வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிகரெட் விலையை அதிகரிக்க சூத்திரம் தயார் செய்யும் அரசாங்கம்..! - Sri Lanka Muslim

வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிகரெட் விலையை அதிகரிக்க சூத்திரம் தயார் செய்யும் அரசாங்கம்..!

Contributors

நாட்டில் சிகரெட் பாவனையைக் குறைப்பதற்காக விஞ்ஞான மற்றும் கணித முறைமையில் சிகரெட்டின் விலையை அதிகரிப்பதற்காக சிகரெட் விலை சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக புகையிலை மற்றும் மதுசார அதிகார சபையின் தலைவர் வைத்திய கலாநிதி சமாதி ராஜபக்ஷ (Samadhi Rajapaksa) தெரிவித்துள்ளார்.

வருடத்துக்கு ஒரு முறை கட்டாயமாக சிகரெட்டின் விலையை அதிகரிப்பதற்காக விலை சூத்திரம் ஒன்றின் மாதிரி வரைவை தயாரிக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella)  புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகாரசபைக்கு பணித்திருந்தார்.

இந்தச் சிகரெட் விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டால் 2022ஆம் ஆண்டு தொடக்கம் 2026ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிவரை அரசாங்கத்துக்கு 124.6 பில்லியன் ரூபா வருமானமாகக் கிடைக்கப்பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த விலை சூத்திரம் செயற்படுத்தப்பட்டால் அரசின் வருமானம் வருடத்துக்கு 6 சதவீதத்தினால் அதிகரிக்கும்.

இந்த விலை சூத்திரத்தின் மாதிரி வரைவு, அமைச்சரவை அனுமதிக்காகச் சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மேலும் இந்த திட்டத்தினை வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் தெரியவந்தள்ளது.

மேலும் இந்த விடயம் தொடர்பில் தேசிய அதிகாரசபை தெரிவிக்கையில், 

புகைப்பிடிப்பதால் உண்டாகும் நோய்களால் நாட்டில் நாளொன்றில் 60 பேர்வரை மரணிக்கின்றனர்.

அதற்கமைய, வருடமொன்றுக்கு 22 ஆயிரம் பேர் புகைப்பிடிப்பதால் உண்டாகும் நோய் நிலைமைகளால் உயிரிழக்கின்றனர்.

புகைப்பிடிக்கும் நபரொருவரின் ஆயுட்காலம், சராசரி மனிதனின் ஆயுட்காலத்தை விட 10 வருடங்கள் குறைவடைவதாகப் புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

தற்போதுவரை, நாட்டில் 40 வயதுக்கு மேற்பட்டோர், அதிகளவில் சிகரெட் பாவனைக்குப் பழக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறே, இளைஞர் சமூகத்தில் பெரும்பாலானோர், சிகரெட் பாவனையிலிருந்து விலகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team