விஷம் கக்குமா வெண்கட்டிகள் ? » Sri Lanka Muslim

விஷம் கக்குமா வெண்கட்டிகள் ?

IMG_2135

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

-எப்.எச்.ஏ. ஷிப்லி-


உங்கள் பாடசாலையில் ஏதோ பிரச்சினை என்று புரிகிறது. அதற்கு உரிய முறையில் முறைப்பாடுகள் செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். அநேகமான பாடசாலைகள், அரச நிறுவனங்களில் பல்வேறு சலனங்கள் ஏற்படுவது வாழையடி வாழைதான். அதற்காக எல்லா ஊழியர்களும் நடுவீதியிலா நிற்கிறார்கள்??

ஆனால், அந்தப்பிரச்சினையை அடிப்படையாகக்கொண்டு “கற்ற” சமூகம், எதிர்கால தலைவர்களை உருவாக்க வேண்டிய சமூகம், நாட்டில் ஒற்றுமையையும், சகவாழ்வையும் இனங்களுக்கிடையில் நிலைநாட்ட முன்மாதிரிகளாக இருக்கவேண்டிய சமூகம் இப்படி இனவாதத்தைக் கக்கிக்கொண்டு, மிக அநாகரீக பதாகைகளுடன் நடு வீதியில் இறங்கியது எந்தவகையில் நியாயமாகும்??

இதனைப் பார்த்து வளர்கின்ற மாணவர்களின் மனங்களில் எத்தகைய நச்சு விதைகளை விதைக்கிறீர்கள் தெரியுமா?

சந்தடிசாக்கில் உங்கள் குரூர மனங்களின் ஒரு பகுதியை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டீர்கள்..

சாஹிரா பாடசாலையில் எத்தனை தமிழ் மாணவர்கள்? என்று கேள்வி எழுப்பும் அம்மணியே ! இது எத்தனை அபத்தமான கேள்வி என்று புரியவில்லையா? பாடசாலைகள் இனம், மதம் பார்த்து பிள்ளைகளை இணைப்பதில்லை. கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியன் மாணவனை மாணவனாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர அவனது சமயம் சார்ந்து பார்க்கக்கூடாது என்கிற அடிப்படை கல்வி உளவியல் தெரியாமல் போய்விட்டதா?

சுத்தத்தமிழ் பற்றி பேசும் ஆசிரியரே..! நீங்கள் சுத்தத்தமிழிலா படிப்பிக்கிறீர்? பேச்சுவழக்கில் படிப்பிப்பதில்லையா? பாடத்தை படிப்பித்தால் போதாதா? அது மாணவனுக்கு விளங்கினால் போதாதா? ஒவ்வொரு பிரதேசத்துக்கும் சில பேச்சுவழக்குகள் இருப்பதும், அவை பேச்சினூடே எப்படியும் வெளிப்படும் என்பது உமக்கு தெரியாதா?

எழுத்துப்பிழைகளை அல்லது வார்தைப்பிழைகளை திருத்திக்காட்டும் கல்விமானே..!! உங்கள் மனதின் பிழைகளை, அதன் கசடுகளை எப்படி திருத்தப்போகிறீர்?

இது உள்ளுக்குள் இருந்து திடீரென் வெடித்த காழ்ப்புணர்வா??

கல்வி என்பது எல்லோர்க்கும் பொதுவானது. மதம் என்பது அவரவர் சுதந்திரம். பாடாசாலைகளில் ஏற்படக்கூடிய புரிந்துணர்வின்மை பொதுவான ஒரு விடயம்..இவற்றை விட்டுவிட்டு,

கல்விக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க பதாகை ஏந்துங்கள்..

ஆசிரியர்களுக்கான வசதி, வாய்ப்பை அதிகரிக்க பதாகை ஏந்துங்கள்..

நவீன கற்றல், கற்பித்தல் முறைமைகளை அமுல்படுத்த பதாகை ஏந்துங்கள்..

மாணவர்களின் கல்வியை மேம்படுத்த என்னவெல்லாம் தேவையோ அதற்கெல்லாம் பதாகை ஏந்துங்கள்..

இது வெட்கம்,

நன்றாக இணைந்து பழகிக் கொண்டிருக்கும் இனங்களுக்கிடையில் நீங்கள் ஏற்படுத்த விளையும் வீண் சச்சரவு..

இதன்மூலம் நீங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள மகஜரை தெருவுக்கு வராமலே அனுப்பியிருக்கலாம்.

இதன்மூலம் நீங்கள் சம்பாதித்தது நற்பெயர் அல்ல – தீராத ஒருவகை வெறுப்பை, உங்களோடு அன்பாகவும், நட்பாகவும் பழகும் ஒரு சமூகத்தின் ரௌத்திரத்தை, இரு சமூகங்களுக்கிடையில் தேவையற்ற ஒரு சலனத்தை இத்யாதி இத்யாதிகளைத்தான்..

பொதுவாக எந்த ஆசிரியரை நான் கண்டாலும் அதில் எனக்குக் கற்றுத்தந்த ஆசிரியர்களைக் கண்டுகொள்வேன். அதனால் எல்லா ஆசிரியர்களையும் எனக்குக் கற்றுத்தந்த ஆசிரியர்களாகவே உள்ளத்தால் ஏற்றுக்கொள்வேன். ஆனால், உங்களில் எனது எந்த ஆசிரியரையும் கண்டுகொள்ள முடியவில்லை. மன்னிக்கவும்.

Web Design by The Design Lanka