உள்ள தனது அபிமானிகளையும் விசுவாசிகளையும் ஒன்று திரட்டிக் கொண்டு அரசின் கரத்தை மேலும் வலுவடையச் செய்யும் முயற்சியில் ரணில் இறங்கலாம்.

அப்படி இரண்டாவது விடயம் நடந்தால் அதற்குரிய மாபெரும் பரிசாக அவருக்கு நாட்டின் இரண்டாம் நிலை தலைமை பதவி கூட வழங்கப்படலாம். காரணம் இன்றைய சூழலில் வெளிநாடுகளில் இருந்து வரும் கடுமையான நெருக்குவாரங்களைச் சமாளிக்க ரணில் போன்ற ஒருவர் அந்தப் பதவியில் இருக்க வேண்டும் என்பது மறைமுகமாக உணரப்பட்டுள்ள விடயமாகும்.
ரணில் தேசிய ரீதியாக நிராகரிக்கப்பட்ட ஒரு அரசியல் வாதியாக இருந்தாலும் இன்றும் அவர் சர்வதேச ரீதியான அங்கீகாரம் உள்ளவர் என்பதை நாம் மறந்து விட முடியாது. ரணில் தேசியவாதம் பேசும் தலைவர் அல்ல. அவர் சர்வதேசத் தலைவர். அவர் இந்த நாட்டுக்கு விசுவாசமாக இருந்ததை விட சர்வதேசத்துக்கு விசுவாசமாக இருந்ததே அதிகம்.

ரணிலுக்கு இரண்டாம் நிலை தலைமைப் பதவியை வழங்குவதால் அரசுக்குள் எந்த எதிர் அலைகளும் எழப் போவதில்லை. அரசுக்குள் இருக்கும் அவரது றோயல் கல்லூரி சகாக்கள், அவரால் காப்பாற்றப்பட்ட விமல் வீரவன்ஸ, தமிழ் தரப்பு, முஸ்லிம் பச்சோந்திகள் என எல்லோருமே அவரை ஆதரிப்பது காலத்தின் தேவையாகக் காட்டப்படும்.

Web Design by Srilanka Muslims Web Team