வனப் பகுதியை அழித்து காணி பகிர்ந்தளிப்பு : கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் கைது - Sri Lanka Muslim

வனப் பகுதியை அழித்து காணி பகிர்ந்தளிப்பு : கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் கைது

Contributors

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இன்று (20) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வான்எல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வனப் பகுதியை அழித்து வேறு தரப்பினருக்கு காணியை பகிர்ந்தளித்தமை தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய இவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் ஜயந்திபுர வட்டாரத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் 56 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வன பரிபாலன அதிகாரிகளிடம் எந்த விதமான முன் அனுமதியும் பெறாமல் வனப் பகுதியை அழித்து அந்த காணிகளை பகிர்ந்தளித்துள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பாக விசாரித்த வன இலாக்கா அதிகாரிகளுக்கும் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, நாளைய தினம் (21) கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வான்எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலை நிருபர் பாருக்

Web Design by Srilanka Muslims Web Team