ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராக கிண்ணியா பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்! - Sri Lanka Muslim

ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராக கிண்ணியா பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்!

Contributors

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கிண்ணியா பிரதேச சபையின் மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸ்மியினால் முன்வைக்கப்பட்ட பிரேரனை, சபையில் ஏகமனதாக ஏற்று, கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிண்ணியா பிரதேச சபையின் மே மாதத்திற்கான 41வது மாதாந்த சபை அமர்வு, இன்று (07) காலை 9.00 மணிக்கு, தவிசாளர் கே.எம்.நிஹார் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸ்மி பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில்,

“2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி அதிகாலை 3 மணிக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்களது கைதானது, இந்த நாட்டு முஸ்லிம்களை வேதனைபடுத்துகின்ற, ஜனநாயக முறையில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கைதாக காணப்படுகின்றது.

மேலும், இந்த ஜனநாயக நாட்டில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்வதாக இருந்தால் சபாநாயகருக்கு தெரியப்படுத்தி, சபாநாயகர் நீதிமன்றத்திற்கு அறிவித்த பின்னரே கைது செய்யப்பட வேண்டும். மாறாக இதற்கு மாற்றமாக இந்த கைது இடம்பெற்று இருக்கின்றது.

அணைத்து விசாரணைகளிலும் எவ்வித குற்றமும் அற்றவர் என நிரூபிக்கப்பட்டவர் எமது கட்சியின் தலைவர்.

அவரை மீண்டும் இந்த குண்டு தாக்குதலுடன் தொடர்புபடுத்தி இடம்பெற்ற இந்த கைது, ஒரு சிலரை திருப்திப்படுத்துவதற்கான கைதாகவே காணப்படுகின்றது.

எனவே, இந்த நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் உணர்வுகளை மதித்து எவ்வித குற்றமும் செய்யாத எமது கட்சியின் தலைவர் கௌரவ ரிஷாட் பதியுதீன் அவர்களை விடுதலை செய்வதற்கான, அனைத்து ஜனநாயக முறைகளையும் இந்த அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team