வடகொரியா விவகாரத்தில் இப்போது ஒரு விஷயம் மட்டுமே பயனளிக்கும் » Sri Lanka Muslim

வடகொரியா விவகாரத்தில் இப்போது ஒரு விஷயம் மட்டுமே பயனளிக்கும்

trump

Contributors
author image

Editorial Team

வடகொரியா விவகாரத்தில் இப்போது ஒரு விஷயம் மட்டுமே பயனளிக்கும் என டொனால்டு டிரம்ப் ஆவேசமாக கூறிஉள்ளார்.

கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர் பதற்றத்தை அதிகரித்து வரும் வடகொரியா தனது ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுத சோதனைகளை கைவிட மறுத்து வருகிறது. கடந்த 3-ந் தேதி கூட 6-வது முறையாக அணு ஆயுத சோதனையை அந்த நாடு மேற்கொண்டது. வடகொரியா மேற்கொண்ட சோதனைகளிலேயே இதுதான் மிகப்பெரிய சோதனையாகவும் கருதப்படுகிறது.

வடகொரியாவின் இந்த அடாவடித்தனத்தால் மிகுந்த கோபம் அடைந்துள்ள அமெரிக்கா, வடகொரியாவுக்கு போர் மிரட்டல் விடுத்தது. இதனையடுத்து இருநாடுகள் இடையே கடும் வார்த்தை போர் ஏற்பட்டது. வடகொரியாவின் மீதான பிடியை எப்படியெல்லாம் இறுக்குவது என்பதில் அமெரிக்கா முன்நோக்கி நகர்கிறது.

இருப்பினும் வடகொரியா தன்னுடைய நிலையில் இருந்து மாற்றம் என்பது கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை என்ற நிலைபாடும் தொடங்கமே இல்லாமல் நீடிக்கிறது. வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை என்பது பலனளிக்காது, நேரத்தை வீண் செய்வது என டொனால்டு டிரம்ப் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார்.

இப்போது வடகொரியா விவகாரத்தில் இப்போது ஒரு விஷயம் மட்டுமே பயனளிக்கும் என டொனால்டு டிரம்ப் ஆவேசமாக கூறிஉள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள தகவலில், ”வடகொரியாவுடன், அதிபர்களும் அவர்களது நிர்வாகங்களும் 25 ஆண்டுகளாக வடகொரியாவுடன் பேசிதான் வருகிறார்கள், ஒப்பந்தங்களும் செய்யப்பட்டு உள்ளது, பெரிய தொகைகள் அளிக்கப்பட்டு உள்ளது.

இவையெல்லம் ஒன்றும் வேலைக்கே ஆகவில்லை, ஒப்பந்தங்கள் அதன் மை காயும் முன்பே மீறப்படுகின்றது. அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்களை முட்டாளாக்குகின்றனர். எனவே மன்னிக்கவும், வடகொரியாவுக்கு எதிராக ஒரேயொரு விஷயம்தான் சரிப்பட்டு வரும்,” என குறிப்பிட்டு உள்ளார். ஆனால் ‘ஒன்றேயொன்று’ என்னவென்று டொனால்டு டிரம்ப் தெளிவுபடுத்தவில்லை

இதற்கிடையே வடகொரியாவிற்கு எதிராக ‘பயனளிக்கும் ஒரே விஷயம்’ ராணுவ நடவடிக்கைதான் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

Web Design by The Design Lanka