ரிஷாத்தின் அடிப்படை உரிமை மீறல் மனு வழக்கிலிருந்து விலகிய 4 ஆவது நீதியரசர்..! - Sri Lanka Muslim

ரிஷாத்தின் அடிப்படை உரிமை மீறல் மனு வழக்கிலிருந்து விலகிய 4 ஆவது நீதியரசர்..!

Contributors
author image

Editorial Team

 (எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட   நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தம்மை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து சிஐடியினர் தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து தலா 500 கோடி ரூபா நட்டஈடு பெற்றுத் தரக் கோரி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ள வழக்கின் பரிசீலனைகளிலிருந்து உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஒவ்வொருவராக விலகி வருகின்றனர். அதன்படி இன்று (05) இவ்வழக்கு விசாரணைகளிலுருந்து ஒதுங்கிக் கொள்வதாக 4 ஆவது நீதியரசராக மஹிந்த சமயவர்தன அறிவித்துள்ளார்.  இதனையடுத்து பரிசீலனைகள் மீள  ஜூலை 8 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவரக செயற்பட்ட தான், மனுதாரர்கள் இருவர் குறித்தும் அவ்வாணைக்குழுவில் சாட்சிகளை செவிமடுத்துள்ளதாக குறிப்பிட்டு, அதனடிப்படையில் இம்மனுக்கள் மீதான பரிசீலனைகளில் இருந்து விலகுவதாக நீதியரசர் ஜனக் டி சில்வா கடந்த மே 28 ஆம் திகதி அறிவித்திருந்தார்.

இதனையடுத்து தனிப்பட்ட காரணிகள் என தெரிவித்து நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட கடந்த ஜூன் 4 ஆம் திகதி மனு மீதான பரிசீலனைகளில் இருந்து விலகியுள்ளார்.

அத்துடன் கடந்த ஜூன் 23 ஆம் திகதி தனிப்பட்ட காரணங்கள் எனக் கூறி நீதியரசர் நவாஸ் விலகினார்.

இவ்வாறான பின்னணியிலேயே இன்று அரசியலமைப்பின் 17 மற்றும் 126 ஆவது உறுப்புரைக்கு அமைய, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக, ரிஷாத் பதியுதீன், ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தனித் தனியாக தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றில் நீதியரசர்களான முர்து பெர்ணான்டோ, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு வந்தது.  இதன்போதே, இம்மனுக்கள் மீதான பரிசீலனைகளில் இருந்து விலகுவதாக திறந்த மன்றில் நீதியரசர் மஹிந்த சமயவர்தன அறிவித்தார்.

ரிஷாத்தின் சகோதரர் ஒருவரை வழக்கொன்றிலிருந்து தான் விடுவித்து ஏற்கனவே தீர்ப்பறிவித்துள்ள நிலையில், இம்மனுவை பரிசீலிக்க தான் விரும்பவில்லை என குறிப்பிட்டே நீதியர்சர் மஹிந்த சமயவர்தன வழக்கிலிருந்து விலகீனார்.

இம்மனுக்களில் முதலில் ரிஷாத் பதியுதீன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட எஸ்.சி.எப்.ஆர். 152/2021 எனும் மனு பரிசீலிக்கப்பட்டது. இதில் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனை பிரகாரம் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, சிரேஷ்ட சட்டத்தரணிகளான என்.எம் சஹீத், ருஸ்தி ஹபீப் உள்ளிட்டோர் ஆகியோர் ஆஜராகினர்.

ரியாஜ் பதியுதீன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எஸ்.சி.எப்.ஆர். 153/2021 எனும் மனு சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் சிரேஷ்ட சட்டத்தரணி புலஸ்தி ஹேவமான்ன ஆகியோர் ஆஜராகினர்.

இவ்விரு மனுக்கள் தொடர்பிலும் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோனும் சிரேஷ்ட அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேராவும் முன்னிலையானர்.

Web Design by Srilanka Muslims Web Team