வடமாகாண முஸ்லீம் அகதிகள் சம்மேளனத்தின் அறிக்கை » Sri Lanka Muslim

வடமாகாண முஸ்லீம் அகதிகள் சம்மேளனத்தின் அறிக்கை

muslim

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

 

 

முஸ்லீம் சமூகமும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களும் ஓரணியில் திரண்டு நின்று ஒரே நோக்குடன் ஆட்சி அதிகாரத்தை மாற்றவேண்டும் என்பதில் முனைப்புக்காட்டியுள்ளனர். ஆனால் இன்னும் அரசுடன் ஒட்டியிருக்கும் நமது சமூகம் சார்ந்த அரை மந்திரிகள் ஒருசிலரும், அரைச்சதத்திற்கும் பெறுமதியற்ற ஆலோசகர்களும் அரைச்சொகுசு வாழ்க்கை;காக வக்காலத்து வாங்கிக்கொண்டிருப்பது மிகவும் கவலை தருவதாக வடமாகாண முஸ்லீம் அகதிகள் சம்மேளனம் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

 

சம்மேளனத்தின் தலைவர் எம்.கே முபாரிஸ் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- முஸ்லீம்களுக்கு எதிராக இனவாத இயக்கங்கள், பலசேனாக்கள் திட்டமிட்டு செய்த அட்டூழியங்கள், அட்டகாசங்கள், வன்முறைகளினால் அந்த இனம் இன்று ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் சிந்தித்து முடிவொன்றை எடுத்திருக்கின்றது.

 
அட்டூழியங்கள் நடந்தபோது வாழவிருந்த இந்த அரசும் ஜனாதிபதியும் தற்போது அவர்களின் வாக்குகளை வேட்டையாடுவதற்காக மீண்டும் பொய் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிக்கொண்டிருக்கின்றனர். தர்கா நகர், பேருவளை, கிராண்ட்பாஸ், தம்புள்ளை, தெஹிவளை போன்ற இடங்களில் வன்முறைகளும் கலவரங்களும் இடம்பெற்றபோது எந்தவித நடவடிக்கையும் எடுக்காது பொலிஸாரை வேடிக்கை பார்க்க வைத்த இந்த அரசை தொடர்ந்தும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்த முஸ்லீம் சமூகம் இனியும் தயாரில்லை.
கட்சி பேதங்களை மறந்து அந்த சமூகம் இன்று ஒருமித்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. முஸ்லீம் சமூகத்தின் மீதான கொடூரங்களை எதிர்த்துப் போராடியவர்களில் எமது வன்னி மைந்தன் றிஷாத் பதியுதீன் முக்கியமானவர்.

 

சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் எல்லாம் நட்டநடுநிசியென்றுபாராது உயிரையும் துச்சமென மதித்து அங்கு நின்று காடையர்களை அடித்து விரட்டுவதற்கு அவர் தலைமை தாங்கியிருக்கின்றார்.
பொலிஸ்மா அதிபருடனும் நேருக்கு நேர் பிரச்சினைப்பட்டார். அமைச்சரவைக்கூட்டங்களில் எவருக்கும் பயமின்றி தனது நிலைப்பாட்டை எடுத்துரைத்து நீதிவேண்டும் எனக் கோரியவர்.

 

பாராளுமன்றத்திலும் அவர் பெட்டிப்பாம்பாக இருக்கவில்லை. சில கோடரிக்காம்புகள் முஸ்லீம் சமூகத்தின் எழுச்சியை முடக்க முட்பட்டபோது அமைச்சர்களான றிஷாத்; பதியுதீன், ஹக்கீம் போன்ற அரசியல் தலைவர்கள் அமைச்சர்களாக இருந்தபோதும் அடிவருடிகளாக இருக்கவில்லை.
தற்போது ஆட்சி மாற்றத்திற்கான பொருத்தமான சூழல் ஒன்று ஏற்பட்டு இருக்கும்போது சமூகத்தின் நன்மை கருதி முஸ்லீம் தலைவர்கள் பொதுவேட்பாளரை ஆதரிக்க முன்வந்துள்ளனர். எனினும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீன் மீது காழ்ப்புணர்வுகொண்ட சக்திகள் ஜனாதிபதியிடம் நல்ல பெயரை எடுக்கவேண்டும் என்ற நோக்கில் அவர்மீது சேற்றை வாரி இறைத்து வருகின்றனர்.

 

இவர்கள் இன்னும் அற்ப சொற்ப சலூகைகளுக்காகவும் எச்சில் எழும்புத்துண்டுகளுக்காகவும் அரசின் காலடியில் தவம் கிடக்கின்றனர்.

 

அரைவேக்காட்டுத்தனமான அறிக்கைகள் மூலம் பேரினவாதத்தின் மனங்களை குளிரவைக்க முற்படுகின்றனர். மேடைகளிலும் ஊடகங்களிலும் சமூகம், சமூகம் என கூப்பாடு போடும் இவர்கள் முஸ்லீம் சமூகத்திற்கு துளியளவேணும் நன்மை செய்துள்ளனரா?
தங்கள் வாக்கு வங்கிகளை தக்க வைப்பதற்காக தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊர்களுக்கு மட்டும் இந்த அரை மந்திரிகள் உதவிபுரிந்து வருகின்றனர்.

 

கால்நூற்றாண்டு காலம் அகதி முகாமில் வாழும் வடமாகாண முஸ்லீம் சமூகத்தை இவர்கள் எப்போதாவது ஏறெடுத்தும் பார்த்துள்ளனரா?

 

இருபத்தைந்தாண்டு கால அரசியல் வாழ்வு பூர்த்தியை விழாக்களாக கொண்டாடும் இந்த ஜாம்பவான்கள் வடமாகாண முஸ்லீம்களின் அகதி முகாமை எப்போதாவது வந்து பார்த்துள்ளனரா? குறைந்தது 25 அகதி முஸ்லீம்களுக்கேனும் உதவியுள்ளனரா?
நாங்கள் படும் அவலங்கள், கஷ்டங்கள் இவர்களுக்கு தெரியுமா? இவைகள் எல்லாம் தற்போது சிந்திக்க வேண்டிய விடயங்கள்.

 

அகதி முகாமில் வாழ்ந்து அரசியலில் ஈடுபட்டு அமைச்சராகி முஸ்லீம் சமூகத்துக்காக அல்லும் பகலும் உழைத்துவரும் றிஷாட் எம்பியை விமர்சிக்க இவர்களுக்கு எந்த அருகதையுமே இல்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka