வலம்புரி கவிதா வட்டத்தின் 31வது கவியரங்கு 15-10-2016 » Sri Lanka Muslim

வலம்புரி கவிதா வட்டத்தின் 31வது கவியரங்கு 15-10-2016

kk99

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

பல்வேறு ஆளுமைகளை தன்னகத்தே கொண்ட ஷம்ஸ் – எம்.எச்.எம்.ஷம்ஸ் அரங்கில் இடம்பெற்ற 31வது வகவக் கவியரங்கில் மூத்த இலக்கியவாதி ஜவாத் மரைக்கார் உரை
வலம்புரி கவிதா வட்டத்தின் 31வது கவியரங்கு 15-10-2016 அன்று கொழும்பு அல்ஹிக்மா கல்லூரியில் எம்.எச்.எம். ஷம்ஸ் அரங்கில் நடைபெற்றது. வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் நிகழ்வுகளை நெறிப்படுத்தினார். சிறப்பதிதியாகக் மூத்த இலக்கியவாதியும் ஷம்ஸ் அவர்களின் நண்பருமான ஜவாத் மரைக்கார் கலந்து கொண்டார்.

அண்மையில் மறைந்த இலங்கையின் மூத்த பெண் படைப்பாளி குறமகள் அவர்களும், மலேசிய கவிஞர் ரே. கார்த்திகேசு அவர்களும் நினைவு கூரப்பட்டனர். அவர்களைப்பற்றிய சிறு குறிப்பினை கவிஞர் மேமன்கவி வழங்கினார்.

செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் வரவேற்புரை நிகழ்த்த செயற்குழு உறுப்பினர் ஈழகணேஷ் நன்றியுரை வழங்கினார்.

31வது கவியரங்கிற்கு கவிதாயினி சுபாஷினி பிரணவன் தலைமை தாங்கினார். கவிஞர்கள் வெளிமடை ஜஹாங்கீர், வெலிகம கலைமகன் பைரூஸ், எம்.எஸ். அப்துல் லத்தீப், ஆஷிகா, பஸ்லி ஹமீட், தாஜ்மஹான், பிரேம்ராஜ், வதிரி சி. ரவீந்திரன், மஸீதா அன்ஸார், எம்.ஏ.எம்.ஆறுமுகம், கம்மல்துறை இக்பால், கவிக்கமல் ரஸீம், பாணந்துறை எம்.பி.எம்.நிஸ்வான் ஆகியோர் கவிதை பாடினர்.

சிறப்புரையாற்றிய மூத்த இலக்கியவாதி ஜவாத் மரைக்கார், ‘எம்.எச்.எம்.ஷம்ஸ் பல்வேறு ஆளுமைகளைத் தன்னகத்தே கொண்டவர். அவர் தன்னைக் கவிஞர் என்று அடையாளப்படுத்திக் கொண்டாலும் சிறுகதை – நாவல் படைப்பாளியாக, விமர்சகராக, சமூக ஆய்வாளராக, ஓவியராக, புகைப்படப்பிடிப்பாளராக, கோலாட்டக் கலைஞராக அதனை பயிற்றுவிப்பவராக, மொழிபெயர்ப்பாளராக, பத்திரிகையாளராக, இலங்கை வானொலியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடகராக ; மேடைநாடகங்களை எழுதித் தயாரிப்பவராகத் திகழ்ந்தார். தொட்ட எல்லாவற்றிலும் அவர் பிரகாசித்தார். இசைக்கருவிகளை மீட்டக்கூடிய ஆற்றலுள்ளவர். 1958 59 லிருந்து எழுதத் தொடங்கியவர். 68-69 லிருந்துதான் அவருடைய எழுத்தின் மூலம் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. இலக்கியத்தில் அவர் செய்த பங்களிப்பு அளப்பரியது. சிங்களத்தில் சிறுபான்மையினரைப் பற்றி குறிப்பாக முஸ்லிம்களைப் பற்றி எழுதப்படும் விமர்சனங்களுக்கு சிறப்பாக பதில் கொடுப்பவராக அவர் விளங்கினார். சிங்கள எழுத்தாளர்களின் படைப்புகளை தமிழில் அறிமுகப்படுத்துவதிலும், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை சிங்களத்தில் அறிமுகப்படுத்துவதிலும் முனைப்புடன் செயல்பட்டார். அதற்காக தினகரன் பத்திரிகையில் ‘சாளரம்’ பகுதியையும் நடத்தினார். ‘புதுப் புனல்’ என்ற பகுதியிலே பல இளம் எழுத்தாளர்களைக் கைதூக்கி விடுபவராக அவர் செயல்பட்டார். இன்றும்கூட அவரைத் தமது வழிகாட்டி என்று கூறும் பல எழுத்தாளர்கள் நம்மத்தியில் உள்ளனர்.’

கவிஞர் எம்.எச்.எம். ஷம்ஸ் பற்றிய நீண்ட உரையில் ஜவாத் மரைக்கார் அவர்கள் மேலும், ’68 – 70 களில் முதன் முதலாக அரபு எழுத்தணி வடிவத்தில் தமிழில் தனது பெயரைத் தாங்கி வந்த வார சஞ்சிகையாக ‘இன்ஸான்’ திகழ்ந்தது. முஸ்லிம்களின் சமூக நலனைப் பேசும் பத்திரிகையாக விளங்கி மிகவும் வரவேற்பைப் பெற்ற ‘இன்ஸான்’ பத்திரிகையில் எம்.எச்.எம்.ஷம்ஸின் பங்களிப்பு சிறப்பாகக் காணப்பட்டது. பண்ணாமத்துக் கவிராயர், கலைவாதி கலீல், எம்.எச்.எம்.ஷம்ஸ் ஆகியோர் ‘இன்ஸான்’ பத்திரிகையின் ஆஸ்தான எழுத்தாளர்களாக விளங்கினர். ஷம்ஸ் எழுதிய நாவலொன்றும் சிறுகதைத் தொகுதியும் வெளிவந்துள்ளன. . ‘ஹைக்கூ எழுதுவது எப்படி ?’ உட்பட பல சிறு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இங்கிலாந்து – பிரான்ஸ் நாடுகளில் தோன்றிய ‘கொங்கிரீட்’ கவிதையை இலங்கையில் முதன் முதலாக தமிழில் அறிமுகப்படுத்தினார்;. எழுத்துக்கள் சொல்லும் உணர்வினை வெளிப்படுத்தும் விதமாக எழுத்துக்களை எழுதி அதனை அவர் செய்திருந்தார். அவை வீரகேசரியில் வெளிவந்தன’ என்று தெரிவத்த அவர் அவரது ‘கொங்கிரீட’ கவிதைகள் சிலவற்றை சபையோருக்கு காட்டினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘ஷம்ஸ்; அவர்கள் வேறுவிதமாகவும் புதுமையாகவும் எழுதியிருக்கிறார். சகபாடி என்பதை + பாடி என்றும், சயனித்து என்பதை – னித்து என்றும் இதுபோலப் பலவாறும் எழுதியிருக்கிறார்.

சிறுவர் பாடல்கள் எழுதுவதில் வல்லவராக அவர் திகழ்ந்தார். அவற்றுக்குத் தானே இசையமைத்து ஒலிநாடாவாகவும் இறுவட்டாகவும் வெளியிட்டுள்ளார் . சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு நையாண்டியாக கவிதை எழுதுவதிலே சமர்த்தராக இருந்தார். அவரது கவிதைகளெல்லாம் வீச்சு நிறைந்தவைகளாக இருந்தன. முஸ்லிம் சமூக விமர்சனக் கருத்துக்களைக்கொண்ட குறும்பாக்களை ‘வெம்பாக்கள்’ என்ற பெயரில் அவர் எழுதினார் . ‘அல் ஹஸனாத்’ , ‘ஜூம்ஆ’ ஆகிய சஞ்சிகைகளில் தொடர்ச்சியாக இவை வெளிவந்தன. மஹாகவி குறும்பாக்களை அறிமுகப்படுத்திய பின்னர் , முஸ்லிம் சமூகத்தை மையமாகக் கொண்டு குறும்பா படைத்த முன்னோடியாக ஷம்ஸ் திகழ்கின்றார். அவரின் குறும்பாக்களில் சூடான கருத்துக்கள் இருந்த காரணத்தினாலேயே அவற்றுக்கு வெம்பாக்கள் என்று பெயரிட்டார். அவரது கொள்கையோடு முரண்படுவோர்கூட ரசிக்கும்படி இலக்கியச் சுவையோடு எழுதக்கூடியவர்.
அவரது வெம்பாவுக்கு ஓர் உதாரணம் –

‘ஆறுதரம் சென்றவராம் மக்கா
ஹாஜி வரவேற்பு மிகப் பக்கா
காரில் அவர் வந்திறங்கக்
கந்தலுடைப் பெண் வழியில்
பார்த்துவிட்டாள் ; ஆம் அவரின் அக்கா !’

சிங்கள தொலைக்காட்சி நாடகங்களில் இவரது தமிழ் பாடல்வரிகள் இடம்பெற்றுள்ளன. சமாதான கீதங்கள் பலவற்றை எழுதியுள்ளதோடு யுத்தத்துக்கு எதிரான அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டுமுள்ளார். ‘வெள்ளிச் சிறகடிக்கும் வெண்புறாவே’ என்று அவர் எழுதிய பாடல் இசையமைப்பாளருக்கு மிகவும் பிடித்துப் போய்விட அதனை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் கையளித்தார். அப் பாடல் பலரின் பாராட்டைப் பெற்று நாள் தவறாமல் தொடர்ச்சியாக ஒலிபரப்பானது.. இவ்வாறான ஆளுமைகள் பற்றி எமது இன்றைய இளந் தலைமுறையினர் நிறையத் தெரிந்து கொள்ள வகவம் நடத்துவது போன்ற நினைவுக்கூட்டங்கள் பெரிதும் உதவுகின்றன’ என்று கூறினார்.

டாக்டர் தாசிம் அகமது ‘தாயக ஓலி’ 25வது ஆண்டு மலரை வகவத்திற்கு கையளித்தார்.

விழாவுக்கான ஏற்பாடுகளை சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர் கனி மேற்கொண்டிருந்தார்.

சபையை டாக்டர் தாசிம் அகமது, த.மணி, ஏ.எம்.எஸ்.உதுமான், ரஷீத் எம். இம்தியாஸ், நாச்சியாதீவு பர்வீன், துவான் ரபாய் டிவாங்கோ, ரஷீத் எம் றியாழ், நடிகை ஓவியா, வெலிப்பனை அத்தாஸ், எஸ்.ஏ.கரீம், ஜோயெல் ஜோன்ஸன், எம்.எஸ்.எம்.ஜின்னா போன்றோர் அலங்கரித்தனர்.

kk  ll ll-jpg3

Web Design by The Design Lanka