ரிஷாத் பதியுதீனை பாராளுமன்றில் பேச இடம்கொடுக்காத ஆளும் கட்சி உள்ளிட்ட சபாநாயகர்..! - Sri Lanka Muslim

ரிஷாத் பதியுதீனை பாராளுமன்றில் பேச இடம்கொடுக்காத ஆளும் கட்சி உள்ளிட்ட சபாநாயகர்..!

Contributors

தனக்கெதிராக மேற்கொண்டுவரும் விசாரணை தொடர்பாக சபையில் தெரிவிக்க முற்பட்ட ரிஷாத் பதியுதீனுக்கு சபையில் ஆளும் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் சபாநாயகரும் ஆளும் தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

நாடாளுமன்றத்தில் இன்று (17) இடம்பெற்ற கொரோனா வைரஸ் தொற்று( கொவிட்19) (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ரிஷாத் பதியுதீன், எந்த குற்றச்சாட்டு இல்லாமல் நான் கடந்த 116 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறேன்.

இது தொடர்பாக ஜனாதிபதி சபையில் இருக்கும்போது நான் தெரிவித்த பின்னர் விரைவாக என்னை கோட்டை நீதிமன்றில் ஆஜர்படுத்தி, தற்போது சிறையில் அடைத்திருக்கின்றார்கள்.

எனது வீட்டில் பணிபுரிந்து வந்த ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சோடித்து தெரிவிக்கப்பட்டதால் தற்போது எனது மனைவி, மனைவியின் தந்தை மற்றும் சகோதரன் சிறையில் இருக்கின்றார்கள். எனது மைத்துனர், 5வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக தெரிவித்து பாலியல் குற்றச்சாட்டு ஒன்றுக்கான சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

இதன்போது எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன, நீதிமன்றில் விசாரிக்கப்பட்டுவரும் விடயங்களை சபையில் தெரிவிக்க வேண்டாம் என்றார்.

அதனைத் தொடர்ந்து எழுந்த ஆளும் கட்சி பிரதம கொரடா ஜோன்ஸன் பெர்ணான்டோ, நீதிமன்றில் தெரிவிக்கவேண்டிய விடயங்களை சபையில் தெரிவிப்பதற்கு இடமளிக்க முடியாது. செய்வதெல்லாம் செய்துவிட்டு நிரபராதிபோல் இங்கு கருத்து தெரிவிக்கின்றார். இதற்கு இடமளிக்கக் கூடாது என்றார்.

அதனைத்தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக இன்னும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. பீ. அறிக்கை மாத்திரே சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. பீ. அறிக்கை தொடர்பாக சபையில் கதைக்க முடியும் என்றார்

எனினும் ஆளும் தரப்பினர் எதிர்ப்புத் தெரித்ததால், சபாநாயகர், தற்போது அதற்கு இடமளிக்க நேரம் இல்லை. வேறு தினமொன்றில் பேசலாம் என தெரிவித்து, ரிஷாத் பதியுதீனுக்கு பேசுவதற்கு இடமளிக்க மறுத்துவிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team