ரிஷாத்தை கொலை செய்ய கருணாவுக்கு 15கோடி ரூபா: விசாரணை தேவை, நளின் பண்டார...! » Sri Lanka Muslim

ரிஷாத்தை கொலை செய்ய கருணாவுக்கு 15கோடி ரூபா: விசாரணை தேவை, நளின் பண்டார…!

Contributors
author image

Editorial Team


ரிஷாத் பதியுதீனைக் கொலை செய்வதற்கு 15 கோடி ரூபா கருணா அம்மானிடம் வழங்கப்பட்டிருந்தாக நாமல் குமார காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (23) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரத்துக்கு கீழ் இருக்கும் நிறுவனங்ளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய தகவல்கள் பலவற்றை வெளியிட்ட நாமல் குமார என்பவர் தற்போது காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ள விடயம் தொடர்பாக அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும்.

அதாவது, ரிஷாத் பதியுதீனைக் கொலை செய்வதற்காக கருணா அம்மானிடம் 15 கோடி ரூபாவுக்கு கொலைத் திட்டமொன்று ஒப்படைக்கப்பட்டிருந்ததாக நாமல் குமார அந்தக் காணொளியில் தெரிவித்துள்ளார். கருணா அம்மான் என்பவர் அரசாங்கத்தின் உறுப்பினர் என்பதுடன் பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகராகவும் இருக்கிறார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மேலும், ஸஹ்ரானின் மனைவியிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு ஊடகங்களுக்கு அனுமதி இல்லை. அதனால் அவரினால் தெரிவிக்கப்படும் சாட்சியங்கள் யாருக்கும் தெரியாது. அவர் திடீரென இறந்தால் அவர் வெளியிட்ட தகவல்கள் எதுவும் தெரியாது போய்விடும். சாரா என்ற பெண் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். அவரையும் அழைத்துவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Web Design by The Design Lanka