வழமைக்கு திரும்பியது சூயஸ் கால்வாய் போக்குவரத்து - Sri Lanka Muslim

வழமைக்கு திரும்பியது சூயஸ் கால்வாய் போக்குவரத்து

Contributors

சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்ற ‘எவர் கிவ்வன்’ சரக்குக் கப்பல் மீட்கப்பட்டதையடுத்து, கால்வாய் மார்க்கத்தில் ஏற்பட்டிருந்த போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக பாதையில் ஒன்று எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய். மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் வகையில் இந்த கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கால்வாய் வழியாக உலக வா்த்தகத்தின் 12 சதவீதம் நடைபெற்று வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. குறிப்பாக ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கப்பல் போக்குவரத்துக்கு உயிர்நாடியாக விளங்கி வருகிறது . ஆண்டு ஒன்றுக்கு சுமார் 15,000க்கும் மேற்பட்ட கப்பல்கள் இந்த சூயஸ் கால்வாயை கடந்து செல்வதால் பரபரப்பாக இயங்கும் கடல் பாதையாக இது உள்ளது.

இதனிடையே, சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி வந்த எவர் கிவன் எனும் சரக்குக் கப்பல், இந்த சூயஸ் கால்வாயை கடந்த 22ஆம் திகதி கடந்து சென்றபோது. குறுக்கே திரும்பி சிக்கிக் கொண்டது. இந்த கப்பலானது சூறாவளிக் காற்றால் கால்வாயின் குறுக்காக மணலில் மாட்டிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த கால்வாயை கடக்க முடியாமல் நூற்றுக்கணக்கான சரக்கு கப்பல்கள் அடுத்தடுத்து நின்றதால், கடலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தடையாக நிற்கும் கப்பல் வழிவிட்டால் மட்டுமே மற்ற கப்பல்கள் செல்ல முடியும் என்பதால், இந்த கப்பலை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டது. இதையடுத்து, கப்பல் தரைதட்டி நின்ற கால்வாயின் ஆழமான பகுதியில் உள்ள மண் அகற்றும் பணி நடந்தது. மீட்பு குழுவினர் இரவு, பகல் பாராமல் பணியில் ஈடுபட்டனர். அந்த கப்பலை சக்திவாய்ந்த இழுவை படகுகள் மூலம் திருப்பி மிதக்கவிடும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, தீவிர முயற்சி காரணமாக தரை தட்டிய கப்பல் மீட்கப்பட்டது. கப்பலின் தரை தட்டிய பாகம் அதிலிருந்து விடுபட்டது. இதனால் அந்த கப்பல் தரைதட்டிய இடத்தில் இருந்து மீண்டு மிதக்கத் தொடங்கியது. ஆனாலும், அக்கப்பலால் கடலில் ஏற்பட்ட போக்குவரத்து சீராகாமல் இருந்தது. அதற்கு சில நாட்கள் ஆகும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், சிக்கிக் கொண்ட கப்பலை இழுவை படகுகள் இழுத்து சென்று விட்டதால், சூயஸ் கால்வாயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. கால்வாயை கடக்க காத்துக் கொண்டிருந்த சரக்கு கப்பல்கள் ஒவ்வொன்றாக செல்ல அனுமதிக்கப்பட்டன. சூயஸ் கால்வாயில் தடைப்பட்டு இருந்த போக்குவரத்து முழுமையாக சீரடைந்ததாக சூயஸ் கால்வாய் ஆணைய தலைவர் ஒசாமா ராபி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் 12 முதல் 15 மில்லியன் அமெரிக்க டாலர் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டது. கப்பலை மீண்டும் மிதக்க வைக்கும் பணியில் ஈடுபட்டவர்களில் 99 சதவீதம் பேர் எகிப்தியர்கள். சூயஸ் கால்வாயை கடக்க காத்திருந்த அனைத்து கப்பல்களும் புறப்பட்டு சென்றதால் போக்குவரத்து சீராகியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team