வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார் ஜனாதிபதி..யாழ்.புகையிரத நிலையம் மற்றும் ஆய்வுகூடங்கள் திறந்து வைக்கிறார் - Sri Lanka Muslim

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார் ஜனாதிபதி..யாழ்.புகையிரத நிலையம் மற்றும் ஆய்வுகூடங்கள் திறந்து வைக்கிறார்

Contributors
author image

Farook Sihan - Journalist

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் அடுத்த மாதம் மூன்று நாட்கள் வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அதன் முன்னேற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது.

 

யாழ்.மாவட்ட செயலகத்தின் அரச அதிபர் காரியாலயத்தில் மேற்படி கலந்துரையாடல் இன்றைய தினம் (26) இடம்பெற்றுள்ளது.
அடுத்த மாதம் 12 ஆம் திகதி வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அவர்கள் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

 

இதனடிப்படையில் ஜனாதிபதி பங்குகொள்ளவுள்ள நிகழ்வுகள்.

 

** 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை– கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டக்கச்சி மகாவித்தியாலயம், கிளிநொச்சி இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை திறந்து வைக்கவுள்ள அதேவேளை, மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாவட்ட செயலகக் கட்டிடத்தையும் திறந்து வைக்கவுள்ளார்.

 

**13 திங்கட் கிழமை — பளையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ள ஜனாதிபதி அவர்கள் கொடிகாமம், நாவற்குழி பகுதிகளில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புகையிரத நிலையங்களை திறந்து வைக்கும் அதேவேளை, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரதான புகையிரத நிலையத்தையும் திறந்து வைக்கவுள்ளார்.

 

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஜனாதிபதி அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள மாவட்ட விசேட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் பங்கேற்கும் அதேவேளை, துரையப்பா விளையாட்டரங்கில் அரச உத்தியோகத்தர்களுக்கு 2 ஆயிரம் மோட்டார் சைக்கிள்களையும் வழங்கி வைக்கவுள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணம் இந்துமகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஆகியவற்றில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடங்களையும் திறந்து வைக்கவுள்ளார்.
**14 செவ்வாய்கிழமை– நயினாதீவிற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அவர்கள் நயினாதீவு நாகபூசனி அம்மன் கோவிலுக்கும், நாகதீபம் விகாரைக்கும் சென்று விசேட வழிபாடுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

 

தொடர்ந்து நெடுந்தீவிற்கு செல்லும் ஜனாதிபதி அவர்கள் அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதேச செயலக கட்டிடத்தையும் திறந்து வைக்கவுள்ளார்.
இதேபோன்று நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தையும் திறந்து வைக்கவுள்ளார்.

 

இதேதினம் வேலணை பகுதிக்குச் செல்லும் ஜனாதிபதி அவர்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதேச செயலக கட்டிடத்தை திறந்து வைப்பதுடன் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி, காரைநகர் தியாகராசா மத்திய மகாவித்தியாலயம், வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி ஆகியவற்றில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடங்களையும் திறந்து வைக்கவுள்ளார்.

 

இதில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களது வடபகுதிக்கான பயணம் வெற்றிகரமாக அமையப் பெறுதல் வேண்டும்.
ஜனாதிபதியின் இப்பயணம் எமது மக்களுக்கு பெரும் நன்மைகளை பெற்றுக் கொள்ளும் ஒரு நல்ல தருணமாக அமையப் பெற்றுள்ளதால் அனைவரும் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

 

இதன்போது வடமாகாண ஆளுநர் சந்திரிசிறி, வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சத்தியசீலன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் படைத்துறை அதிகாரிகள் அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team