வரி குறைப்பினால் மக்களுக்கு நன்மையென்றால் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏன் குறையவில்லை - கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி - Sri Lanka Muslim

வரி குறைப்பினால் மக்களுக்கு நன்மையென்றால் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏன் குறையவில்லை – கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி

Contributors

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இறக்குமதி பொருட்களின் வரி குறைப்பு மூலமாக நாட்டு மக்களுக்கு சலுகைகளை கொடுத்ததாக அரசாங்கம் கூறுவது உண்மையென்றால் ஏன் இன்னமும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் கேள்வி எழுப்பினர். சீனி வரி ஊழல் குறித்து இரண்டு நாட்கள் விவாதம் வழங்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சபையில் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, சீனி இறக்குமதி வரி குறைப்பு குறித்து நிதி அமைச்சின் விசேட அறிவிப்பொன்றை நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் முன்வைத்தார்.

இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இவற்றை கூறினார்,

இது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் கபீர் ஹசீம் கூறுகையில், சீனிக்கான வரியையும் ஏனைய பொருட்களுக்கான இறக்குமதி வரியையும் குறைத்தமை மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்கவென்றால் ஏன் இன்னமும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையவில்லை. அரசாங்கம் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையையே முன்னெடுத்து வருகின்றது.

வரி குறைப்பினால் மக்களுக்கு சலுகைகளை கொடுப்பதாக கூறினாலும் மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை. எரிபொருள் இறக்குமதி வரியை குறைத்ததன் மூலமாக ஏன் மக்களுக்கு பெட்ரோல், டீசல் குறைந்த விலையில் கொடுக்கவில்லை.

கொவிட்-19 காலத்தில் பெட்ரோல் ஒரு லீட்டர் 27 ரூபாவுக்கு கொடுக்க முடிந்தும் அரசாங்கம் விலை குறைக்கவில்லை. 25 ஆயிரம் கோடி இதனால் அரசாங்கத்திற்கு கிடைத்தது, இந்த பணமும் சீனி வரி குறைப்பு மூலமாக செய்த ஊழலை போன்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்றார்.

இது குறித்து ஹர்ஷ டி சில்வா எம்.பி கூறுகையில், சீனி இறக்குமதி வரி குறைப்பு மூலமாக பாரிய ஊழல் இடம்பெற்றுள்ள போதிலும் அதனை அரசாங்கம் பொய்களை கூறி மறைக்கின்றது. அரசாங்கம் உண்மையாக மக்களுக்கு சலுகைகளை கொடுக்க விரும்பியமை உண்மையென்றால் ஏன் அதனை வர்த்தமானி மூலமாக அறிவிக்கவில்லை. முதலில் இது குறித்து கணக்காய்வு செய்ய வேண்டும்.

எம்மிடமும் இது குறித்த தரவுகள் இல்லை, எனவே இந்த ஊழல் குறித்து கணக்காய்வு செய்ய வேண்டும். வரிகளை குறைத்தது தவறில்லை, ஆனால் வரி குறைப்பின் மூலமாக சலுகைகள் மக்களுக்கு செல்ல வேண்டும், ஆனால் அது நடக்கவில்லை என்பதே எமது பிரச்சினையாகும். 15.9 பில்லியன் யாருடைய பைக்கு சென்றது என்பதை கண்டறிய வேண்டும் என்றார்.

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறுகையில், அரசாங்கம் உண்மைகளை மூடி மறைக்க பல்வேறு பொய்யான காரணிகளை கூறி மக்களை திசை திருப்ப நினைக்கின்றனர். எனவே சீனி இறக்குமதி வரி குறைப்பு குறித்து இரண்டு நாட்கள் விவாதம் நடத்த அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என சபையில் கேட்டுக் கொண்டார்.

Web Design by Srilanka Muslims Web Team