ராஜபக்சாக்களின் அரசாங்கம் நாட்டை அழித்தொழிக்கவா வந்தீர்கள்? முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கடும் சீற்றம்..! - Sri Lanka Muslim

ராஜபக்சாக்களின் அரசாங்கம் நாட்டை அழித்தொழிக்கவா வந்தீர்கள்? முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கடும் சீற்றம்..!

Contributors

கோட்டாபய – மஹிந்த தலைமையிலான சிறிலங்கா அரசாங்கம் நாட்டை பாதுகாக்கவா அல்லது அழித்தொழிக்கவா ஆட்சிக்கு வந்தது என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தென்னிலங்கையின் முன்னிலை பௌத்த தேரரான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ( Muruththettuwe Ananda Thero ) கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

கொவிட் வைரஸ் தாக்கம் இல்லாமலிருந்தால் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து வீதிக்கிறங்கியிருப்பார்கள் எனக் குறிப்பிட்ட அவர், அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமாக செயற்பாட்டை எதிர்த்து மாநாட்டை நடத்தப்போவதாகவும் எச்சரித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“தற்போதைய அரசாங்கம் நாட்டை முன்னேற்றுகிறதா, அழிக்கிறதா என்று எண்ண தோன்றுகிறது. ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் அவர்களுக்குள் முரண்பட்டுக் கொள்கிறார்கள்.

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்பட்ட அரச தலைவராக கோட்டாபய ராஜபக்ஷ கருதப்படுகிறார். நாட்டு மக்கள் எம்மிடம் ‘இப்போது சுகமா’ என்று நகைச்சுவையாக கேட்கிறார்கள். மக்களின் விமர்சனங்களுக்கு இன்று நாம் உள்ளாகியுள்ளோம். கொவிட் தாக்கம் மாத்திரம் இல்லாமிருந்தால் மக்கள் எந்நாளும் வீதிக்கிறங்கி போராடுவார்கள்.

விவசாயிகள் உரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள போது பொலன்னறுவை மாவட்டத்தில் பராக்கிரம சமுத்திரத்தை அண்மித்து பல பில்லியன் செலவில் நடைபாதை நிர்மானிக்கப்படுகிறது. இதன் பயன் யாருக்கு? இவ்விடயத்தில் அரசியல்வாதிகள் பௌத்த மதத் தலைவர்களையும், நாட்டையும், இனங்களையும் பிரிக்கிறார்கள். நாட்டை பாதுகாக்க மகாநாயக்க தேரர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

கோட்டாபய ராஜபக்ஷ பலவீனமான அரசதலைவர் என்று குறிப்பிட்டால் மக்கள் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்வார்கள். நாட்டில் கொரோனா தொற்று இருந்திருக்காவிட்டால் இந்நேரம் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து வீதியில் இறங்கியிருந்திருப்பார்கள்.

அரசாங்கம் நாட்டை பாதுகாக்க வந்துள்ளதா, அழிக்க வந்துள்ளதா என்று எண்ண தோன்றுகிறது. ஆகவே நாட்டை பாதுகாக்க சர்வ மத தலைவர்களையும் ஒன்றினைத்து சம்மேளனத்தை நடத்த தீர்மானித்துள்ளோம்” என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team