விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு செயற்பட்டது போன்று ஜனாதிபதி இஸ்லாமிய தீவிரவாதத்தையும் அழிக்கவேண்டும் - ஞானசார தேரர்..! - Sri Lanka Muslim

விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு செயற்பட்டது போன்று ஜனாதிபதி இஸ்லாமிய தீவிரவாதத்தையும் அழிக்கவேண்டும் – ஞானசார தேரர்..!

Contributors

விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு செயற்பட்டது போன்று செயற்பட்டு ஜனாதிபதி இஸ்லாமிய தீவிரவாதத்தையும் அழிக்கவேண்டும் என பொதுபலசேன வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.


இஸ்லாமிய தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குவதை தடுப்பதற்கான அவசியம் உள்ளது என தெரிவித்துள்ள அவர் புலிகளின் பயங்கரவாதத்தை நாட்டில் இருந்து அழிப்பதற்கு எடுத்தது போன்ற துல்லியமான விரைவான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதற்கான சதிமுயற்சிகள் மற்றும் தீவிரவாதிகளின் செல்வாக்கு குறித்து தனது கடிதத்தில் தெரிவித்துள்ள தேரர் நாட்டில் தீவிரவாத கொள்கைகளை பரப்புபவர்களை அடையாளம் காண்பது அவசியம் என தெரிவித்துள்ளார்.


அவர்களிற்கு எதிராக உடனடி சட்டநடவடிக்கையை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்லாமிய மதத்தின் பெயரால் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட உயிர்த்தஞாயிறு தாக்குதல் தற்போது அரசியல் பந்தாக மாறியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


சர்வதேச அரசியல் தற்போது இதற்குள் ஊடுறுவுகின்றது எனவும் தெரிவித்துள்ள ஞானசார தேரர் இந்த தாக்குதலிற்கு வழிவகுத்த கொலைகார போதனைகள் கோட்பாடுகள் குறித்து எந்த விசாரணையும் இடம்பெறவில்லை என தோன்றுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.


உயிர்த்தஞாயிறு தாக்குதலை நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்ட முறையில் பயன்படுத்துவதையும் அவதானிக்க முடிகின்றது மதத்தலைவர்கள் உட்பட சில சக்திகளை இதற்காக பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிறிய பாதுகாப்பு இடைவெளிகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற தாக்குதலை நாடு எதிர்நோக்குகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team