விமலுக்கு என்ன தகமை இருக்கின்றது? -ஹனீபா மதனி - Sri Lanka Muslim

விமலுக்கு என்ன தகமை இருக்கின்றது? -ஹனீபா மதனி

Contributors

ரணில் விக்கிரமசிங்க, ரவூப் ஹக்கீம், விக்னேஸ்வரன் போன்ற உயர் கல்வித்தகைமை கொண்டவர்களைப் பற்றி விமர்சிப்பதற்கு, விமல் வீரவன்ச போன்ற அமைச்சர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது என அக்கரைப்பற்று மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம்.ஹனிபா மதனி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசியல் வரலாற்றில் தங்களை இடதுசாரி அரசியல்வாதிகளாகக் காட்டிக் கொண்ட சில பச்சோந்திகள் சிறுபான்மை மக்களின் தலைவர்கள், தமது மக்களின் உரிமைகள் பற்றிப் பேசுவதையும் அதற்காகக் குரல் கொடுத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் பிரிவினைவாதமாக மற்றவர்களுக்கு பூச்சாணடி காட்டப் பார்க்கின்றனர்.

இடதுசாரிகளாக அரசியலில் பிரவேசித்த இவர்கள் தம்மை அரியாசனம் ஏற்றியவர்களை எட்டி உதைத்து விட்டு அரசில் இணைந்து அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டு முதலாளிகளாக உலா வருகின்றனர். இந்த லட்சணத்தில் விமல் வீரவன்ச போன்ற அமைச்சர்கள் ரணில் விக்கிரமசிங்க, ரவூப் ஹக்கீம், விக்னேஸ்வரன் போன்ற உயர் கல்வித் தகைமை கொண்டவர்களுக்கு எதிராக அறிக்கைகள் விடும் போது நிதானத்தினை கடைப்பிடிக்க வேண்டும்.

நடந்து முடிந்த மூன்று மாகாண சபைத் தேர்தல்களிலும் தேசிய சுதந்திர முன்னணிக்குக் கிடைத்த தோல்வியை மறைக்கவும் தாம் மேற்கொண்ட இனவாதக் கருத்துக்களை மக்கள் ஒட்டு மொத்தமாக நிராகரித்ததை மக்கள் மனங்களில் இருத்திக்கொள்வதை திசை திருப்புவதற்குமே இவ்வாறான பிற்போக்குவாதக் கருத்துக்களை அமைச்சர் தெரிவித்து வருகின்றார்.

இடதுசாரிகளாக அரசியலில் இருந்தவர்கள் அரச வளங்களை அனுபவிக்கத் தலைப்பட்டு விட்டால் கொள்கைகளை மாற்றிக் கொள்வதும் பின் அவர்கள் மக்களால் நிராகரிக்கப்படுவதும் தொடர்ந்து இவர்கள் இருந்த இடந்தெரியாமல் மறைந்து விடுவதும் இந்த நாட்டில் பலருக்கு நடந்த கதையாகும். இந்த வரலாற்று உண்மையை அமைச்சர் விமல் வீரவன்ச மீட்டிப் பார்க்க வேண்டும்.

எல்லா மக்களையும் எல்லாக் காலங்களிலும் ஏமாற்றலாம் என நினைத்த பலர் வரலாற்றில் மண் கவ்விய கதையே அதிகமாகும். கடந்த மாகாண சபைத் தேர்தலில் அமைச்சர் வீரவன்ச கட்சி மட்டுமன்றி இனவாதத்தை உச்சமாகப் பேசிய ஹெல உறுமயக் கட்சியும் நூறு வீத தோல்வியையே சந்தித்திருக்கிறது. இது இனவாதத்தை இந்நாட்டு மக்கள் வெறுக்கின்றனர் என்ற செய்தியையே நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

சிங்களப் பேரினவாதத்தின் விருப்பங்களையோ வேறு எந்த ஒரு சாராரின் தீவிரவாத அபிலாஷைகளையோ நிறைவேற்ற வேண்டிய தேவை ஸ்ரீ ல.மு.காவுக்கோ ஹக்கீமுக்கோ கிடையாது. அதனை அமைச்சர் வீரவன்ச மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். விக்னேஸ்வரன் வடக்கின் தமிழர்களின் நலன் பற்றிப் பேசுவதையும் ரவூப் ஹக்கீம் கிழக்கு முஸ்லிம்கள் பற்றிக் கரிசனை கொள்வதையும் ஏற்றுக்கொள்ளும் மனோபவத்தை அமைச்சர் வீரவன்ச போன்றவர்கள் ஜீரணிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

இத்தேர்தலில் தமது கட்சிக்கு மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை, இதற்குரிய காரணம் என்ன, மக்களின் பொருளாதாரப் பிரச்சினையா அல்லது இளைஞர்கள் முகங்கொண்டுள்ள வேலையில்லாப் பிரச்சினையா அல்லது ஒட்டு மொத்த மக்களும் சிக்கித் தவிக்கின்ற வாழ்க்கைச் செலவு பிரச்சினையா அல்லது வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வீடில்லாப் பிரச்சினையா என்பன போன்ற வினாக்களுக்கு விடைகளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாது எனும் தன் கையாலாகாத நிலையை மறைப்பதற்கே அமைச்சர் வீரவன்ச, ரணில், ரவூப் ஹக்கீம், விக்னேஸ்வரன் ஆகியோர் நாட்டைப் பிரிக்கப் போகின்றனர் என்று கதையளக்கத் தொடங்கியிருக்கின்றார்.

தொலைந்து போன இடதுசாரி அரசியல்வாதிகளின் பட்டியலில் மிகக் கூடிய கெதியில் அமைச்சர் வீரவன்ச இடம் பிடிக்கப் போகின்றார் என்பதை மக்கள் மிகத் தெளிவாகவே புரிந்து வைத்திருக்கின்றனர். இதனையே மாகாண சபைத் தேர்தல்களும் அமைச்சரின் அறிக்கைகளும் கோடிட்டு காட்டி நிற்கின்றன என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.-TC

Web Design by Srilanka Muslims Web Team