ரணில் ,பிரபாகரனுக்கு ஏற்பட்ட தலைவிதியே ஹக்கீமுக்கும் ஏற்படும் - Sri Lanka Muslim

ரணில் ,பிரபாகரனுக்கு ஏற்பட்ட தலைவிதியே ஹக்கீமுக்கும் ஏற்படும்

Contributors

Wimal Weerawansa

ரணில் மற்றும் பிரபாகரனுக்கு ஏற்பட்ட தலைவிதியே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் ஏற்படும் என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான வீரவன்ஸ வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.

13வது அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை விட அதிகளவான அதிகாரங்களை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் நீதியமைச்சர் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளதாக இன்று வெளியான சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மாகாண சபைகள் தொடர்பில் இதே நிலைப்பாடுகளையே கொண்டுள்ளது.இதில் ஒரே வித்தியாசம் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து கொண்டு இந்த நிலைப்பாட்டை கொண்டுள்ளதுடன் கூட்டமைப்பு அரசுக்கு வெளியில் இருந்து அந்த நிலைப்பாட்டை கொண்டுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியுடன் கிழக்கு மாகாணத்தின் அதிகாரத்தை கைப்பற்றவே முஸ்லிம் காங்கிரஸ் இந்த சந்தர்ப்பத்தில் முயற்சித்து வருகிறது.

கூட்டமைப்பின் ஆதரவுடன் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை கைப்பற்றி அதன் பிறகு இந்த மாகாணத்தை வடக்கு மாகாணத்துடன் இணைப்பதே அவர்களின் தேவையாக உள்ளது.
இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இனவாத, பிரிவினைவாத தேவையுடன் இணைந்து செல்வதாகும்.இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகளை தீர்த்து கொள்ளவும் அதன் எதிர்கால பயணத்தை தீர்மானிக்கவும் மக்களுக்கு இருக்கும் அதிகாரத்தில் நம்பிக்கை செயற்பட வேண்டும்.

மக்களின் அதிகாரத்தில் நம்பிக்கை வைக்காது சர்வதேச சக்திகள் மீது நம்பிக்கை வைத்து செயற்பட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட மற்றும் தோல்வியடைந்த இரண்டு அரசியல் தலைவர்கள் நினைவுக்கு வருகின்றனர்.இவர்களில் ஒருவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன். அவர்கள் மக்கள் அதிகாரத்தின் மீது நம்பிக்கை வைத்து செயற்படவில்லை. சர்வதேச சமூகத்தின் மீதான நம்பிக்கையில் அவரது ஈழ நாடு என்ற கனவு கட்டியெழுப்பட்டிருந்தது.

அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, மேற்குலக சக்திகளின் அழுத்தங்களின் அடிப்படையில் நாடு பயணம் செய்யும் பாதையை மாற்ற முடியும் என்று எண்ணினார்.மேற்குலக சக்திகளின் அழுத்தங்களின் அடிப்படையில் நாட்டின் பயணத்தை மாற்ற முடியும் என்ற நம்பிய வேலுப்பிள்ளை பிரபாகரன் தோல்வியடைந்ததுடன் ரணில் விக்ரமசிங்க மக்களால் நிராகரிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ரணில் மற்றும் பிரபாகரனின் தோல்வியடைந்த முகாம்களுடன் ரவூப் ஹக்கீம் இணைந்து கொண்டுள்ளார் என்பதே எமது கருத்தாகும். ஹக்கீம், தமிழ் பிரிவினைவாத நிலைப்பாடுகளை முஸ்லிம் மக்கள் மீது பலவந்தமாக சுமத்தி சர்வதேச சக்திகள் மீது நம்பிக்கை கொண்டு செயற்பட்டு வருகிறார்.

ரணில் – பிரபாகரன் ஆகியோருக்கு நேர்ந்த கதியே நாளை ஹக்கீமுக்கும் நேரும். அதனை தவிர அவருக்கு வேறு எதுவும் கிடைக்கப் போவதில்லை. இது குறித்து முஸ்லிம் மக்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பது எனது விருப்பமாகும் என விமல் வீரவன்ஸ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team