வாழைச்சேனை பிரதேச செயலக விடயத்தில் மட்டு கச்சேரி முட்டுக்கட்டையாக இருக்கிறது : முஸ்லிங்களின் காணிகள் பறிபோன போது அமீரலி பார்வையாளராக மட்டுமே இருந்தார் : சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்..! - Sri Lanka Muslim

வாழைச்சேனை பிரதேச செயலக விடயத்தில் மட்டு கச்சேரி முட்டுக்கட்டையாக இருக்கிறது : முஸ்லிங்களின் காணிகள் பறிபோன போது அமீரலி பார்வையாளராக மட்டுமே இருந்தார் : சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்..!

Contributors
author image

நூருள் ஹுதா உமர்

மாளிகைக்காடு நிருபர்

வாழைச்சேனை மக்களுக்கு தேவையான பிரதேச செயலக வர்த்தமானி அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. இதனால் நில அளவை படம் பெறுவதில் கூட நிறைய சிக்கல்கள் இருக்கிறது. இது தொடர்பில் உள்நாட்டலுவல்கள் அமைச்சு மட்டக்களப்பு கச்சேரிக்கு கடித தொடர்புகளை ஏற்படுத்தி இந்த பிரதேச செயலக எல்லைகள் தொடர்பிலான இறுதி முடிவுக்கு வர வர்த்தமானி அறிவிப்பை வெளியிட தயாரான போது மட்டக்களப்பு கச்சேரி நிர்வாகம் தடையாக உள்ளது என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாபிழ் இஸட்.ஏ. நஸீர் அஹமட்டின் பிரேரணையை ஆமோதித்துப் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட 1999.06.03 அன்று அமைச்சரவையினால் பன்னம்பல ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அந்த ஆணைக்குழு கோறளைப்பற்று மத்தி மற்றும் கோறளைப்பற்று தெற்கு ஆகிய பிரதேச செயலகங்களை உருவாக்க சிபாரிசு செய்திருந்தது. அந்த அடிப்படையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலத்திற்கு 11 கிராம சேவகர் பிரிவுகளும் 240 சதுர கிலோமீட்டர் நிலமும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் கோறளைப்பற்று தெற்கு 18 கிராம சேவகர் பிரிவுகளும் 686 சதுர கிலோமீட்டர் நிலமும் வழங்கப்பட்டிருந்தது. இதன் படி இறுதி அமைச்சரவை அங்கீகாரம் 2000.07.13 ம் திகதி வழங்கப்பட்டு இந்த புதிய பிரதேச செயலகங்கள் 2002.05.26 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அந்த காலகட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலத்திற்கு 11 கிராம சேவகர் பிரிவுகளும் உள்வாங்கப்பட்டு நிர்வாகம் இயங்கி வந்தது. 211B, 211H கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக ஏறத்தாழ 185 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை கொண்டதாக வாழைச்சேனை பிரதேச செயலம் (கோறளைப்பற்று மத்தி) இயங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்த மக்கள் வாக்காளர்களாக பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு நிர்வாகம் சீராக இயங்கியது. இருந்தும் 2004 இற்கு பின்னர் மட்டக்களப்பில் இருந்த மாவட்ட நிர்வாகம் 211B, 211H கிராம சேவகர் பிரிவுகளை கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலத்துடன் இணைத்து அந்த நிலப்பரப்பினை 185சதுர கிலோமீட்டரிலிருந்து 7.5 சதுர கிலோமீட்டராக குறைத்தது. இது வெளிப்படையான இனவாத செயற்பாடாக நோக்கப்படுகிறது.

அன்று அதிகாரத்திலிருந்து முன்னாள் பாராளுமன்ற பிரதிநிதி எம்.எஸ்.எஸ்.அமீரலி மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவராக இருந்தும் முஸ்லிங்களுக்கு எதிராக இடம்பெற்ற நில அபகரிப்பின் போது பார்வையாளராக மட்டுமே இருந்துள்ளார். தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான அல்ஹாபிழ் இஸட்.ஏ. நஸீர் அஹமட் குறிப்பிட்டது போன்று மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு 1.5 சதவீத காணிகள் மட்டும் தான் உள்ளது. அங்கு வறுமைக்கோட்டுக்கு கீழே நிறைய மக்கள் வாழ்கின்றனர். இந்த சபையில் முன்னாள் முதலமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி. சந்திரகாந்தன், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என பல்வேறு தரப்பினரும் உள்ளார்கள். நலிவடைந்துள்ள கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் வாழைச்சேனை மக்களுக்காக நியாயமான தீர்வை வழங்க முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Web Design by Srilanka Muslims Web Team