வியாபாரிகள் வியாபாரத்தையும் தாண்டி சமூக நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..! - Sri Lanka Muslim

வியாபாரிகள் வியாபாரத்தையும் தாண்டி சமூக நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..!

Contributors

மாளிகைக்காடு நிருபர்

உலகை கடந்த வருட ஆரம்பம் முதல் கடுமையாக தாக்கிக்கொண்டிருக்கும் கொரோனா அலை மூன்றாவது கட்டத்தை எட்டி இலங்கையில் லட்சக்கணக்காண தொற்றாளர்களையும் ஆயிரத்தை தாண்டிய மரண பதிவுகளையும் கொண்டு மிகவேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தி பெறுமதியான உயிர்களை காப்பாற்றி கொள்ள எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்புடன் நடந்துகொள்ளவேண்டும். அதிலும் குறிப்பாக வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தையும் இலாப, நஷ்ட கணக்குகளையும் தாண்டி சமூக நலனையும் இந்த காலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும் என காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார்.

மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் கலாச்சார மண்டபத்தில் இன்று (16) நடைபெற்ற மாளிகைக்காடு மொத்த மீன்வியாபாரிகள் மற்றும் மீனவர்கள் நல சங்கத்தினருடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் இங்கு கருத்து தெரிவித்த அவர். கொரோனா பரிசோதனைகள் செய்வது இந்த பிராந்திக்குத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவே. அதற்கான முழு ஒத்துழைப்பையும் மீனவர்களும் மீன்பிடித்துறை சார் ஏனைய தொழிலாளிகளும் சுகாதார தரப்பினருக்கு முழுமையாக வழங்க வேண்டும் என்றார்.

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர் எஸ். வேல்முருகு, பொதுசுகாதார பரிசோதகர்களான கே. ஜெமீல், எம்.எம்.எம். சப்னூஸ் உட்பட மீன் வியாபாரிகள் சங்க தலைவர், செயலாளர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்த இந்த கூட்டத்தில் பிரதேச மீனவர்களும், வியாபாரிகளும் இந்த கொரோனா கால பயணத்தடையில் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மீன்வியாபாரத்தில் உள்ள சுகாதார சிக்கல்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team