விராது தேரர் நாட்டுக்குள் பிரவேசிக்க வீசா வழங்குவதனை ஜனாதிபதி தடுத்து நிறுத்த வேண்டும் - Sri Lanka Muslim

விராது தேரர் நாட்டுக்குள் பிரவேசிக்க வீசா வழங்குவதனை ஜனாதிபதி தடுத்து நிறுத்த வேண்டும்

Contributors
author image

Editorial Team

மியன்மாரின் கடும்போக்கு பௌத்த அமைப்பின் தலைவராக கருதப்படும் அசின் விராது பௌத்த தேரர் இலங்கை விஜயம் செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை முஸ்லிம் பேரவை தெரிவித்துள்ளது. 969 என்ற பௌத்த கடும்போக்கு அமைப்பின் தலைவரான விராது தேரரை டைம்ஸ் சஞ்சிகை பௌத்த பயங்கரவாதி என அடையாளப்படுத்தி அட்டைப்படத்தில் புகைப்படமொன்றை வெளியிட்டிருந்தது.

 

எதிர்வரும் 28ம் திகதி பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டில் விராது தேரர் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. பொதுபல சேனா அமைப்பின் அழைப்பிற்குஅமைய இவ்வாறு விராது தேரர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

 

எனினும், விராது தேரரின் இலங்கை விஜயம் நாட்டின் இன நல்லிணக்கம் மற்றும் மத சகாவாழ்வினை பாதிக்கும் எனத் தெரிவித்து முஸ்லிம் பேரவை, ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

 

மியன்மாரில் அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு எதிராக பௌத்த மக்களை தூண்டி பாரியளவில் வன்முறைகள் இடம்பெறுவதற்கும் முஸ்லிம்கள் இழப்புக்களை எதிhநோக்கவும் விராது தேரர் பின்புலத்தை ஏற்படுத்திக் கொடுத்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. விராது தேரரின் இலங்கை விஜயமும் மாநாட்டில் ஆற்றவுள்ள உரையும் மேலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டக் கூடிய வகையில் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விராது தேரரின் விஜயத்திற்கு அரசாங்கம் அனுமதியளித்தால் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் கடும்போக்குவாத அமைப்பிற்கு ஆதரவாகவும் அரசாங்கம் செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.

 

சில மாதங்களுக்கு முன்னதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் மியன்மாருக்கு விஜயம்செய்தது முதல், விராது தேரரின் 969 அமைப்பிற்கும் பொதுபல சேனாவிற்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்றுள்ளன.

 

மியன்மாரி விராது தேரர் நாட்டுக்குள் பிரவேசிக்க வீசா வழங்குவதனை ஜனாதிபதி தடுத்து நிறுத்த வேண்டுமென இலங்கை முஸ்லிம் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.(gtn)

Web Design by Srilanka Muslims Web Team