ரிஷாதுக்கு எதிரான குரல்களின்பின்னால் ஏதோ ஒரு அரசியல் உள்ளது !ஏன் இந்த வெறுப்பு ? - Sri Lanka Muslim

ரிஷாதுக்கு எதிரான குரல்களின்பின்னால் ஏதோ ஒரு அரசியல் உள்ளது !ஏன் இந்த வெறுப்பு ?

Contributors

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்தியரை திட்டியதாகவும், மரண அச்சுறுத்தல் விடுத்ததாகவும் கொழும்பு குற்றப் பிரிவு விசாரணையை தொடங்கியுள்ளது.

புதிய மெகசீன் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சந்தேக நபரான ரிஷாத் பதியுதீன், கடந்த 15ஆம் திகதி தன்னைத் திட்டியதாகவும் மரண அச்சுறுத்தல் விடுத்தாகவும் வைத்தியரான பிரியங்க இந்துனில் புபுலேவெல வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு அளித்த வைத்தியர், பின்னர் பொரளை பொலிஸில் கடந்த 21 ஆம் திகதி முறைப்பாடு அளித்துள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு தெரிவித்தது.

பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய இந்த வழக்கை பொரளை பொலிஸார் தம்மிடம் ஒப்படைத்ததாகவும், சம்பவம் தொடர்பில் முறைப்பாடு வழங்கிய வைத்தியரிடம் இருந்து வாக்குமூலத்தை பதிவு செய்ததாகவும் கொழும்பு குற்றப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

அதேசமயம் ,இது தொடர்பில் சிறைச்சாலைகள் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடமும் பொரளை பொலிஸ் நிலையத்திலும் குறித்த வைத்தியர் முறைப்பாடு செய்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து நீதியான விசாரணைகள் நடைபெறவேண்டும் என்பதை வலியுறுத்தி தெரிவிக்க விரும்பும் அதேசமயம் ,ரிசாட் பதியுதீன் எம் பி மீது தொடர்ந்தும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதை நோக்குகையில் இது உண்மையான குற்றச்சாட்டுகளா இல்லை இதன் பின்னால் வேறு நோக்கங்கள் இருக்கின்றனவா என்பதுபற்றி யோசிக்கவேண்டியுள்ளது.

கடந்த காலங்களில் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக டாக்டர் ஷாபி உட்பட்ட பலர் மீது வசைமாரி பொழியப்பட்டன. இறுதியில் அந்த குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆனது ? குழந்தை பாக்கியத்தை இல்லாமல் செய்தாரென்ற குற்றச்சாட்டுகளால் குருநாகல் டாக்டர் ஷாபியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதுதான் மிச்சம். அவரை தேசத்துரோகியாக சித்தரித்து செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் கூட அவர்பக்க நியாயத்தை வெளியிடவில்லை. அதேபோலவே இப்போது ரிசாட்டுக்கு எதிராக வரும் குரல்களின் பின்னாலும் எதோ ஒரு அரசியல் இருப்பது புலனாகிறது.

சிறைவாசம் அனுபவிக்கும் காலப்பகுதியில் ,வைத்தியசாலையில் இருந்து சில வாரங்களுக்கு முன்னர் ரிசாட் வெளியேறியபோது ,அவர் மலசலகூட யன்னலில் மருந்துகளை வீசினார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.ரிசாட் மலசலகூடம் செல்வதுமுதல் அவர் மருந்துகளை வீசுவதை பார்க்குமளவுக்கு அவர் மீதான கண்காணிப்பு இருக்கிறது.சாதாரண ஒருவர் கசப்பு மருந்தை குடிக்காமல் வெளியே வீசும் நிலைமை உலகில் இல்லையா? அல்லது அப்படி ஒருவர் மருந்தை வீசினால் அதற்கு காரணம் என்ன என்பதை ஆராயாமல் அதையும் ஒரு செய்தியாக்கியவர்களை எந்த வகையறாக்களில் சேர்ப்பது ?

ரிசாட் பதியுதீன் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்லாமல் அரசியல் கட்சியொன்றின் தலைவர்.ஜனநாயக தேர்தலொன்றில் வாக்களித்த மக்களின் பிரதிநிதி .சிறைக்குள் அவருக்கு வழங்கப்பட்ட கண்ணியம் அல்லது அவமரியாதை காரணமாக அவர் அப்படி பேசியிருக்க வாய்ப்பில்லையா ? மருத்துவர் ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காரணங்களே இல்லாமல் சாதாரணமாகவே திட்டித் தீர்த்துவிட முடியுமா ?போன்ற கேள்விகளுக்கு விசாரணையாளர்கள் பதில் தேட வேண்டும்.

இனங்களுக்கிடையில் குரோதம் ஏற்படும் வகையிலும் , முஸ்லிம்கள் தீண்டத்தகாதவர்கள் என்ற ரீதியிலும் நாட்டில் அரங்கேறிவரும் காட்சிகள் சுபீட்சமான இலங்கையின் எதிர்காலத்திற்கு நல்ல சகுனங்கள் அல்ல. ஈரை பேனாக்கி ,பேனை பெருமாளாக்கும் கைங்கரியங்கள் நாடு மேலும் நாசமாய்ப்போகிடவே உதவிடும்.அதுதான் உண்மை.

நன்றி :- தமிழன் நாளிதழ் – ஆசிரியர் தலையங்கம்

Web Design by Srilanka Muslims Web Team