வடமாகாண சபை கூட்டமைப்பு உறுப்பினர்கள், அமைச்சர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் பதவியேற்பு! 8 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை - Sri Lanka Muslim

வடமாகாண சபை கூட்டமைப்பு உறுப்பினர்கள், அமைச்சர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் பதவியேற்பு! 8 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை

Contributors

 

வட மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

இன்று காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த வைபவம் நடைபெறவுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் முன்னிலையில் உறுப்பினர்களும் அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.

இன்று காலை யாழ். நகரிலுள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு அஞ்சலி செலுத்தும் உறுப்பினர்கள் அங்கிருந்து வீரசிங்கம் மண்டபத்துக்கு வருகைதந்து பதவியேற்க­வுள்ளனர்.

வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் கடந்த 7ஆம் திகதி அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இவர் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் கோவில் வீதியிலுள்ள தனது புதிய அலுவலகத்தில் கடமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்­தக்கதாகும்.

இன்றைய பதவிப் பிரமாண நிகழ்வில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.

8 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை

வடமாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வில்  தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் 8 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

முதலாவது வடமாகாண சபை அமைச்சர்களுக்கான பதியேற்பு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (11) காலை யாழ். வீரச்சிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களைத் தவிர்ந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்றும் ரெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இந்நிகழ்வில் கலந்துகொண்டார் என்றும் தெரியவருகிறது.

நாடாளுமன்மற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.எல்.ஆர்.எப்பில் அங்கம் வகிக்கும்  5 உறுப்பினர்களும் சித்தார்த்தன் தலைமையிலான புளொட்டில் அங்கம் வகிக்கும் 2 உறுப்பினர்களும் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோவில் அங்கம் வகிக்கும் ஒருவரும் இப்பதவி பிரமாண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team