ரிஷாத் பதியுதீனை கைது செய்யும் திட்டத்தை அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் CTJ கோரிக்கை..! » Sri Lanka Muslim

ரிஷாத் பதியுதீனை கைது செய்யும் திட்டத்தை அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் CTJ கோரிக்கை..!

FB_IMG_1602829533344

Contributors
author image

Editorial Team

அகதிகளுக்கான வாக்கு உரிமை விவகாரத்தை அரசியலாக்காது ரிஷாத் பதியுத்தீனை கைது செய்யும் திட்டத்தை அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும்..!

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் CTJ கோரிக்கை..!

கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கையில் இடம் பெற்ற பெரும் யுத்தம் காரணமாக வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டும், இடம் பெயர்ந்தும் புத்தளம், அனுராதபுரம் மற்றும் நாட்டின் பல பாகங்களிலும் வாழ்ந்து வந்தார்கள். இவர்களில் குறிப்பிட ஒரு சாரார் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு குடிபெயர்ந்தாலும் இன்னும் ஆயிரக் கணக்கான குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீண்டும் குடியேற முடியாத நிலையில் புத்தளம் உள்ளிட்ட பல பகுதிகளில் வாழ்ந்து வருகின்றார்கள்.

இவர்களின் மீள்குடியேற்றத்தில் அரசு அவசரம் காட்டுமாறு சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தும் தொடர்ந்தும் அரசை வலியுறுத்தி வருவது குறிப்பிடத் தக்கதாகும்.

இந்நிலையில், புத்தளத்தில் இடம் பெயர்ந்து வாழும் வடக்கை பூர்வீகமாக கொண்ட முஸ்லிம்களின் வாக்கு உரிமை வடக்கிலேயே காணப்படுகின்றது. அவர்களில் பெரும்பாலானவர்கள் புத்தளத்தில் வாழ்ந்தாலும் தேர்தல் காலங்களில் வாக்களிப்பதற்காக மன்னார் உள்ளிட்ட வடக்கு பகுதிகளுக்கு சென்றே வாக்களித்து வருகிறார்கள்.

வாக்களிப்பு நாளில் புத்தளம் வாழ், வடக்கில் வாக்குரிமை கொண்ட மக்களுக்கான போக்கு வரத்து ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டு வரும் நிலையில் தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக, தம் உரிமையை சரியான முறையில் பயன்படுத்துவதற்காக அவர்கள் அங்கு சென்று வாக்களிப்பில் கலந்து கொள்கிறார்கள். சுமார் இருபது வருடங்களாக இப்படியான முறையிலேயே அவர்கள் தேர்தல் வாக்களிப்பில் கலந்து கொள்கிறார்கள்.

இந்நிலையில், குறித்த வாக்காளர்களின் வாக்கு உரிமையை நிறைவேற்றும் வகையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, இடம் பெயர்ந்த மக்களுக்கான அப்போதைய அமைச்சராக இருந்த ரிஷாத் பதியுத்தீன் MP அவர்களினால் புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் மன்னார் வாக்காளர்களை, தமது சொந்த இடமான மன்னாரில் வாக்களிக்க பஸ் வசதிகளை செய்து கொடுத்த விவகாரம் தொடர்பில் தற்போது அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், அரச உயர்மட்டத்தின் அனுமதியைப் பெற்றே முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், குறிப்பிட்ட வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கான பஸ் ஏற்பாடுகளை செய்து கொடுத்ததாக கூறப்படுவதுடன், இடம்பெயர்ந்தோருக்கான அமைப்பு பஸ்களுக்கான கட்டணத்தை உரிய அமைச்சுக்கு செலுத்தியும் விட்டதாக முன்னால் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சூடான தற்போதைய அரசியல் சூழலில் ரிஷாத் பதியுத்தீன் அவர்களை கைது செய்யும் வகையில் 06 பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அறிவித்துள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பல்லாண்டு காலமாக அகதி முகாம் வாழ்கை வாழ்ந்து வரும் வடக்கு முஸ்லிம்கள் தமது சொந்த காணிகளில் மீள்குடியேறும் போது காடழிப்பில் ஈடுபடுவதாக கூறி அவர்களை அங்கு குடியேற விடாமல் தடுக்கும் காரியங்கள் திட்டமிட்டு பல சந்தர்ப்பங்களில் முன்னெடுக்கப்படுகின்றது. அதே பாணியில் தற்போது வாக்கு உரிமையை நிலை நாட்ட கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நடைமுறைப்படுத்தப் பட்டு வரும் ஒரு விவகாரத்தை பூதாகரமாக்குவது ஜனநாயக நாட்டின் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளில் கழுத்து நெறிப்பை மேற்கொள்ளும் காரியத்திற்கு சமானமானதாகும்.

எனவே, அகதிகளுக்கான வாக்கு உரிமையை நிறைவேற்றும் வகையில் அவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளை குறித்த அமைச்சுடன் கலந்து பேசி செய்திருப்பதையும், அதற்குறிய செலவீனங்களை உரிய முறையில் செலுத்தியிருப்பதாக கூறப்படுவதையும் அரசாங்கம் கவனத்தில் கொண்டு முன்னால் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் கைது விவகாரத்தை மீள்பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ வேண்டிக் கொள்கிறது.

இதே வேலை வாக்காளர்களின் வாக்களிப்பிற்கான உதவிகளை செய்த காரியத்தை பயங்கரவாத செயலை செய்ததைப் போல் பூதகரமாக்கி, விகாரப்படுத்துவதை ஊடகங்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் வினயமாக கேட்டுக் கொள்கிறோம். ஏனெனில் இந்நாட்டின் பயங்கரவாத யுத்த காலத்தில் பயங்கரவாதிகளுக்கு துணை போகாமல் நாட்டுப் பற்றை வெளிப்படுத்தி நாட்டுடன் ஒன்றிணைந்து பயணித்த காரணத்தினாலேயே அந்த மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதையும் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து புரிந்து கொள்ள முற்பட வேண்டும்.

ரிஷாத் பதியுத்தீன், அவர் சகோதரர்களான ரியாஜ் பதியுத்தீன் மற்றும் ரிப்கான் பதியுத்தீன் ஆகியோரது செயல்பாடுகளாக இது பார்க்கப்படும் போது அப்பாவி பொது மக்கள் இதன் மூலம் பாரிய பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதையும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ரிஷாத் பதியுத்தீன் மற்றும் அவர் சகோதரர்கள் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர்கள் மேலதிக சட்ட முன்னெடுப்புக்களை செய்து வருவதாக அறிகின்றோம். அது தொடர்பில் நாம் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கும் தேவை இல்லை என்றாலும் தற்போதைய விவகாரம் அகதியான வடக்கு மக்களின் வாக்கு உரிமை தொடர்பான விடயம் என்பதினால் ஒரு சமூக அமைப்பாக நமது கோரிக்கையை அரசுக்கு இதன் மூலம் முன்வைக்க விரும்புகிறோம்.

R. அப்துர் ராஸிக் B.COM
பொதுச் செயலாளர்,
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ
16.10.2020

Web Design by The Design Lanka