வெற்றி குறித்து மிஸ்பா உல் ஹக் பெருமை - Sri Lanka Muslim
Contributors

தென்னாபிரிக்க அணிக்கெதிராகப் பெறப்பட்ட வெற்றி குறித்துப் பெருமையடைவதாக பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். உலகின் முதல்நிலை டெஸ்ற் அணியை வெற்றிகொண்டமை தங்களுடைய அணிக்கு சிறந்த தன்னம்பிக்கையை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று நிறைவடைந்த இந்த டெஸ்ற் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களால் இலகுவாக வெற்றிபெற்றிருந்தது. 15 டெஸ்ற் போட்டிகளுக்குப் பின்னர் தென்னாபிரிக்க அணி சந்தித்த முதலாவது தோல்வியாகவும் இது அமைந்திருந்தது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள மிஸ்பா உல் ஹக், தட்டையான ஆடுகளத்தில் தங்களது பந்துவீச்சாளர்கள் முதலாவது இனிங்ஸில் பந்து வீசிய விதம் தென்னாபிரிக்க அணியை 250 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி, வெற்றிக்கான வாய்ப்பை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.

பந்துவீச்சாளர்களுக்குப் பின்னர் பாகிஸ்தானின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான குர்றாம் மன்சூர், ஷான் மசூத் இருவரும் சிறப்பான ஆரம்பத்தை வழங்கியமை தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களின் திட்டங்களை மாற்றியமைக்க வைத்ததாகக் குறிப்பிட்ட மிஸ்பா உல் ஹக், அவர்களிருவரும் தேவையான நேரத்தில் அடித்தாடியமை மிகச்சிறப்பான வித்தியாசத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.

உலகின் முதல்நிலை டெஸ்ற் அணிக்கெதிராக இவ்வாறான பெறுபேறொன்றை வெளிப்படுத்த முடியுமென்றால், உலகில் எந்தவொரு அணிக்கெதிராகவும் இவ்வாறான பெறுபேற்றை வெளிப்படுத்த முடியுமெனத் தெரிவித்த மிஸ்பா உல் ஹக், இந்த அணியின் மேல் எப்போதும் தனக்கு நம்பிக்கை இருந்ததாகக் குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team