ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராக நிந்தவூர் பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்..! - Sri Lanka Muslim

ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராக நிந்தவூர் பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்..!

Contributors

தலைவர் ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராக நிந்தவூர் பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்; இக்கைதானது சிறுபான்மை சமூகத்திற்கு எதிரானதும் ஆபத்தானதுமான செயற்பாகும்- தவிசாளர் தாஹிர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நிந்தவூர் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சபை அமர்வுக்கு கருப்புச்சால்வை அணிந்து சமூகமளித்திருந்ததுடன் தொடர்ந்து சபையில் ஏகமனதாக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபையின் ஏப்ரல் மாதத்திற்கான 04 ஆவது சபையின் 37ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு வியாழக்கிழமை(29) மாலை நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மத அனுஸ்டானம் இடம்பெற்ற பின்னர் 2021 மார்ச் மாதத்திற்கான கூட்டறிக்கை உறுதிப்படுத்தல் 2021 மார்ச் மாதத்திற்கான கணக்கறிக்கை உறுதிப்படுத்தல் தவிசாளர் எம் .எ . எம் . தாஹிர் உரை என்பன தொடர்ச்சியாக இடம்பெற்றன.

மேலும் குறித்த பிரதேச சபையின் அமர்விற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் 6 பேர் கருப்புச்சால்வை அணிந்து வருகை தந்திருந்ததுடன் மற்றும் ஏனைய கட்சிகளை சேர்ந்த உறுப்பினரும் இவ்வாறு அணிந்து சபைக்கு வருகை தந்திருந்தனர்.

அத்துடன் தவிசாளர் உட்பட சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களான ஏ.அஸ்பர்இ அப்துல் வாஹிது ஆகியோர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் கண்டனம் தெரிவித்து உரை யாற்றியதுடன் தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்களான றியாஸ் ஆதம்இ ஏ.அன்சார் உள்ளிட்டவர்களும் கைது நடவடிக்கை கண்டித்து உரையாற்றினர்.

இதன் பின்னர் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் கைது தொடர்பில் சபையில் ஏகமனதாக கண்டனத்தீர்மானமும் எடுக்கப்பட்டதேடு அவரது விடுதலைறை வலியுறுத்தி கோரிக்கையும் முன்வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதே வேளை சபையின் பிரதி தவிசாளர் வை.எல் சுலைமாலெப்பை றிசாட் பதியுதீனின் கைது நடவடிக்கை தொடர்பில் பேசியதுடன் அது தொடர்பில் ஏனைய உறுப்பினர்களின் கண்டனத்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல் ஒரே சமூகம் என்ற ரீதியில் கவலையடைவதாகவும் ஆளும் கட்சியை சார்ந்தவன் என்றவகையில் முஸ்லிம் தலைவர்கள் ஆளும் தரப்புடன் ஒத்துப்போக வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

சபை அமர்வைத் தொடர்ந்து ஊடகவியலாளர் மாநாடும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team