ரிஷாட் மற்றும் றியாஜின் விசாரணையிலிருந்து விலகிய மற்றுமொரு நீதியரசர்..! - Sri Lanka Muslim

ரிஷாட் மற்றும் றியாஜின் விசாரணையிலிருந்து விலகிய மற்றுமொரு நீதியரசர்..!

Contributors

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை விசாரணை செய்கின்ற நீதியரசர்கள் குழாமிலிருந்து மற்றுமொருவர் விலகியுள்ளார்.

குறித்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதியரசர் யசந்த கோத்தாகொட தனது விலகல் தகவலை மன்றிற்குத் தெரியப்படுத்தினார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தியுள்ள இவர்கள் இருவரும் தமக்கான விடுதலையை வலியுறுத்தி அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கின்றனர்.     

இந்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான எஸ்.துரைராஜா, யசந்த கோத்தாகொட ஆகியோர் தலைமையிலான நீதியரசர்கள் குழாம் முன்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையின்போது நீதியரசர் யசந்த கோத்தாகொட, தனது தனிப்பட்ட காரணத்திற்காக இந்த விசாரணையிலிருந்து விலகுவதாக திறந்த நீதிமன்றத்தில் இன்றைய தினம் தெரியப்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை எதிர்வரும் 11ஆம் திகதிவரை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இதற்கு முன்னரும், குறித்த மனு மீதான விசாரணைகளை நடத்திவரும் நீதியரசர்கள் குழாமிலிருந்த ஜனக் டி சில்வா, தனிப்பட்ட காரணத்திற்காக விசாரணையிலிருந்து விலகுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team