ரிஷாத், ரியாஜின் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை பரிசீலிக்கும் குழாமிலிருந்து விலகினார் நீதியரசர் ஜனக்..! - Sri Lanka Muslim

ரிஷாத், ரியாஜின் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை பரிசீலிக்கும் குழாமிலிருந்து விலகினார் நீதியரசர் ஜனக்..!

Contributors

(எம்.எப்.எம்.பஸீர்)


முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தம்மை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிஐடியினர் தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து தலா 500 கோடி ரூபா நட்டஈடு பெற்றுத் தரக் கோரி உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ள மனு மீதான பரிசீலனைகளில் இருந்து உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா விலகுவதாக இன்று (28) அறிவித்தார்.

அரசியலமைப்பின் 17 மற்றும் 126 ஆவது உறுப்புரைக்கு அமைய, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக, அவர்கள் தனித் தனியாக தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நேற்று உயர் நீதிமன்றில் நீதியரசர் விஜித் மலல்கொட, குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன் பரிசீலனைக்கு வந்தது.

இதன்போதே, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவரக செயற்பட்ட தான், மனுதாரர்கள் இருவர் குறித்தும் அந்த ஆணைக்குழுவில் சாட்சிகளை செவிமடுத்துள்ளதாக குறிப்பிட்டு, அதன் அடிப்படையில் இம்மனுக்கள் மீதான பரிசீலனைகளில் இருந்து விலகுவதாக திறந்த நீதிமன்றில் நீதியரசர் ஜனக் டி சில்வா அறிவித்தார்.

இந்நிலையில், இந்த இரு மனுக்கள் தொடர்பிலும் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளவர்களிடம் இருந்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள கால அவகாசம் வேண்டும் என சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேரா குறிப்பிட்டார்.

அதனை அனுமதித்த உயர் நீதிமன்றம் குறித்த இரு மனுக்கள் தொடர்பிலும் ஏதும் ஆட்சேபனைகள் இருப்பின் அவற்றை எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி அல்லது அதற்கு முன்னர் நீதிமன்றில் சமர்ப்பிக்க சிரேஷ்ட அரச சட்டவாதிக்கு அறிவித்தது.

அவ்வாறு ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டால் அவை தொடர்பில் பதில் வாதங்களை முன் வைக்க மனுதாரர் தரப்புக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.

இவ்வாறான நிலையிலேயே மனுக்கள் மீதான விசாரணைகளில் இருந்து விலகுவதக நீதியரசர் ஜனக் டி சில்வா அறிவித்த நிலையில், குறித்த மனுக்களை அவசர நிலை மனுக்களாக கருதி நீதியரசர் ஜனக் டி சில்வா இல்லாத நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எதிர்வரும் ஜூன் 4 ஆம் திகதி மீள பரிசீலனைக்கு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Web Design by Srilanka Muslims Web Team