வாக்களித்தல், வாக்கு எண்ணுவதில் புதிய யோசனைகள் முன்வைப்பு - தேர்தல்கள் ஆணையாளர் - Sri Lanka Muslim

வாக்களித்தல், வாக்கு எண்ணுவதில் புதிய யோசனைகள் முன்வைப்பு – தேர்தல்கள் ஆணையாளர்

Contributors

தேர்தலை எதிர்காலத்தில் வினைத்திறன் மிக்கதாக நடத்தும் வகையில் வாக்களித்தல் மற்றும் வாக்கு எண்ணும் முறைகளில் பல புதிய யோசனைகளை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய முன்வைத்துள்ளார்.

இந்த யோசனைகள் குறித்து அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியதன் பின்னரே இவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்து இறுதி தீர்மானத்துக்கு வரவிருப்பதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இவற்றுக்கு மேலதிகமாக தேர்தல் தொடர்பில் உள்வாங்கப்பட வேண்டிய புதிய கருத்துகள், யோசனைகள் மற்றும் தேர்தல்கள் திணைக்களத்தின் குறைபாடுகள் என்பவற்றை பொதுமக்களிடமிருந்து எழுத்து மூலமாக வரவேற்பதாகவும் ஆணையாளர் கூறினார்.

தேர்தல்கள் ஆணையாளர் நேற்று காலை செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே புதிய யோசனைகள் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.

அவையாவன,

* பாரிய மாவட்டம் தொகுதி வாரியாக பிரிக்கப்பட வேண்டும்.

* அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் வாக்காளர் ஒரு வேட்பாளருக்கு மாத்திரமே வாக்களிக்கும் முறைமை.

* மனிதர்களால் ஏற்படக்கூடிய அநாவசிய பிழைகளை தவிர்த்துக் கொள்ளும் வகையில் வாக்கு எண்ணும் நிலையங்களின் எண்ணிக்கையினை அதிகரித்தல்.

* வாக்கு எண்ணுதலை இலகுபடுத்தல் மற்றும் நேர விரயத்தை தவிர்க்கும் வகையில் வாக்குச் சீட்டின் நீளத்தைக் குறைத்தல்.

* வாக்கு எண்ணும் நிலையத்திற்கு தற்போது போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் சுயேச்சைக் குழுவொன்றின் சார்பில் ஒரு பிரதிநிதி மாத்திரமே அனுமதிக்கப்படுகின்றார். இதற்கு மேலதிகமாக ஒவ்வொரு வேட்பாளர் சார்பிலும் ஒரு பிரதிநிதியை அவர்களது மடிக் கணனியுடன் அனுமதிப்பதன் மூலம் தாமாகவே தமது வேட்பாளரின் விருப்பு வாக்குகளை கணக்கிட்டுக் கொள்ளக் கூடியதாகவிருக்கும்.

* தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு மேலதிகமாக வாக்கு எண்ணும் நிலையத்திற்குள் தேர்தல் மற்றும் அரசியலுடன் எவ்வகையிலும் தொடர்புபடாத தொழில்சார் அதிகாரிகளை விசேட கண்காணிப்பாளர்களாக நியமித்தல், இதற்காக வைத்தியர்கள், பொறியியலாளர்கள், தாதியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை தெரிவு செய்தல்.

* பிளாஸ்டிக் பெட்டி இலகுவில் வெடித்துவிடக் கூடிய அபாயமுடையதால், குறைந்த விலையில் இலங்கைக்கே உரிய பாணியில் உள்ளூரிலேயே மரத்தாலான தரமான வாக்குப் பெட்டிகளை தயாரித்தல்.(thina)

Web Design by Srilanka Muslims Web Team