றிசாட் பதியுதீனின் கைது ஜனநாயகத்திற்கு மாற்றமானது – நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர்..! - Sri Lanka Muslim

றிசாட் பதியுதீனின் கைது ஜனநாயகத்திற்கு மாற்றமானது – நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர்..!

Contributors

ஜனநாயக நடைமுறைக்கு மாற்றமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனின் கைது செய்யப்பட்டுள்ளமை விசனத்திற்குரியதாகும்.

இவ்வாறு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய பிரதி அமைப்பாளருமான எம்.ஏ.எம்.தாஹீர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுதீனின் கைது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பயங்கரவாத தடை சட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தங்களின் அரசியல் நோக்கத்திற்காகவே தலைவர் றிசாட் பதியுதீனை கைது செய்திருக்கின்றனர் என்பது தெளிவாகின்றது.
நீதிமன்றத்தின் அனுமதியோ, சபாநாயகரின் அனுமதியோ இல்லாது மேற்கொள்ளப்பட்ட இந்தக் கைது நடவடிக்கை மூலமாக அரசாங்கம் தமக்கு எதிராக மேலெழுந்துள்ள நம்பிக்கையீனத்தை மறைக்க முயற்சிப்பாகவே இருக்கின்றது. மக்களின் கவனத்தை இக்கைது மீது திசைதிருப்பவே நினைக்கின்றனர்.

முஸ்லிம்கள் நோன்பு நோற்று, வணக்கவழிபாடுகளில் ஈடுபடுகின்ற இப்புனித ரமழான் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இக்கைது முஸ்லிம்களின் மனங்களை வேதனை கொள்ளச் செய்துள்ளது.
பாதுகாப்பு தரப்பினரின் அனைத்து விசாரணைகளுக்கும் தலைவர் றிசாட் பதியுதீன் தொடர்ச்சியாக ஒத்தழைப்புக்களை வழங்கிக் கொண்டு வந்துள்ளார். அத்தகையதொரு நிலையில் நடுநிசியில் கைது செய்வதற்குரிய நடைமுறைகளைப் பின்பற்றாது மேற்கொள்ளப்பட்ட இக்கைது மூலமாக பெரும்பான்மை மக்களிடையே அரசாங்கத்தை பற்றி எழுந்துள்ள சந்தேகங்களை மறைப்பதற்கும், இனவாதிகளை திருப்திப்படுத்துவதற்கானதொரு செயற்பாடாகவுவே இது அமைந்துள்ளது.

பெரும்பான்மையினரை மாத்திரம் திருப்திபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள அரசாங்கத்தினால் பெரும்பான்மையினரை திருப்திபடுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்தான் அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிகின்றது.
முஸ்லிம் தலைவர்களை கைது செய்து தமது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் நீதிக்கு மாற்றமாக இருப்பதனால், அநீதியான இந்தச் செயற்பாடு நிச்சயமாக ஆட்சியாளர் எதிர்பார்க்கும் விளைவுகளை கொடுக்காது.

ஆகவே, தலைவர் றிசாட் பதியுதீனை கைது செய்திருப்பது தொடர்பில் முஸ்லிம்கள் இப்புனித மாதத்தில் பிராத்தனைகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கின்றோம். தமது கவலைகளை அல்லாஹ்விடத்தில் ஒப்படைக்கும் போது, இப்புனித ரமழான் மாதத்தில்; நிச்சயமாக அதற்குரிய நல்ல பலனை அல்லாஹ் வழங்குவான் என்பதில் சந்தேகமில்லை.

Web Design by Srilanka Muslims Web Team