ரோலர் இயந்திரத்தில் சிக்கி 9 வயது மாணவன் உயிரிழப்பு;ஆனந்த கல்லூரியில் நடந்த சோக சம்பவத்தின் முழுவிபரம் - Sri Lanka Muslim

ரோலர் இயந்திரத்தில் சிக்கி 9 வயது மாணவன் உயிரிழப்பு;ஆனந்த கல்லூரியில் நடந்த சோக சம்பவத்தின் முழுவிபரம்

Contributors

கையால் தள்ளி நிலத்தை மட்டப்படுத்தும் ‘ரோலர்’ இயந்திரத்திற்கும் மதிலுக்கும் இடையில் சிக்குண்டு பாடசாலை மாணவன் ஒருவன் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளான்.

மருதானையில் அமைந்துள்ள கொழும்பு ஆனந்தா கல்லூரி மைதானத்தில் நேற்றுக் காலை 7.30 மணியளவில் இந்தப் பரிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எதிர்பாராத விதத்தில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் மேற்படி கல்லூரியில் தரம் நான்கில் கல்வி கற்கும் மாலபே பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதுடைய செனித் விஜேசிங்க என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது : கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கு உள்ளே உள்ள மைதானத்தில் நேற்றுக் காலை மாணவர்கள் விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர். இதன்போது மைதானத்தின் ஒரு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கையால் தள்ளி நிலத்தை மட்டப்படுத்தும் ரோலர் இயந்திரத்தை மாணவர்கள் தள்ளியும், உருட்டியும் விளையாடியுள்ளனர்.

மாணவர்கள் உருட்டி விளையாடிக் கொண்டிருந்த ரோலரை திடீரென விட்டு விட்டு சென்றுள்ளனர். எனினும் அந்த ரோலர் இயந்திரம் உருண்டு சென்று மேற்படி சிறுவனின் மீது மோதியுள்ளது. இதன் போதே ரோலர் இயந்திரத்திற்கும் மைதானத்துடன் உள்ள சுவருக்கும் இடையில் சிறுவன் சிக்கி இறுகியுள்ளான்.

இந்தச் சம்பவம் கல்லூரி மைதானத்தில் பெரும் பரபரப்பையும், பதற்ற நிலைமையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தையடுத்து மைதானத்திற்கு விரைந்து மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து உடனடியாக மாணவனை கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள சிறுவர் வைத்தியசாலையான லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் அவசர மற்றும் விபத்துக்கள் சேவைகள் பிரிவுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். எனினும் சிறுவன் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலை பணிப்பாளர்

கொழும்பு ஆனந்த கல்லூரியைச் சேர்ந்த 9 வயதுடைய மாணவன் ரோலர் இயந்திரத்திற்கும் மதிலுக்கும் இடையில் சிக்கி விபத்துக்குள்ளான நிலையில் நேற்றுக் காலை 7.50 அளவில் விபத்துக்கள் மற்றும் அவசர சேவைகள் பிரிவுக்கு அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலைக்குக் கொண்டுவரும் போதே சிறுவன் மூச்சையற்ற நிலையில் இருந்த போதும் மீண்டும் சுவாசத்தை ஏற்படுத்த வைத்தியர்கள் ஒட்சிசன் மற்றும் செயற்கை சுவாசத்தை ஏற்படுத்த போராடிய போதிலும் அவை பலனளிக்கவில்லை என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ரத்னசிறி ஏ. ஹேவகே தினகரனுக்குத் தெரிவித்தார்.

சிறுவனின் நாடித் துடிப்பை மீண்டும் பெறவும், சிறுவனின் உயிரை பாதுகாக்கவும் சுமார் 20 நிமிடங்கள் முயற்சித்த போதிலும் எந்த முயற்சிகளும் பலனளிக்காத நிலையில், காலை 8.10 மணியளவில் உயிரிழந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

சிறுவனின் உடலில் வெளிக் காயங்கள் பாரிய அளவில் எதுவும் காணப்படவில்லை என்று தெரிவித்த அவர், இது மூச்சுத் திணறலா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பதை உடனடியாக கூறமுடியாது, எனவே பிரேத பரிசோதனைக்குப் பின்னரே எதனையும் உறுதிப்படுத்த முடியும் என்றார்.

கல்வி அமைச்சர் பார்வையிட்டார்

இந்தச் சம்பவம்பற்றி கேள்வியுற்ற கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன உடனடியாக ஸ்தலத்திற்கும், லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கும் உடனடியாக வருகை தந்து சிறுவனின் சடலத்தை பார்வையிட்டதுடன் பெற்றோர், அதிபர் மற்றும் வைத்தியர்களுடனும் விசாரித்தார்.

சிறுவனை பாதுகாக்க தாங்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளை அமைச்சரிடம் டொக்டர்கள் விபரித்துள்ளனர். இதேநேரம், சிறுவனின் பெற்றோர்களுக்கும் அமைச்சர் ஆறுதல் கூறினார்.

சிறுவனின் தாய்

இந்தச் சம்பவத்தை அடுத்து உடனடியாக விரைந்து வந்த சிறுவனின் பெற்றோர்கள் சிறுவனின் உடலை வைத்தியசாலையில் பார்வையிட்டனர்.

மரணச் செய்தி கேட்ட சிறுவனின் தாய் அதிர்ச்சியினால் மனநிலை பாதிக்கப்பட்டு காணப்பட்டதுடன் தனக்கு அருகில் வருபவர்களை விரட்டியும், தனது கணவனுக்கு அடித்தும் தனது பிள்ளை எங்கே? என்ன நடந்தது என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

பாடசாலை

கல்லூரியில் நடைபெற்ற சம்பவத்தை அடுத்தும் அதிபர், பாடசாலை நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களும் வைத்தியசாலைக்கு வந்து சடலத்தை பார்வையிட்டதுடன் தமது வாக்குமூலங்களையும் வழங்கினர்.

இந்த சம்பவத்தை அடுத்து ஊடகவியலாளர்கள் பாடசாலைக்கு செல்ல முற்பட்ட போதிலும் அனுமதிக்கப்படவில்லை.

இதேநேரம் நேற்று ஆனந்த கல்லூரியில் நடைபெறவிருந்த பெற்றோர் கூட்டமும் அவசரமாக நிறுத்தப்பட்டதாக அங்கு வருகை தந்த பெற்றோர்களிடம் பாடசாலை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் சம்பவத்தை நேரில் கண்ட மாணவர்களின் வாக்கு மூலங்களை பொலிஸார் பதிந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.(tk)

Web Design by Srilanka Muslims Web Team