வெகு விரைவாக மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்ற தேவையும் அழுத்தங்களும் இருப்பதாக பசில் ராஜபக்ச கூறினார் - சுமந்திரன்..! - Sri Lanka Muslim

வெகு விரைவாக மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்ற தேவையும் அழுத்தங்களும் இருப்பதாக பசில் ராஜபக்ச கூறினார் – சுமந்திரன்..!

Contributors

மாகாணசபை தேர்தலை நடத்தவேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பசில் ராஜபக்ச தேர்தலை வெகுவிரைவாக நடாத்த அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார். தங்களுக்கும் தேர்தலை நடத்தவேண்டும் என அழுத்தமிருப்பதாக பசில் ராஜபக்ச தெரிவித்தார் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

நாடாளுமன்ற தெரிவுக்குழு தேர்தல் முறை மறுசீரமைப்பு பற்றிய கூட்டம் நடைபெற்றது.

குறித்த தெரிவுக்குழுவிற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

இவ்வாறு இந்த குழு சந்திக்க ஆரம்பித்ததிலிருந்து மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதனையே நாங்கள் வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.

அதனை நகர்த்துவதில் உள்ள சட்ட சிக்கல்கள் சம்பந்தமாக ஒவ்வொரு தடவையும் பிரஸ்தாபிக்கப்படும்.

ஆனாலும், ஒரு சிறிய சட்ட திருத்தத்தின் ஊடாக முன்னர் இருந்த தேர்தல் முறைமையை பின்பற்றி, தேர்தல் நடத்த முடியும் என்ற கருத்தை நான் வெளிப்படுத்தியிருந்தேன்.

அதற்கான ஒரு சட்ட மூலமும் 2019 ஆம் ஆண்டு, நான் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தேன்.

இந்நிலையிலேயே கூட்டத்திற்கு வருகை தந்திருந்த பசில் ராஜபக்ஷ வெகு விரைவாக மாகாண சபை தேர்தலை நடத்துவதென்று அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக அறிவித்தார்.

தங்களுக்கும் மாகாண சபை தேர்தல் நடத்த வேண்டும் என்ற தேவையும் அழுத்தங்களும் இருப்பதாக கூறினார்.

அதாவது இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வந்து சென்றதன் பின்னர் இதை கூறியுள்ளார்.

இது எப்படியாக இருந்தாலும் மாகாணசபை தேர்தல் உடனடியாக நடத்தப்படவேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடாக தொடர்ச்சியாக இருந்து வந்து கொண்டிருக்கின்றது.

ஆகையினாலே என்னுடைய சட்டமூலத்தை உபயோகித்து ஒரு சட்ட திருத்தத்தை உடனடியாக செய்து, மாகாண சபை தேர்தலை நடத்தலாம் என்ற கருத்தை பல உறுப்பினர்கள் வெளிப்படுத்தியிருந்தார்கள்.

நான் தயாரித்திருந்த சட்ட மூலத்தை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயலாளரிடம் நான் கொடுத்திருக்கின்றேன்.

இந்நிலையில் அமைச்சரவை இது குறித்து ஆலோசித்து ஒரு முடிவெடுத்து, அப்படி செய்வதாக இருந்தால் எதிர்வருகின்ற நாட்களில் அதனை வர்த்தமானியில் பிரசுரித்து, ஒரு அரசாங்க வரைபாக சட்டமூலமாக அதனை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team