விமலை அரசாங்கத்தைவிட்டு விரட்டுமாறு பிரதமரிடம் 44 MP க்கள் கோரிக்கை..! - Sri Lanka Muslim

விமலை அரசாங்கத்தைவிட்டு விரட்டுமாறு பிரதமரிடம் 44 MP க்கள் கோரிக்கை..!

Contributors

அமைச்சர் விமல்வீரவன்சவிற்கு எதிராக பிரதமர் மகிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசாங்கத்தின் 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அலரிமாளிகையில் பிரதமரை சந்தித்த அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 44 பேர் அமைச்சர் விமல்வீரவன்சவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அமைச்சரின் அறிக்கைகள் சில அரசாங்கத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித் பண்டார இந்த சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

தனது கையடக்க தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டிருந்த அமைச்சர் விமல்வீரவன்சவின் உரைகளை காண்பித்துள்ள அவர் பசில்ராஜபக்சவிற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விமல்வீரவன்சவின் அறிக்கைகள் கட்சிக்குள் பிளவுஏற்பட்டுள்ளது என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன என தெரிவித்துள்ள ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் விமல்வீரவன்சவின் நிகழ்வுகளில் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் சஜ்சீவ எதிரிமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2006 இல் அமைச்சரவையிலிருந்து மங்களசமரவீர அனுரா பண்டாரநாயக்க ஸ்ரீபதிசூரியாராச்சி போன்றவர்களை வெளியேற்றியது போன்று விமல்வீரவன்ச உதயகம்மன்பில ஆகியோரை நீக்காவிட்டால் அரசாங்கத்தின் எதிர்காலத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் பசில் ராஜபக்சவின் ஆதரவாளர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. (தினக்குரல்)

Web Design by Srilanka Muslims Web Team