லாஸ் வெகாஸ் தாக்குதலுடன் இஸ்லாமியர்களை முடிச்சுப்போட நினைத்த டொனால்ட் ட்ரம். » Sri Lanka Muslim

லாஸ் வெகாஸ் தாக்குதலுடன் இஸ்லாமியர்களை முடிச்சுப்போட நினைத்த டொனால்ட் ட்ரம்.

trump

Contributors
author image

A.S.M. Javid

வல்லரசு என்ற அகங்காரத்தில் உலக நாடுகளை அடிபணிய வைத்து வரும் அமெரிக்கா உலகில் நடைபெறும் தாக்குதல்களை எல்லாம் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் என்று கூறிக் கொண்டு முஸ்லிம் சமுகம் மீது பழி சுமத்தி பயங்கரவாத முத்திரையை குத்தி முழு இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் பிரச்சாரம் செய்து வருகின்றது. இவ்வாறு பொய்ப் பிரச்சாரம் செய்து உலக நாடுகளை தம்வசப்படுத்தி இஸ்லாமிய நாடுகளை அழித்து வருகின்ற அத்து மீறல்களையே இன்று வரை செய்து வருகின்றது. அமெரிக்காவும் அதன் ஏகாதிபத்திய நாடுகளும் ஒன்றினைந்து உலக முஸ்லிம்களுக்கு எதிராக தொடராகவே இந்த மாபெரும் தவறுகளை புரிந்து கொண்டு அதற்கு எதிராகவும் செய்து போர் தொடுத்து வருகின்றன.

இந்தச் செயற்பாடுகள் மூலம் வளர்ச்சியடைந்த இஸ்லாமிய நாடுகளின் பொருளாதாரத்தை முடக்கி அந்த நாடுகளை தலை நிமிர விடாது செய்து வருவதுடன் பெற்றோலிய உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இஸ்லாமிய நாடுகளின் எண்ணை வளங்களை சூறையாடுதல், அந்த நாடுகளில் தமது இராணுவ பலத்தை நிலை நிறுத்தி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல் தமக்கு எதிரான நாடுகளுக்கு பொருளாதார தடைகளை விதித்தல் போன்ற கபடத்தனமான செயற்பாடுகளில் அமெரிக்க முன்னின்று செயற்பட்டு வருகின்றது.

இந்தக் கபடதத்னமான செயற்பாடுகளுக்கு உடந்தையாக அமெரிக்காவின் அடியாற்களாக அவர்களளின் கட்டுப்பாட்டுக்குள் அவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் நாடகமாடும் சவுதி அரேபியா, துபாய், ஐக்கிய இராட்சியம் உள்ளிட்ட ஒருசில இஸ்லாமிய நாடுகள் இருந்து வருகின்றமை முழு முஸ்லிம் சமுகத்திற்கும், இஸ்லாத்திற்கும் அவர்கள் செய்து வரும் மாபெரும் துரோகத்தனமான செயற்பாடுகளாகவே அமைந்துள்ளது.

உலகில் எந்தவொரு மூளை முடுக்குகளிலும் யாராவது பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு விட்டால் அல்லது தாக்குதல்களை மேற்கொண்டு விட்டால் அதனை சரியான முறையில் கண்டறியாது எடுத்த எடுப்பில் இஸ்லாமியப் பயங்கரவாதம் என்று கூறி ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள் மீது பழியைப் போட்டு அதற்குப் பழி வாங்கும் வகையில் செயற்பாடுகளில் ஈடுபடுவதும் அமெரிக்காவின் நடவடிக்கைகளாக இருக்கின்றன. இந்த விடயங்களை சாட்டாக வைத்துக் கொண்டு இஸ்லாமிய நாடுகளில் அப்பாவி மக்கள் மீது குண்டுகளைப் போட்டு தாக்குதல்களை மேற்கொண்டு அவர்களைக் கொன்று குவித்து வரும் அடாவடித்தனங்களையே அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் செய்து வருகின்றன.

கடந்த முதலாம் திகதி அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் எனும் இடத்தில் இடம் பெற்ற இரவு கேலிக்கை நிகழ்வில் ஒரு நபர் திடீரென யாரும் எதிர்பாராத வகையில் அந்த நபரைக்கூட கண்டு கொள்ளாத வகையில் ஒரு உல்லாசக் ஹோட்டல் ஒன்றிற்குள் மறைந்திருந்து குறித்த நபரால் பாரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலால் சுமார் 59க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 580க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன.

குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்ற சற்று நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம் தனது வழமையான பாணியில் இது ஒரு இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற வாசகத்தை தனது டூவிட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார். ஒரு விடயத்தை சரியான முறையில் அறிந்து கொள்ளாது சிறுபிள்ளைத் தனமாக செய்தி வெளியிட்டு இன்று ஆப்பிழுத்த குரங்கின் கதையாக மூக்குடைபட்டு இருப்பதே வேடிக்கையான விடயமாகும்.

குறித்த துப்பாக்கிச் சூட்டின் சூத்திரதாரியை அந்த நாட்டின் பாதுகாப்புத் துறையினரால் ஒருவாறு இனங்காணப்பட்டு அவரை சுட்டுக் கொன்ற பின்னர் அந்த நபர் தனது நாட்டுப் பிரஜையான 64 வயதுடைய ஸ்டீபன் பட்டோக் என்ற கிறிஸ்தவர்தான்; செய்துள்ளமை உறுதிப்படுத்தப் பட்டுள்ளதால் அந்த நாட்டின் இனவாத ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் நிலை குலம்பிப்போனார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறு தனது நாட்டுப்பிரஜை என்றவுடன் முஸ்லிம்களை குறித்த செயலுடன் முடிச்சுப்போட நினைத்த ட்ரம் தனது மானத்தைக் காப்பாற்ற குறித்த அந்த செயல் ஒரு தனிநபரின் செயல் என்ற வகையில் அவர் ஒரு மனநேயாளியானவர் என்ற கருத்தை வெளியிட்டுள்ளதுடன் முன்னைய கருத்தை மறுக்காத நிலையும் காணப்படுகின்றது. இதேவேளை குறித்த அமெரிக்கப் பிரஜையை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் அவரை ஏதோ ஒருவகையில் கோர்த்து இந்தத் தாக்குதல்களை இஸ்லாமியப் பயங்கரவாதம் என்று கூறுவதற்கான கபடத்தனமான செயற்பாடுகளும் இடம் பெறுவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

குறித்த தாக்குதல் தாரி ஒரு மனநோயாளி என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் மன நோயாளி என்பவர் குறித்த இடத்தில் கத்தியாலோ அல்லது ஒரு துப்பாக்கியாலோ தாக்குதல் நடத்த முடியும் அவரால் திட்டமிட முடியாது. ஆனால் இந்த நபர் மிகவும் நுணுக்கமான முறையில் நன்கு திட்டமிட்டு பல நவீன ஆயுதங்களுடன் ஒரு உல்லாசக் ஹோட்டலில் இருந்து செய்துள்ளார். இவ்வாறு நன்கு திட்டமிட்டு இடம் பெற்ற மேற்படி துப்பாக்கிக் தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதியும் அந்த அரசின் பாதுகாப்புத் தரப்பினரும் அவர் ஒரு மனநோயாளி என்று கூறியிருப்பது வேடிக்கையான விடயம் மட்டுமல்லாது மற்றவர்களை மடயர்களாகவும், முட்டாள்களாகவும் ஆக்கும் செயற்பாடுகளாகவே அமைந்துள்ளது.

ஒரு மனநோயாளி மிகவும் நுணுக்கமான முறையில் எவருக்கும் சந்தேகம் வராத வகையில் இந்தச் செயலை செய்ய முடியும். நாம் உலகில் உள்ள மனநோயாளிகளை காண்கின்றோம் அவர்கள் ஏதோ ஒரு வகையில் அவர்களின் நடவடிக்கைகளில் அல்லது செயற்பாடுகளில் இருந்து அவர்களை மனநோயாளி என்று அடையாளம் கண்டு கொள்ளலாம். ஆனால் இந்த துப்பாக்கிதாரி எந்தவித சந்தேகமும் இல்லது இருந்துள்ளமை வெளிப்படையாகவே குறித்த நபர் நல்ல சுத்த சுவாதீனமானவர் என்பது தெரிகின்றது.

அத்துடன் குறித்த நபர் மிகவும் வசதி படைத்த ஒரு தனவந்தர் என்ற செய்தியும் வெளிவந்துள்ள நிலையில் குறித்த நபரின் செயற்பாடுகளை ஒரு மனநோயாளி என்ற போர்வையில் திசை திருப்ப முனையும் அமெரிக்கா தனது இயலாமையை மறைக்க முனையும் செயற்பாடுகள் என்றே கூறலாம். அத்துடன் தற்போதைய ஜனாதிபதியின் செயற்பாடுகள் பல அமெரிக்கர்களை ஆத்திரமடையச் செய்து வருவதால் இந்தச் செயலை அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக மேற்கொண்ட செயலாகவும் இருக்கலாம் என்ற கோணத்தில் சிந்திக்கவும் வைத்துள்ளது.

இவ்வாறான நிலையில் உலக முஸ்லிம்களை அழிக்கத் துடிக்கும் அமெரிக்காவின் கைப்பொம்மைகளாக இருந்து இஸ்லாத்தை கொச்சைப்படுத்தும் இஸ்லாமிய நாடுகள் இனியாவது கபடத்தனமான நாடுகளின் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட வேண்டும். இல்லா விட்டால் இவர்களின் ஈனச் செயல்கள் முஸ்லிம் சமுகத்தின் நிரந்தரமான அழிவிற்கே வித்திடும் என்பதில் ஐயமில்லை.

இஸ்லாமிய நாடுகளை தமக்கு அடிபணிய வைத்தல் அமெரிக்காவின் மிக மோசமான செயற்பாடுகளில் இதுவும் ஒன்றாக பேசப்டுகின்றது. ஏனைய இஸ்லாமிய நாடுகளில் பயங்கரவாதத்தை அழிக்கின்றோம் என்று அப்பாவி மக்கள் மீது குண்டுகளைப் போட்டும், துப்பாக்கிகளால் சுட்டும் பல்லாயிரக்கணக்கான மக்களை அமெரிக்கா கொன்றுள்ளது. அமெரிக்காவின் இந்த மனிதப் படுகொலைகளை ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களோ அல்லது மனித உரிமைகள் பற்றிப் பேசும் வேறு சமுக அமைப்புக்களோ கண்டு கொள்வதில்லை அந்த அமைப்புக்கள் மாற்றான்தாய் மனப்பான்மையில் இருக்கின்றனவே தவிர எந்தவித கண்டனங்களையோ அல்லது அறிக்கைகளையோ விடுவதில்லை என்பது உலக வாழ் முஸ்லிம் சமுகத்தின் பாரிய கவலையான விடயங்களாகும்.

குண்டுகளாலும், துப்பாக்கிகளாலும் ஏற்படும் மரணங்களின் வேதனைகளை அமெரிக்கர்களும் சுவைக்க வேண்டும் என்ற இறைவனின் தண்டனையாகக்கூட இது இருக்கலாம் என மார்க்க அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்பதற்கு ஒப்ப அமெரிக்கா மற்றொரு நாட்டு அப்பாவி மக்கள் மீது மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களுக்கு இது ஒரு படிப்பினையாக அமைந்துள்ளதையே காட்டி நிற்கின்றது எனலாம்.

எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதல்களையும் இஸ்லாம் விரும்பவில்லை. அல்குர்ஆனும் மிகவும் வெளிப்படையாக பயங்கரவாதத் தாக்குதல்களை கண்டித்துள்ளதுடன் அதனைச் செய்ய வேண்டாம் என்றே கூறுகின்றது. யாராக இருந்தாலும் அநியாயமான முறையில் கொல்லப்படுவதை இஸ்லாம் முற்றாக வெறுக்கின்றது. இந்த வகையில் லாஸ் வெகாஸ் தாக்குதல்களையும் இஸ்லாமியர்கள் முற்றாக வெறுக்கின்றனர். அந்த கொடூரமான செயல்கள் விடயத்தில் தமது கடுமையான கண்டனங்களையும் தெரிவிப்பதுடன் மரணமானவர்கள் விடயத்திலும் அதீத கவலையும் கொண்டுள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரின் அட்டூழியங்களை இஸ்லாமியர்கள் எவரும் ஏற்றுக் கொள்வதில்லை. அந்த அமைப்பு ஓர் இஸ்லாமிய அமைப்பும் அல்ல ஆனால் அவர்கள் ஒருசில ஏகாதி பத்திய நாடுகளின் செல்லப்பிள்ளைகளாக வளர்க்கப்பட்டு வருகின்றனர். இதற்குக் காரணம் முழு முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் அழிக்கவே ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற அமைப்பை உருவாக்கி ஒரு கபட நாடகத்தை வல்லரசுகள் மறைமுகமாக நடாத்தி வரகின்றன என்பதே உண்மையாகும்.

இதுவரை காலமும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துருக்கி, எகிப்து, ஈராக் போன்ற நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு கொன்று குவித்தது எல்லாம் முஸ்லிம்களையே இந்த வகையில் இந்த அமைப்பு இஸ்லாமிய அமைப்பாக இருந்தால் ஏன் சகோதர முஸ்லிம்களை கொன்று குவிக்க வேண்டும் என்ற விடயத்தில் சந்தேகங்கள் ஏழுகின்றனவல்லவா?. எனவே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொய்யான வகையில் கலிமாக்களைச் சொல்லியும் அல்குர்ஆன் வசனங்களைக் காட்டியும் மக்களை அழித்துவரும் இஸ்லாமிய எதிர்ப்புவாத அமைப்பாகவே இருந்து வருகின்றது.

உலக முஸ்லிம்களை ஏகாதிபத்திய மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு வல்லரசு நாடுகளில் இருந்து காப்பாற்ற வேண்டுமானால் வல்லரசுகளுக்கும் முஸ்லிம்களை அழிக்கத் துடிக்கும் நாடுகளுக்கும் உடந்தையாக இருந்து துணைபோகும் இஸ்லாமிய நாடுகள் தமது துரோகத்தனமான கைகோர்ப்புக்களில் இருந்து உடநடியாக விடுபட்டு ஒன்றுசேர வேண்டும். தமது அரசியல் இருக்கைகளை தக்க வைத்துக் கொள்வதற்கும், ஆட்சி அதிகாரங்களில் இருப்பதற்குமாக வல்லரசுகளுக்கும், ஏகாதிபத்திய நாடுகளுக்கும் தொடர்ந்தும் ஆதரவுகளை வழங்கினால் அது இஸ்லாத்தின் அழிவிற்கான வழியாகும் எனலாம்.

அமெரிக்கா இன்று முஸ்லிம்களை தமது நாட்டுக்குள் எடுப்பதை தடுத்துள்ளது. காரணம் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்ற கோணத்திலேயே இவ்வாறு தடைகளைப் போட்டு பயங்கரவாத தாக்குதல்களை தடையின்றிச் செய்வதற்கான நாடகமாக இந்த தடைகளைப் போட்டு காய் நகர்த்துகின்றது. இதன் மூலம் இஸ்லாமியப் பொருளாதாரத்தை முடக்கி தமது செல்வாக்கை நிலை நிறுத்துவதற்கு அது ஒருசில அரபு நாடுகளை கைப்பொம்மைகளாக வைத்துள்ளமை முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் வேதனையளிக்கும் விடயமாகவுள்ளது.

இந்த நவீன யுகத்தில் ஒட்டு மொத்தத்தில் உலகில் இஸ்லாமிய எதிர்ப்பு வாதங்களே அதிகரித்துக் கொண்டு செல்கின்றன. இந்த நிலைமை இன்னும் சில காலங்களில் மிக மோசமாக இடம் பெறலாம். இவற்றைத் தடுக்க வேண்டுமானால் இஸ்லாமிய நாடுகளின் ஒன்றுமையும், கைகோர்ப்புமே இன்றியமையாததாக காணப்படுகின்றது. சுமார் 54க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் இருந்தும் முஸ்லிம் சமுகம் உலகில் வல்லரசுகளின் ஆக்கரமிப்புக்களுக்கு அடிமையான ஒடுக்கப்பட்ட சமுகங்களாகவே காணப்படுகின்றனர்.

பண பலமும், ஆற்பலமும் இஸ்லாமிய நாடுகளில் இருப்பதுடன் உலக அரசாங்கங்களின் கட்டுப்பாடுகளை தகர்த்து எறியக்கூடிய சகல வசதிகளும் இருந்தும் இஸ்லாமிய நாடுகளுக்குள் ஒற்றுமையற்ற தன்மைளும், முறண்பாடுகளும் இருப்பது உலக இஸ்லாமியர்களுக்கு ஆபத்தான சம்பவங்கள்; என்றே கூறலாம்.
எனவே இஸ்லாமிய நாடுகள் தத்தமக்குள் உள்ள கசப்புணர்வுகளையும், முரண்பாடுகளையும் களைந்து விட்டு உலக முஸ்லிம்களுக்கு எதிராக வல்லரசுகள் மேற்கொண்டு வரும் பொய்ப்பிரச்சாரங்கள், தாக்குதல்களுக்கு ஈடு கொடுத்து இஸ்லாத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் அணைத்த இஸ்லாமிய நாடுகளுக்கும் இருப்பதால் இத்தருணத்தில் இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமை என்பது காலத்தின் தேவையாகும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Web Design by The Design Lanka