வாப்பா... !!! » Sri Lanka Muslim

வாப்பா… !!!

muslim

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

 வாப்பா
++++++
Mohamed Nizous

முள்ளு வலிக்குதென்னு
மூட்டைகள வெச்சுப் போட்டு
ஒள்ளுப்பம் உட்கார்ந்து
ஓய்வெடுக்க நினைக்கையிலே
பிள்ளைக்கு டியூஷனுக்கு
பீஸ் கட்ட வேணும்னு
உள்ளுக்கு நெனப்பு வர
உடனே வலி பொறுத்து
உழைக்கின்ற மனுசனுக்கு
உள்ள பெயர் ‘வாப்பா’

கால்கள் கடுகடுக்க
கடையில நிண்டுழைத்த
கால் வயிற்றுச் சம்பளத்தில்
காப்பியும் குடிக்க மாட்டான்.
பாலகனின் பால் முகம்
பாவி மகன் மனம் தோன்ற
ஏலுமான காசுக்கு
இனிப்பு வாங்கிக் கொண்டு
வேல விட்டு வருபவனுக்கு
வெச்ச பெயர் வாப்பா.

டை கட்டி உட்கார்ந்து
டாப் லெவலில் ஓடரிட
கைகட்டி வேலை செய்வார்
காரியாலய ஊழியர்கள்.
ஐயா ஆபிஸ் விட்டு
ஆத்துக்கு வந்த பின்னால்
பையன் பெண்ட் எடுப்பான்
பசு மாடு போகச் சொல்வான்
மெய்யாக மாடாகி
மேனியை வளைத்து நிற்க
ஐயா அவன் முன்னால்
அப்பாவி அப்பா ஆவார்.

கெம்பஸில் புரபஸர்
கேள்வி கேட்கின்ற
கொம்பனுக்கு எல்லாம்
கொடுப்பார் அவர் பதில்.
சிம்பிளாய் பிள்ளை
சேர்ட்ட புடிச்சிக்கிட்டு
ஏம்பா காகமெல்லாம்
இப்படிக் கருப்பென்று
வீம்பின்றிக் கேட்பவனுக்கு
விடை சொல்லா நிற்கையிலே
ஷேம் என்று சிரிப்பவனுக்கு
சேர்ந்து சிரிப்பவன் பெயர் டாடி.

வாப்பா… 
*******************************************************************

வாப்பா…
நானறிந்த நாள் முதல்
நானுங்களை தேங்கிக் கிடந்து பார்த்ததில்லை
ஓடும் அருவியாய்
நீங்களிருந்ததால்த்தான்
நாங்கள் உங்களில் முகம் பார்த்து
அலங்காரம் செய்துகொண்டோம்!

உங்களது தேடல்
உங்களது பயணம்
உங்களது வியர்வை
உங்களது உழைப்பு
அத்தனைக்கும் நாங்கள்தான் தலைப்பு!

உங்களது கரங்களைப்
பார்க்கும் போதெல்லாம்
இந்தக் கரங்கள்தான்
முஹம்மது நபிக்குப்
பிடித்த கரங்களென்று தோன்றுமெனக்கு!

உங்களுக்குள் எவ்வளவு
மன அழுத்தங்களும் சுமைகளும்
அடர்ந்து கிடக்கின்றன என்பதை
நான் சற்று வளர்ந்த பின்புதான்
புரிந்துகொண்டேன்!

உங்களை வாசலுக்குத்
தேடி வருவோர் சிலரை
சந்தோசமாக வீட்டுக்குள்
அழைத்துப் பேசுவதையும்
இன்னும் சிலரை
வாசலில் வைத்தே ஏதோ
ரகசியமாய்ப் பேசி அனுப்புவதையும்
நான் பார்த்திருக்கிறேன்

பிற்காலத்தில்தான் புரிந்துகொண்டேன்
உங்களது சுமையை
எங்களிடம் காண்பிக்கக் கூடாது என்பதற்காக
நீங்கள் காண்பித்த அக்கறையின்
பிரதிபலிப்புக்கள் அவை என்பதை!

ஒருத்தருக்கு ஒரு நாள்
சாப்பாடு போடுவதே
ரொம்பச் சிரமமாகிவிட்ட இந்த உலகில்
உம்மாவுடன் சேர்த்து
எட்டுப்பேருக்கு
உணவும் உடைகளும்
எமக்குக் கல்வியும் தர
நீங்கள் எவ்வளவு பாடுபட்டிருப்பீர்கள் என்பதை
இன்று ஒவ்வொரு கணமும்
இருதயம் எண்ணி உங்களை
அண்ணார்ந்து பார்க்கிறது வாப்பா..!

உங்களுக்கு அரச உத்தியோகமும் இல்லை
நிரந்தரத் தொழிலுமில்லை
ஆனால் நாங்கள் மட்டும்
நிரந்தரமாய் உண்டு களித்தோம்
உங்கள் உழைப்பு மாத்திரமே
உங்கள் மூலதனமாயிருந்தது.

பசித்தோருக்கு உணவு கொடுப்பதும்
பணத்தைக் கொண்டாடாமல்
மனிதர்களைக் கொண்டாடுவதும்
பிறரின் இன்றைய தேவை கண்டால்
உங்களின் நாளைய தேவையை மறந்துவிடுவதும்
ஓயாது ஓடிக்கொண்டேயிருப்பதும்தான்
நீங்கள் எனக்குத் தந்துள்ள முன்மாதிரிகள்

வாப்பா…
உங்களது கண்ணீரையும் கவலையையும்
நாங்கள் கண்டதில்லை என்பதை விடவும்
நீங்கள் எங்களிடம் காண்பித்ததில்லை
என்பதே உண்மை
ஆனாலும் உங்களுக்குள்
எறிமலையாய் அவை அமிழ்ந்துகிடந்தன என்பதை
நானறிவேன் வாப்பா…!

எதிர்மறைச் சிந்தனைகள்
எப்போதுமே உங்களிடம் இருந்ததில்லை
உங்களால் முடியாவிட்டாலும்
முடியும் என்ற வார்த்தையைத்தான்
எங்களுக்குத் தந்திருக்கிறீர்கள்
அந்த வழிகாட்டலில்தான்
நான் இன்று வரை முயன்றுகொண்டேயிருக்கிறேன்!

வாப்பா…
உங்களது விதை இன்று
மண்ணை முட்டிமோதி
தளிர்விட்டு நிற்கிறது
விருட்சமாகி
உங்கள் ஆயுள்வரை நிழல் தரும் பாக்கியத்தை
எல்லாம் வல்ல அல்லாஹ்
எனக்கருள வேண்டும்
அப்போது உங்களுக்குள்ளிருக்கும்
எறிமலை அனைத்தும் பனிமழையாகும்,
இன்சா அல்லாஹ்!

இப்படிக்கு,
உங்கள் அன்பு மகன்,
ரா.ப.அரூஸ்
18.06.2017

Web Design by The Design Lanka