வவுனியா வாள் வெட்டுச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது - Sri Lanka Muslim

வவுனியா வாள் வெட்டுச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது

Contributors

வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் பொலிசாரால் இருவர் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) வாள்வெட்டு சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது. மக்கள் பலர் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கு.திலீபன், பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் சென்று விசாரணைகளை முன்னெடுத்த போதும் நேற்று (07) வரை எவரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் நேற்று இரவு குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதையடுத்து வவுனியா பொலிசாரால் குறித்த சம்பவம் தொடர்பில் இருவர் இன்று (08 ) காலை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யுமாறு நான் பிரதி பொலிஸ் மா அதிபர் ஊடாக பொலிசாருக்கு அறிவுறுத்தல் வழங்கிய போதும் தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் எவரும் விபரம் தெரிவிக்காமையால் சம்பவம் தொடர்பில் எவரும் உடனடியாக கைது செய்யப்படவில்லை.

நேற்று இரவு தாக்குதல் தொடர்பில் எனக்கு ஒருவர் காணொளி ஒன்றை அனுப்பியிருந்தார். அதனை உடனடியாகவே பிரதி பொலிஸ்மா அதிபருக்கு நான் வழங்கியிருந்தேன். இதன் அடிப்படையிலேயே இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

-வவுனியா தீபன்-

Web Design by Srilanka Muslims Web Team