வட-கிழக்கு மக்களுக்காக ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான நிதி LTTEயின் யுத்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டது - Sri Lanka Muslim

வட-கிழக்கு மக்களுக்காக ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான நிதி LTTEயின் யுத்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டது

Contributors

-ஏ.எல்.ஜனூவர்-

இணைந்த வட – கிழக்கு மாகாண சபை நிருவாகம் நடைபெற்றவேளை  வட – கிழக்கு மக்களின் அடிப்படை வசதிகளுக்காக ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான நிதி விடுதலைப்புலிகளின் யுத்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. அன்று வட – கிழக்கு மாகாண சபை நிருவாகத்தில் பணிபுரிந்த அரச அதிகாரிகள் விடுதலைப் புலிகளால் கிளிநொச்சிக்கு அழைக்கப்பட்டு நிதிகள் பங்கிடப்பட்டன என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் ஜெய்க்கா திட்டத்தின் கீழ் சுத்தமான குடிநீர் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற போது விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், நமது நாட்டில் எல்லா இன மக்களும் ஒற்றுமையுடனும், நாட்டுப்பற்றுடனும் வாழ்ந்து வந்தவேளையில் தான் கொடூர யுத்தம் எம்மை நோக்கி வந்தது. வட – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டதன் பின்னர்; தான் வட – கிழக்கு மாகாணங்களில் இனவாதம் வளர்க்கப்பட்டது.

கிழக்கில் வாழ்ந்த மூவின மக்களுக்கான மாகாண சபை நிதிகள் சமனாக வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டதுடன் வட – கிழக்கு மாகாண சபையின் உயரதிகாரிகளை கிளிநொச்சிக்கு அழைத்து அங்கு வைத்து தான் நிதிகள் பிரிக்கப்பட்டன என்பதை நாம் மறந்து விட முடியாது. அன்று தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப்புலிகள் தான் என்று செயற்பட்டதுடன் மனிதாபிமானமற்ற முறையுடன் யுத்தத்தில் தொடர்பில்லாத இஸ்லாமிய, பௌத்த, கிறிஸ்தவ மதத்  தலைவர்களையும் ஆயிரக்கணக்கான அப்பாவி பொது மக்களையும் கொன்று குவித்தனர்.
இவ்வேளையில் மனித உரிமைகள் பற்றி குரல் கொடுக்கும் எந்தவொரு வெளிநாடுகளும் அன்று குரல் கொடுக்க முடியாமல் மௌனம் சாதித்ததுடன் நமது உள்நாட்டில் இன்று வீரம் பேசுகின்ற அரசியல் தலைவர்களும் அன்று வாய்மூடி மௌனமாக இருந்ததை நாம் மறந்து விட முடியாது.

விடுதலைப் புலிகள் தங்களுக்கு பலவீனம் ஏற்படும் போது ஒவ்வொரு அரசாங்கத்துடனும் சமாதானப் பேச்சுவார்த்தை எனக் கூறி சமாதான உடன்படிக்கைகளை மேற்கொண்டனர். சமாதானப் பேச்சு வார்த்தைகளை பேசுவதாகக் கூறிக் கொண்டு தங்களை யுத்தம் ரீதியில் பலப்படுத்தியதுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கைகள் அமுல்படுத்தப்பட்ட நிலையில் கூட தங்களுக்கு எதிரான அரசியல் தலைவர்களையும், சகோதர இயக்க உறுப்பினர்களையும் தேடித் தேடி சுட்டுக் கொண்றனர். நமது நாட்டின் பல அரசியல் தலைவர்களை விடுதலைப்புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகள் என்ற போர்வையில் ஏமாற்றி உள்ளனர் என்பது வரலாற்று உண்மையாகும்.

இன்று நமது நாட்டில் ஏற்பட்டுள்ள நிரந்தரமான சமாதான சூழ்நிலைக்கு நமது ஜனாதிபதி அதிமேதகு மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் மேற்கொண்ட திடமான அரசியல் தீர்மானம், நமது முப்படையினரின் தியாக செயல்பாடுகளே காரணமாக அமைந்தன என்பதனை நாம் மரணிக்கும் வரை மறந்து விட முடியாது.

இவ்வாறு பெறப்பட்ட சமாதானத்தை குழப்புவதற்கு பலர் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். நமது நாடு சமாதானமாக இருக்கக்கூடாது எப்போதும் நமது நாட்டில்  தொடர்ந்தும் பிரச்சினைகள் இருக்க வேண்டுமென்றும், யுத்தம் இருக்க வேண்டுமென்றும் இனவாதம் இருக்க வேண்டுமென்றும் சிலர் நினைத்து உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களை மேற்கொண்டு நமது மக்களின் நிம்மதியை இல்லாமல் செய்வதற்கு சில சக்திகள் முயற்சிக்கின்றன இந்த விடயத்தில் நாம் நிதானமாக செயல்பட வேண்டியுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் நமது ஜனாதிபதி அவர்கள் வெற்றி அடையாமல் தோல்வி அடைந்திருந்தால் நமது நாட்டில் கொடூர யுத்தம் இன்றுவரை நிலைத்திருக்கும் என்பதனை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அன்று சுதந்திரமாக நமது நாட்டில் வாழ்வதற்கும், பேசுவதற்கும் உரிமை அற்றவர்களாக நாம் அனைவரும் விடுதலைப்புலிகளால் அடக்கி ஆளப்பட்டதனை நாம் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்தின் ஊடாக தான் நிம்மதியாக வாழக்கூடிய நிரந்தரமான நிலைமை நமக்கு ஏற்பட்டுள்ளது.

தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவரும் மாண்புமிகு உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான அல்ஹாஜ் ஏ.எல்எம்.அதாஉல்லா அவர்கள் எப்போதும் வெளிப்படையாக யதார்த்த பூர்வமான கருத்துக்களை சொல்லும்  அரசியல் தலைவராவார். கடந்த 2005 ஆம் ஆண்டு நமது அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக போட்டி போட்டியிட்ட போது தேசிய காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் நமது நாட்டில் யுத்தம் இல்லாமல் செய்யப்பட வேண்டும், கிழக்கு மாகாணம் தனியாகப் பிரிக்கப்பட்டு கிழக்கில் வாழும் மூவின மக்களும் நிரந்தரமாக இன உறவோடு வாழும் நிலைமை உருவாக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கிழக்கு மாகாணம் தனியாகப் பிரிக்கப்பட்டு நமக்கென ஒரு மாகாண சபை உருவாக்கப்பட்டதனால் கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை கிழக்கில் பாரிய வரலாற்று அபிவிருத்திப் பணிகளை மஹிந்த சிந்தனைத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வருகின்றோம். கிழக்கில் ஜப்பான் நாட்டு அரசாங்கம் நமது மத்திய அரசாங்கத்திற்கு வழங்கிய பெருந்தொகை நிதியில் கிழக்கில் மூன்று மாவட்டங்களில் மூவின மக்களும் வாழும் பிரதேசங்களை அடையாளங்கண்டு சிறந்த பாதை அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டுள்ளோம்.

ஜெய்க்கா திட்டம் என்றவுடன் சில அதிகாரிகளும், சில அரசியல் வாதிகளும், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கும் நிறுவனம் என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கின்றனர். ஜப்பான் நாடு நமது மத்திய அரசுக்கு நிதி வழங்கி மத்திய அரசாங்கம் நமது கிழக்கு மாகாண சபைக்கு வழங்கிய நிதியினைக்கொண்டே பாதை அபிவிருத்திப் பணிகள் இடம் பெற்றுள்ளன.
இதே போன்று கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினாலும், இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிப்படைந்துள்ள பிரதேசங்களில் நீண்டகாலமாக நீர் வழங்கல் திட்டங்களை வழங்க முடியாத பிரதேசங்களை அடையாளங்கண்டு வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பிரதேச மக்களுக்கு நீர்; வழங்குவதற்கு மூன்று மாவட்டங்களுக்கும் 600 மில்லியன் பண ஒதுக்கீடு செய்யப்பட்டு இத் திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டு படிப்படியாக மக்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன. ஜெய்க்கா திட்ட நிதி மீண்டும் நாம் கடனாக செலுத்த வேண்டியுள்ளது.

அத்தோடு ஜனாதிபதி அவர்கள் கிழக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் சத்தியப் பிரமாண நிகழ்வு முடிந்தவுடன் முதலமைச்சர், அமைச்சர்களை அழைத்து கிழக்கில் மாகாண சபைத் தேர்தலின் போது இனவாதம் விதைக்கப்பட்டுள்ளது. எனவே, எல்லா அமைச்சர்களும் கிழக்கு மாகாணத்தின் இன ஒற்றுமைக்கு பணிபுரியுங்கள் என்று எங்களிடம் வேண்டிக்கொண்டார்.

அம்பாறை மாவட்டத்தில் நீர் வழங்கல் திட்டங்கள் தெஹியத்தகண்டி, புட்டம்ப, சம்புநகர், மல்லிகைத் தீவு, கண்ணகிபுரம் போன்ற பிரதேசங்களில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. நமது அம்பாறை மாவட்டம் இன ஒற்றுமைக்கு உதாரணமான மாவட்டமாக திகழ்வதற்கு நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். நாம் தத்தமது மதம், மக்கள் மீது அன்பு வைத்து வாழ்வதுடன் சகோதர இன மக்களுடன் இணைந்து வாழும் போது தான் உண்மையான இன ஐக்கியம் ஏற்படும்.

நமது காலத்தில் நமது கண்களால் கண்ட கொடூர காட்சிகளை நமது எதிர்காலப் பிள்ளைகள் காணக்கூடாது அவர்கள் இன உறவோடு வாழ்வதற்கு நாம் எல்லோரும் இணைந்து வழிவகுக்க வேண்டிய பாரிய பொறுப்பு நமக்குள்ளது. மூன்று தசாப்த யுத்த நிலையிலிருந்து மீண்டு சமாதான காற்றை சுவாஸ்தித்து கொண்டிருந்த போது திடீரென நமது கிழக்கு மாகாணத்தில் ”கிறிஸ்மேன்”   என்ற பிரச்சினைகளை சிலர் உருவாக்கினார்கள். கடந்த பல வருட காலமாக தியாக உணர்வுடன் கிழக்கு மாகாணத்தில் வரலாற்று அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு இன உறவை வளர்த்து வந்த நமக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய நிலையில் திடீரென ”கிறிஸ்மேன்” பிரச்சினை உருவாக்கப்பட்டது.

கிழக்கு மாகாண அடிமட்ட மக்கள், படித்தவர்கள், அரசியல் வாதிகள், கிழக்கு மாகாண சபையின் உயரதிகாரிகள் அனைபேரும்  ”கிறிஸ்மேன்”   பிரச்சினைகள் உண்மை என்று நம்பினர். கத்தி, கோடாரிகளை தூக்கிக்கொண்டு ஒவ்வொரு ஊர்களிலும் அப்பாவி பொது மக்களை கூட்டம் கூட்டமாக அழைத்து ”கிறிஸ்மேன்” பிரச்சினையை அரசாங்கத்திற்கு எதிராகவும் நமது இன ஒற்றுமைக்கு சவலாகவும் சில சக்திகள் செயல்பட்டுக் கொண்டிருந்தனர் ஜனாதிபதிக்கு முஸ்லிம் பெண்களின் இரத்தம் தேவைப்படுவதாக தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைத்த வேளையில் அமைச்சர் அதாஉல்லா அவர்களும் நானும், கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க அவர்களும் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண மக்களுக்கு ”கிறிஸ்மேன்” பிரச்சினை தொடர்பான யதார்த்தமான உண்மைகளை துணிச்சலுடன் தெரிவித்தோம்.
”கிறிஸ்மேன்” என்ற போர்வையில் சில தீய சக்திகள் கிழக்கில் நீண்டகாலத்திற்கு பின் உருவான இன உறவை சீர்குலைக்கும் நோக்குடன் செயல்பட்டு வருகின்றனர். எனவே கிழக்கு மாகாண மக்கள் பொறுமை காத்து நிதானத்துடன் இவ் விடயத்தில் செயல்பட வேண்டும் என தெரிவித்தோம்.

நான் இலங்கை ரூபவாஹினி பேட்டி ஒன்றில் ”கிறிஸ்மேன்” என்ற வதந்தி உண்மைக்கு புறம்பானது சில சக்திகள் கிழக்கில் ஒற்றுமையாக வாழும் நமது மக்கள் மத்தியில் இவ்வாறான தவறான வதந்திகளை பரப்பியுள்ளனர். எனவே, முஸ்லிம் மக்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்று கூறினேன். நான் ஜனாதிபதியை கவர்வதற்காக ரூபவாஹினியில் பேட்டி கொடுத்ததாகச் கூறினார்கள்.

எனது வீட்டுக்குச் சென்ற போது எனது மக்கள் எல்லோரும் வந்து ஏன் ”கிறிஸ்மேன்” பிரச்சினை பொய் என்று சொன்னீர்கள் கிழக்கு மாகாணம் முழுவதும் ”கிறிஸ்மேன்”    சம்பவங்கள் உண்மை என்று மக்கள் உணர்ந்து போராட்டம் செய்யும் போது நீங்கள் மாத்திரம் எப்படி பொய் என்று சொல்கிறீர்கள் என்று கேட்டார்கள். கிழக்கு மாகாண சபையிலும், இலங்கை ரூபவாஹினி பேட்டியிலும் துணிச்சலாக ”கிறிஸ்மேன்” பொய் என்று தெரிவித்து எனது வீட்டுக்கு சென்ற போது எனது மக்கள் என்னைச் சூழ்ந்து கேள்வி கேட்ட போது சில கனம் அச்சமடைந்தேன். எனது பிள்ளைகளிடம் நான் கூறினேன் நமது நாட்டில் 30 வருட யுத்தத்தை இல்லாமல் செய்த சூழ்நிலையில் ”கிறிஸ்மேன்” நிகழ்வு ஒன்றை எனக்கு உண்மை என்று காட்டுங்கள் என்று கூறிவிட்டு, பொறுமையாக இருங்கள் உண்மையான நிலைமையை இறைவன் நமக்கு காட்டுவான் என்று சொன்னேன்.
ஒரு மாதம் கூட செல்லவில்லை ‘கிறிஸ்மேன்’ நிகழ்வு பொய்யென நிருபிக்கப்பட்டது. நமது மக்கள் இவ்வாறான நிலைமையில் பொறுமையாக இருந்து செயற்பட வேண்டும். மக்களால் தேர்தலில் வாக்களிக்கப்பட்டு தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதி நிதிகள் ஏதாவது ஒரு சம்பவம் நடைபெறும் போது அதன் உண்மைத் தன்மைக்கேற்ப நமது மக்களை வழிநடாத்த வேண்டும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது எனவே எப்போதும் நாம் நிதானமாக செயற்பட்டு மக்களை வழிநடாத்த வேண்டியுள்ளது எனக் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாட் உட்பட அரசியல் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team