வாக்கு மீறும் முதலாளிகளும் ஏமாற்றப்படும் ஊழியர்களும் » Sri Lanka Muslim

வாக்கு மீறும் முதலாளிகளும் ஏமாற்றப்படும் ஊழியர்களும்

le

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

~அ(z)ஸ்ஹான் ஹனீபா~


உலகம் சமநிலையாக செல்வதற்கு அல்லாஹ் பலவிதமான ஏற்பாடுகளை உலகில் ஏற்படுத்தி வைத்திருக்கிறான், அவ்வாறான ஏற்பாடுகளில் பணக்கார முதலாளி வர்க்கத்தினரையும் ஏழை தொழிலாளி வர்க்கத்தினரையும் ஏற்படுத்தியிருக்கிறான். அந்தவகையில் ஏழை தொழிலாளி வர்க்கத்தினர் பணக்கார முதலாளி வர்க்கத்தினரிடம் வேலைசெய்து பணம் சம்பாதித்து தனது குடும்பத்தை பரிமாரிக்கும் ஓர் நியதி நிலவி வருவது யாவரும் அறிந்த விடயமாகும்.

முதலாளிகளுக்கு கீழ் தொழில் செய்யும் ஏழை தொழிலாளிகள் கற்றவர்களாகவும் கல்லாதவர்களாகவும் இருப்பது போல் முதலாளி வர்கத்தினருக்குள்ளும் அவ்வாறான இரு வகையினரும் இருப்பது நிதர்சனமாகும், இருப்பினும் தமது தொழிலாளிகளை மனிதர்களாக மதித்து அளவோடு வேலைகள் கொடுத்து இரக்கமனப்பாங்கோடு அவர்களை நல்லமுறையில் நடாத்தும் முதலாளிகள் இருக்கும் அதேநேரம் தமக்கு கீழ் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு மனித சுமைகளுக்கு அப்பால் வேலைகள் கொடுத்து அவர்களை மனிதர்களாக மதிக்காது மிருகங்களை நடாத்துவது போல் நடாத்தும் இரக்கமற்ற அரக்கமுள்ள முதலாளிகளும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதும் மறுப்பதற்கில்லை.

மேற்குறித்த இரண்டாம் வகையைச் சேர்ந்த கொடூர உள்ளம் கொண்ட முதலாளிகள், தமது வேலைகள் மாத்திரம் எவ்வாறேனும் நடந்தேற வேண்டும், தொழிலாளிகள் என்ன பாடும் படட்டும் என்ற எண்ணத்தில் தொழிலாளிகளை இரவு பகலாக வேலைக்கமர்த்தி அவர்களிடம் வேலை வாங்குவதில் மும்முரமாக இருப்பர், இவ்வேளையில் தொழிலாளிகள் சாப்பிடனரா என்று ஒரு நொடிப் பொழுது கூட கேட்காது தமது வேலையை எவ்வாறாவது தொழிலாளிகள் செய்து முடிக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக செயற்படுவர்.

குறிப்பாக தனியார் நிறுவனங்கள், தனியார் பாடசாலைகள், அரபு மத்ரஸாக்கள், பள்ளிவாயல்கள், கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் இதர அமைப்புக்கள் வேலைக்கு ஆட்களை சேர்க்கும் போது பற்பல வாக்குறுதிகளை தொழிலாளிகளுக்கு அள்ளி வீசுகின்றனர், எவ்வாறாவது ஆட்களை சேர்க்க வேண்டும் எனும் நோக்கில் தொழிலாளிகளது கால்களை பிடிக்காத குறைக்கு அவர்களிடம் இறங்கிச் சென்று தமது வேலைத்தளங்களுக்கு ஆட்களை சேர்ப்பர். வேலைக்கு சேர்த்த பின்னர் அவர்களை சற்றும் பொருட்படுத்தாது கொடுத்த வாக்குறுதிகளை மீறி மிக மோசமாக நடப்பதோடு தொழிலாளிகளது மனம் நோகும் படியும் செயற்படுவர்.

அவ்வாறு கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றுதான் மூன்று மாதங்கள் அல்லது ஆறு மாதங்கள் கடந்ததும் குறித்த சம்பளத்தை இன்ன தொகைக்கு அதிகரித்து தருவதாக கூறுவர், குறித்த மாதம் வந்ததும் முதலாளி அல்லது நிர்வாகத் தலைவர் அல்லது பணிப்பாளரிடம் தொழிலாளிகள் சென்று “நீங்கள் இம்மாதத்துடன் சம்பளத்தை அதிகரித்துத் தருவதாக கூறினீர்களே எமக்கு அவ்வாறு சம்பளம் அதிகரித்துக் கிடைக்கவில்லை” என்று முறையிடும் பொழுது மேற்குறித்த செல்வந்தர்கள் தொழிலாளிகளிடம் “நான் அவ்வாறு கூறினேனா! ஆஹ் பிறகு பார்ப்போம், வேலை செய்யுங்கள் பிறகு யோசிப்போம்” என்று அலட்சியமாக பதலளிப்பர். இந்நேரத்தில் அனைத்தையும் கேட்டுவிட்டு தொழிலாளிகள் ஒன்றும் செய்வதறியாது துடிதுடித்துப்போவர் ஏனெனில் தொழிலாளிகள், இம்மாதத்துடன் சம்பளம் அதகரிக்கும் எனும் நம்பிக்கையில் முற்கூட்டி கடன் வாங்கி வீட்டுத் தேவைகளை நிறைவு செய்திருப்பர் ஆதலால் மீண்டும் கடன் சுமைக்கு தள்ளப்படுவதை நினைத்து இரவு பகலாக யோசித்தே காலத்தை கழிக்கும் நிலைக்கு தள்ளப்படுவர்.

இவ்வாறான கல் நெஞ்சமுள்ள முதலாளிகளுக்கு பின்வரும் நபியின் பொன்மொழி பற்றிய அச்சமோ அல்லாஹ்வின் பயமோ இல்லை என்பது தான் அதிகமதிகம் எமக்கு புலப்படுகிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
“أَعْطُوا الْأَجِيرَ أَجْرَهُ قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُهُ ” رواه ابن ماجه. وصححه الألباني

“கூலிக்காரனது கூலியை அவனது வியர்வை காய்வதற்கு முன் கொடுத்துவிடுங்கள்”

மேலும் குறிப்பிட்ட வேலைக்கு நாட்களும் நேரங்களும் அளவுகளும் சம்பளமும் வரையறுக்கப்பட்ட பின்னர் மேலதிகமாக தொழிலாளர்களிடம் வேலை வாங்கும் பட்சத்தில் அதற்கான கூலிகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும், இதனையே இஸ்லாமும் இன்றைய மனித உரிமைகள் அமைப்புகளும் கண்டிப்பாக வலியுறுத்தி வருகின்றன, இல்லையேல் இச்செயற்பாடு மோசடி, அநியாயம், வாக்கு மீற்றுதல், ஏமாற்றுதல், பொய் போன்ற இன்னோரன்ன பாவங்களை செய்வதற்கு இட்டுச்செல்வதோடு இறைவனது கோபத்தையும் சாபத்தையும் கட்டாயம் சம்பாதிக்கவல்லது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

அல்லாஹ் திருமறையில் மேற்குறித்த வண்ணெஞ்சமுள்ளவர்களை இவ்வாறு குறிப்பிடுகிறான்
“وَيْلٌ لِلْمُطَفِّفِينَ , الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ, وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ, أَلَا يَظُنُّ أُولَٰئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ

“1. அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.
2.அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.
3. ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.
4. நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா.”

அத்தோடு அவனே ஹதீஸ் குதுஸியில் மறுமை நாளில் மூவருக்கு எதிராக வாதாடுவதாகக் கூறுகிறான் அவர்களில் ஒருவனே…
“ورجل استأجر أجيرا فاستوفى منه ولم يعطه أجره “.

“ஒர மனிதன் கூலிக்கு (வேலைக்கு) ஓர் கூலிக்காரனை அமர்த்தி, அவனிடமிருந்து தாராளமாக வேலை வாங்கிய பின்னர் அவனது (உரிய) கூலியை கொடுக்காதவனாவான்”

ஆதலால் மேற்குறிப்பிட்ட அல்குர்ஆன் வசனங்களும் நபியின் பொன்மொழிகளும், தொழிலாளிகளது சம்பளத்தை உரிய நேரத்தில் வழங்குவதோடு அளவுக்கதிகம் அவர்களது சக்திக்கு அப்பால் அவர்களிடமிருந்து வேலை வாங்குவதையும் எச்சரிக்கின்றன.

பள்ளிவாயல்கள், மத்ரஸாக்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் இன்னோரன்ன வேலைத்தளங்களது ஊழியர்கள் ஏலவே கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு மாற்றமாக ஏமாற்றப்பட்டு எவ்வித கூடுதல் சம்பளமுமின்றி அளவுக்கதிகமாக வேலை வாங்கப்பட்டு ஏச்சுக்களுக்கும் மன வேதனைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு ஈற்றில் நோயுடனும் வெற்றுக் கைகளுடனும் தான் வீடு திரும்பும் ஓர் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறனர்.

இத்தனைக்கும் காரணமாக அமைந்த முதலாளிகள் தாம் அதிக இலாபம் ஈட்டியதாக நினைத்துக் கொண்டு சந்தோச வெள்ளத்தில் மூழ்கி இறைவனை மறந்துவிடும் அதேவேளை அவர்களுக்கு இறைவன் தம்மை ஒரு நாள் திடீரென்று பிடிப்பான் என்றோ அநியாயமிழைக்கப்பட்ட தமது ஊழியர்களது சாபம் தமக்கெதிராக ஏற்றுக்கொள்ளப்படும் என்றோ சற்றும் சிந்திப்பதற்கும் விளங்குவதற்கும் மறந்துவிடுகின்றனர் ஏனெனில் அந்தளவிற்கு பணத்தின் மீதான மோகமும் பேரவாவும் கண்களையும் சிந்தனையையும் மறைத்துவிட்டன.

மேலும் கூறுமிடத்து ஆடம்பர மோகத்தில் பெருமைக்காகவும் வறட்டு கௌரவத்திற்காகவும் தமது பணங்களை வீணான, தேவையற்ற விடயங்களில் அளவு கணக்கின்றி செலவழிக்கும் முதலாளிகள் தமது முன்னேற்றத்திற்காக இரவு பகலாக உழைக்கும் தொழிலாளிகளுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காது சம்பளத்தை அதிகரித்து கேட்கும் போதெல்லாம் சாட்டுப்போக்கு கூறி இடத்தைவிட்டு நழுவிவிடுவதில் பற்கல யுக்திகளையும் தந்திரங்களையும் கையாள்வதில் வல்லவர்களாக செயற்படுகின்றனர் என்பதே நிதர்சனங்கள் கூறிநிற்கும் யதார்த்தங்களாகும்.

உண்மையான ஈமானிய உணர்வும், இறையச்சமுமுள்ள முதலாளிகள் மற்றும் நிர்வாகிகள், தங்களது ஊழியர்களுக்கு அநியாயம் செய்யாது அவர்களை மதித்து உரிமைகளைக் கொடுத்து மனிதம் பேணி உரிய கூலிகள் மற்றும் சம்பளங்களை உரிய நேரத்தில் வழங்கி அவர்களது உளவியலை விளங்கி முறையாக நற்பண்புகளுடன் நடப்பர், அவ்வாறே ஈமானும் இறையச்சமும் இல்லாதவிடத்து தங்களது ஊழியர்களுக்கு அநியாயத்திற்கு மேல் அநியாயம் செய்து அவர்களை தூசுக்கும் பொருட்படுத்தாது மிருகங்களிடமிருந்து வேலை வாங்குவது போல் வேலை வாங்கி தமது இருப்பை தக்கவைப்பதற்காக இலாபமீட்டுவதில் அதிகமதிகம் கரிசனை எடுப்பர்.

ஊழியர்களது சாபத்தையும் மன வேதனைகளையும் பயந்து நாளை மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் குற்றவாளியாக பிடிபடுவதை நினைத்து கப்ர், மஹ்ஷர், ஹிஸாப், மீஸான், ஸிராத் மற்றும் நரகம் போன்ற கட்டங்களைத் தாண்ட வேண்டியுள்ளதை கவனத்திற்கொண்டு இனியாவது ஊழியர்களது உரிமைகளை உரியமுறையில் வழங்கி முறையாக மரியாதையாக அவர்களை நடாத்தும் முதலாளிகளும் நிர்வாகிகளும் உருவாக வேண்டுமென்பதே காலத்தின் தேவையும் ஊழியர்களது அவாவுமாகும்.

வல்லவன் அல்லாஹ் முதலாளிகள், நிர்வாகிகள், பணிப்பாளர்களுக்கு தொழிலாளர்களது விடயத்தில் சிறந்த ஈமானிய தெளிவுகளையும் இறையச்சத்தையும் கொடுத்தருளுவதோடு ஊழியர்களது உரிமைகள்,அவர்களை மதித்து முறையாக நடத்தல், மற்றும் உரிய தகுதியான கூலிகள், சம்பளம் வழங்கல் போன்றவற்றில் அதிக கரிசனை காட்டும் நல்லுள்ளதையும் வழங்கியருள்வானாக! ஆமீன்

நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா
ஹுஸைனியாபுரம்-பாலாவி

Web Design by The Design Lanka