ராஜபக்ச அரசின் கீழ் வாழ்வதை விட மரணிப்பது மேல் - கரு ஜயசூரிய..! - Sri Lanka Muslim

ராஜபக்ச அரசின் கீழ் வாழ்வதை விட மரணிப்பது மேல் – கரு ஜயசூரிய..!

Contributors

இலங்கையின் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தால் மீண்டும் நிறுவப்பட்ட சர்வாதிகார மற்றும் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அச்சத்துடனும் சந்தேகத்துடனும் வாழ்வதை விட கொரோனா தொற்றுநோயில் பாதிக்கப்பட்டு மரணிப்பது மிகவும் ஆறுதலாக இருக்கும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவிக்கின்றார்.

சமூக நீதிக்கான தேசிய இயக்கம் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இழக்கப்பட்டால் நாடு கடன்சுமையின் விளிம்பிற்கு தள்ளப்படும் அபாயம் காணப்படுவதாகவும் எச்சரித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

நம் நாடு தற்போது மிகவும் கடுமையான மற்றும் பாரிய நெருக்கடியை எதிர்கொள்கிறது. அந்த கொடிய கொரோனா தொற்றுநோய் முழு நாட்டையும் சூழ்ந்துள்ளது. ஆனால் நாட்டின் தற்போதைய அரசியல் அதிகாரிகள் இந்த நெருக்கடியை தங்கள் அதிகாரத்தைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் முயற்சிக்கின்றார்களே தவிர தொற்றைக் கட்டுப்படுத்தவல்ல.

கொரோனாவை ஒரு தொற்றுநோயாக அதிகாரிகள் பார்க்கவில்லை, மாறாக அது வருமானம் தரும் வசந்தகாலமாகவே பார்க்கின்றனர். இதுவரை தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், இதுபோன்ற சந்தேகங்கள் மக்களிடையே எழுந்ததில் ஆச்சரியமில்லை.

இந்த சூழ்நிலையால் நாங்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறோம். இந்த ஆபத்தை அரசாங்கம் சரியாக அடையாளம் காண வேண்டும். ஒரு நாடாக நாம் இந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டுமானால் நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கைக்கு சரியான பாதுகாப்பை வழங்க வேண்டும். அனைத்து கட்சிகளின் ஒப்புதலுடன் ஒரு விரிவான தேசிய வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

இல்லையெனில் பொறுப்பானவர்கள் இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான உயிர்களை பலியிடுவதன் விளைவுகளை தவிர்க்க முடியாமல் அனுபவிக்க நேரிடும்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் மூலம் பெறப்பட்ட சர்வாதிகார அதிகாரத்தின் காரணமாக இத்தகைய நிலைமை ஐரோப்பிய சபையில் இலங்கைக்கான தீர்மானம் ஏன் நிறைவேற்றப்பட்டது? இந்த நாட்டில் ஜனநாயகம் பலவீனமடைவதை எதிர்த்து இன்று கடும் நடவடிக்கையை எடுத்துள்ளார்கள்.

ஏனென்றால் மனித உரிமைகள் உட்பட மக்களின் அடிப்படை உரிமைகள் பரந்த பகலில் அப்பட்டமாக இங்கு மீறப்படுகின்றன என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team