வடக்கில் 04 உள்ளூராட்சி மன்றங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியிருப்பது மக்கள் விருப்புக்கு மாறானது - அ.அஸ்மின் » Sri Lanka Muslim

வடக்கில் 04 உள்ளூராட்சி மன்றங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியிருப்பது மக்கள் விருப்புக்கு மாறானது – அ.அஸ்மின்

asmi

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

 என்.எம்.அப்துல்லாஹ்


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வடக்கில் பெற்றுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் வெற்றி குறித்து கருத்துவெளியிடும்போது வடக்கு மாகாணசபை உறுப்பினர் . அய்யூப் அஸ்மின்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்கள், அவர் மேலும் தெரிவிக்கையில்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு தேசியக் கட்சியாக, அல்லது ஒரு பிராந்தியக் கட்சியாக, அல்லது ஒரு இனத்தின் கட்சியாக அடையாளம் பெறுவதை விடவும் அது அமைச்சர் றிசாத் பதியுத்தீன் அவர்களுடைய கட்சி என்றே மக்களால் அறியப்பட்டிருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸிலிருந்து அமைச்சர் றிசாத் பதியுத்தீன் வெளியேறியதைத் தொடர்ந்து தனது அரசியல் இருப்புக்காக வடிவமைக்கப்பட்ட கட்சியாகவே அதனை மக்கள் பார்க்கின்றார்கள்,

இருந்தபோதிலும் அதனை முஸ்லிம் மக்களின் கட்சியாக நிலைநிறுத்துவதில் அமைச்சரின் ஆதரவாளர்கள் அதீத பிரயத்தனம் எடுத்துக்கொள்வதும் வழமையே. இவ்வாறான நிலையில் வன்னி மாவட்டத்தில் முசலிப் பிரதேச சபை தவிர்ந்த ஏனைய தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற மூன்று பிரதேச சபைகளின் ஆட்சியதிகாரத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் பெற்றிருக்கின்றார்கள். மன்னார் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, மாந்தை கிழக்கு பிரதேச சபைகளே அவையாகும். இவ்வாறு தமிழ் மக்களின் பெரும்பான்மை பிரதேசங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனதாக்கிக் கொண்டிருப்பது மக்களின் விருப்புக்கு மாறானதாகும்.

புதிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைகளில் காணப்படுகின்ற மிகப்பெரும் தவறுகளின் காரணமாகவே இத்தகைய சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. ஆனால் வடக்கு முஸ்லிம்களின் நலன்சார்ந்து நோக்குகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமிழ் முஸ்லிம் உறவில் பாரிய விரிசலையேறபடுத்தும் செயற்பாட்டையே இத்தேர்தல்களின் மூலம் நிறைவேற்றியிருக்கின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமிழ் மக்களின் போராட்டங்களை ஏற்றுக்கொள்ளவில்லை, அதிகாரப் பகிரவை நாம் கோரவில்லை, சமஷ்டி முறைமையை நாம் கோரவில்லை, புதிய அரசியலமைப்பு அவசியமில்லை என்று பகிரங்கமாகப் பேசுவருகின்ற ஒரு கட்சியின் உண்மை முகம் அறிந்து மக்கள் அதற்கு வாக்களிக்கவில்லை, அற்பத்தனமான அபிவிருத்திகளையும், நிவாரணங்களையும், உதவித்திட்டங்களையும், தேர்தல்கால இலஞ்சமாக மக்களுக்குக் காட்டியே வாக்குகள் பெறப்பட்டன, அது மாத்திரமன்றி தமிழ் மக்களுக்கிடையிலே இருக்கின்ற அரசியல் முரண்பாடுகளை தமக்குச் சாதகமாக்கியே இவ்வெற்றிகள் பெறப்பட்டிருக்கின்றன. எனவே இவ்வெற்றிகள் அனைத்தும் நயவஞ்சகத்தனமானவை என்றே எண்ணத்தோன்றுகின்றது.

அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தனக்கான அரசியல் இருப்பை உறுதி செய்வதற்காகவே இந்த வெற்றிகள் பயன்படப்போகின்றனவே தவிர மக்களுக்கு நன்மைதரக்கூடிய ஆட்சியமைப்பொன்றை உருவாக்குவதற்கு அல்ல என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்தல் அவசியமாகும். அத்தோடு வடக்கின் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் தமிழ் மக்களின் விருப்புக்கு மாற்றமான இத்தகைய சுயநல அரசியல் செயற்பாட்டை அங்கீகரிக்கமாட்டார்கள்.

வடக்கிலே முஸ்லிம் மக்கள் எதிர்நோக்குகின்ற காணிப் பிரச்சினைகள், வீடில்லாப் பிரச்சினைகள், வாழ்வாதாரப் பிரச்சினைகள் என பல்வேறு முக்கிய பிரச்சினைகள் இருக்கின்றன, அதனைப்போன்று தமிழ் மக்களுக்கும் பிரச்சினைகள் ஏராளம் இருக்கின்றன.

இவ்வாறான நிலையில் சிங்கள அரசுகள் மக்களின் காணிகளைப் பெருமளவில் கொள்ளையடித்திருக்கின்றார்கள், மகாவலி “எல்” வலயம் என்ற திட்டத்தின் கீழ் முல்லைத்தீவிலும், மாவ்வில்லு பேணற் காடுகள் என்ற காணிச்சுவீகரிப்பின் மூலமும் மன்னாரிலும் காணிகள் அரச உடமையாக்கப்பட்டிருக்கின்றன.

அதேபோன்று மாகாணசபைத் தேர்தல் தொகுதி பிரிப்பு என்ற சட்டத்தின் மூலம் வடக்கில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவத்தை முற்றாக இல்லாமல் செய்கின்ற நடைமுறைகளை சிங்கள அரசு மேற்கொள்கின்றது. இவ்வாறான சவால்கள் மிகுந்த சூழ்நிலையில் எமது மக்களின் பிரச்சினைகளை தமிழ் மக்களோடு இணைந்து தீர்க்க வேண்டிய தருணத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களக் கட்சிகளை வடக்கில் அறிமுகம் செய்கின்ற கீழ்த்தரமான அரசியல் செயற்பாட்டை அமைச்சர் றிசாத் முன்னின்று மேற்கொள்வது நீண்டகால நோக்கில் தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் நிரந்தரப் பகையாளிகளாக மாற்றியமைக்கும் செயலாகவே அமையும்.

எனவே வடக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றுக்கொண்டுள்ள உள்ளூராட்சி அதிகாரங்கள் விடயத்தில் அமைச்சர் றிசாத் தூர நோக்கோடு சிந்தித்து செயலாற்றவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

Web Design by The Design Lanka