லெபனான் இராணுவத்திற்கு சவூதி 3 பில்லியன் டொலர் உதவி - Sri Lanka Muslim

லெபனான் இராணுவத்திற்கு சவூதி 3 பில்லியன் டொலர் உதவி

Contributors

லெபனான் இராணுவத்திற்கு சவூதி அரேபியா 3 பில்லியன் டொலர்களை நிதி உதவியாக வழங்க முன்வந்துள்ளது.

கார்குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட லெபனான் சிரேஷ்ட அரசியல்வாதியின் இறுதிக் கிரியைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதி மிசல் ஸ்லைமன் தொலைக்காட்சி ஊடே இந்த அறிவிப்பை விடுத்தார். இந்த உதவி தீவிரவாதத்திற்கு எதிரான போருக்கு உதவும் என அவர் குறிப்பிட்டார்.

சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் மற்றும் லெபனானின் ஷியா ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக கடும் விமர்சனங்களை வெளியிட்டு வந்த சுன்னி முஸ்லிமான மொஹமத் சத்தாஹ் என்பவரே கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

சிரிய உள்நாட்டு யுத்தத்தில் சவூதி அரேபியாவும் ஹிஸ்புல்லாஹ்வும் எதிர் எதிர் பக்கங்களை எடுத்துள்ளன.

“எமது சகோதர இராச்சியமான சவூதி அரேபியாவின் மன்னர் வழங்கிய 3 பில்லியன் டொலர் தாராள உதவிக்கு நன்றி கூறுகிறோம். இந்த உதவி லெபனான் இராணுவத்தை பலப்படுத்தும்” என்று ஜனாதிபதி ஸ்லைமன் குறிப்பிட்டார்.

லெபனான் வரலாற்றில் கிடைக்கப்பெற்ற மிகப் பெரிய உதவி இதுவென்று குறிப்பிட்ட அவர், இந்த நிதியுதவியை பயன்படுத்தி பிரான்சிலிருந்து ஆயுதங்கள் கொள்முதல் செய்யப் போவதாகவும் கூறினார்.

பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலன்டே மத்திய கிழக்கு பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் இரு நாட்டு பொருளாதார உறவை பலப்படுத்தும் முயற்சியாகவும் சவூதி அரேபியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லெபனானுக்கு வலுவான இராணுவம் ஒன்று அவசியம் என்ற போதும், அது நாட்டில் அரசியல் மற்றும் சித்தாந்த ரீதியில் பதற்றத்தை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லாஹ் அந்நாட்டு இராணுவத்தை விடவும் சிறந்த ஆயுதங்களுடன் வலுவாக உள்ளது. அது அயல்நாடான சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தில் அசாத் அரசுக்கு ஆதரவாக செயற்படுகிறது.

இந்நிலையில் சிரிய அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் சவூதி அரேபியா ஹிஸ்புல்லாஹ் அல்லது ஈரான் அல்லது சிரியாவை பலவீனப்படுத்த தனது பாணியில் நிதியுதவி மூலம் லெபனான் இராணுவத்தை வலுப்படுத்த முயற்சிப்பதாக லெபனானின் டெய்லி ஸ்டார் பத்திரிகையின் ஆய்வாளர் ரமிகூரி விபரித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team