வாழ்க்கை - கஞ்சி (கவிதை) » Sri Lanka Muslim

வாழ்க்கை – கஞ்சி (கவிதை)

kanch

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


வாழ்க்கை
சில நேரம் சுவையானது –
கோப்பைக் கஞ்சிக்குள்
கோழித் துண்டைப் போல,

வாழ்க்கை
சில நேரம் கடுப்பானது-
இதே கஞ்சிக்குள் கடிபடும்
ஏலக்காய் போல,

வாழ்க்கை
அமைதியானது-
ஆறிய கஞ்சின் மேல் படரும்
ஆடை போல,

வாழ்க்கை
ஆராவாரமானது-
கொதிக்கும் கஞ்சியை
குடித்த குமரி போல,

வாழ்க்கை
கசப்பானது-
காய்ச்சப் பழகி கடைசியில்
கருகிப் போன கஞ்சி போல,

வாழ்க்கை
மதிப்பானது-
பெஜ் இப்தாரில்
பெரிய ரெஸ்டூரண் கஞ்சி போல,

வாழ்க்கை
மலிவானது-
இஷாவுக்குப் பின்னும்
எஞ்சியிருக்கும் கஞ்சி போல,

வாழ்க்கை
அழகானது-
குழந்தை மூக்கில் படப்பட
குடிக்கும் கஞ்சி போல

வாழ்க்கை
அசிங்கமானது-
அடுத்தவனின் கோப்பைக்குள்
அதிகம் கோழித்துண்டு என்று
அங்கலாய்க்கும் பொதுமகன் போல,

வாழ்க்கை
மணமானது-
மக்ரிப் பாங்கில்
மனதை மயக்க
மணக்கும் கஞ்சி போல

வாழ்க்கை
நாற்றமானது-
சுபஹு செல்லும் வழியில்
சொல்லாமல் வீதியில் வீசிய
சொப்பிங் பேக் கஞ்சி போல,

வாழ்க்கை
த்ரில்லானது-
பள்ளிப் பானைக்குள் இருப்பது
பால் கஞ்சா கோழிக் கஞ்சா எனப்
பார்க்கத் துடிக்கும் வரிசைவாசிகள் போல

வாழ்க்கை
ஏமாற்றமானது-
பெரிய கோப்பையில் ஊற்றி
பிறகு குடிக்க முடியாது திணறும்
பிள்ளைகளின் ஆசை போல,

வாழ்க்கை
தற்காலிகமானது-
ஷவ்வால் பிறையுடன்
சகலதும் முடிந்து
சட்டி கவிழ்க்கப் படுவது போல…!

Web Design by The Design Lanka