ரணில் பிரதமராவதற்கு நானே காரணம் – சரத் பொன்சேகா..! - Sri Lanka Muslim

ரணில் பிரதமராவதற்கு நானே காரணம் – சரத் பொன்சேகா..!

Contributors
author image

Editorial Team

தற்போதே பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தம்மிடம் கோரியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கு முன்னர், ஜனாதிபதி தம்மை அழைத்து, பிரதமர் பதவியை ஏற்குமாறு கோரினார்.

எனினும் தாம் நான்கு நிபந்தனைகளை விதித்த நிலையிலேயே ரணில், பிரதமராக்கப்பட்டுள்ளார்.

எனவே, ரணில் பிரதமராவதற்கு தாமே வழிவகுத்துள்ளதாக சரத் பொன்சேகா உரிமைக் கோரினார்.

இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இன்றைய பாராளுமன்ற உரை தொடர்பில், கருத்துரைத்த அவர், பிரதமர் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை அறிவிக்கவில்லை என்று குறிப்பிட்டார். தம்மை நாடாளுமன்றுக்கு அழைத்து வந்தமைக்கு ரணில் விக்கிரமசிங்க உரிமை கோருகிறார்.

இது உண்மை என்ற போதிலும் 2010ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தேடிக்கொண்டிருந்தபோதே தாமே தமது கழுத்தை நீட்டியதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

காலிமுகத்திடல் போராட்டத்தின் தீரம் குறைந்துள்ளதாக கூறப்படுகின்ற போதும்,  நாட்டின் ஒவ்வொரு பொதுமகனின், பொதுமகளின் மனங்களில் போராட்டங்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன.

இந்தநிலையில் காலிமுகத்திடல் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யமுடியாது என்று குறிப்பிட்ட சரத் பொன்சேகா,  போராட்டக்கார்களுக்கு நாட்டு மக்கள் உணவுப்பொருட்களை வழங்கி போராட்டத்துக்கு வலுச்சேர்க்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Web Design by Srilanka Muslims Web Team