'வடக்கு, கிழக்கிற்கு அநீதி இழைக்கப்படவில்லை' - சுமந்திரனுக்கு பதிலளித்த நிமல் லான்ஸா! - Sri Lanka Muslim

‘வடக்கு, கிழக்கிற்கு அநீதி இழைக்கப்படவில்லை’ – சுமந்திரனுக்கு பதிலளித்த நிமல் லான்ஸா!

Contributors

அபிவிருத்திச் செயற்பாடுகளில் வடக்கு கிழக்கிற்கு அநீதி இழைக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஸா  தெரிவித்தார்.

வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வு வழங்குவது தொடர்பில் சுமந்திரன் எம்.பி கருத்துத் தெரிவித்தார்.அது தொடர்பில் எமக்குப் பிரச்சினை கிடையாது. வடக்கு கிழக்கு பகுதிகள் தொடர்பில் முறைகேடு நடப்பதாக அவர் தெரிவித்தார். களனி பாலம் மற்றும் கிண்ணியா பாலம் பற்றி பேசினார். களனி பாலம் நீண்டகாலத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. வடக்கு கிழக்கிற்கு அநீதி நடக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் பாரிய அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதி நடந்தது. யுத்தம் காரணமாக அப்பகுதி அபிவிருத்தி தடைப்பட்டிருந்தது. அதனை நாம் ஏற்கிறோம். எமது அமைச்சு வடக்கு கிழக்கிற்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. நீங்கள் உதவி ஆட்சிக்கு கொண்டு வந்த அரசு கிண்ணியா பாலம் அமைக்க அடிக்கல் நாட்டிய போதும் பாலம் நிர்மாணிக்கப்படவில்லை. அதற்கு கடந்த அரசே பொறுப்பு கூற வேண்டும். தௌபீக் எம்.பியின் கோரிக்கை படி பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினோம். பாலப் பாதையை நகர சபையே வழங்கியது.

வடக்கில் 3000கிலோமீட்டர் நீள பாதை நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.எமது காலத்தில் வடக்கு கிழக்கிற்கோ வேறு பகுதிக்கோ நாம் அநீதி இழைக்கவில்லை.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் பேசினாலும் அனைத்திற்கும் அரசியலை திணிக்காதீர்கள். எமது அமைச்சு பற்றி தவறான கருத்தை முன்வைக்காதீர்கள் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team