வெளிநாடு செல்வோர் தங்க நகைகள் எடுத்துச் செல்வதில் புதிய கட்டுப்பாடுகள் - Sri Lanka Muslim

வெளிநாடு செல்வோர் தங்க நகைகள் எடுத்துச் செல்வதில் புதிய கட்டுப்பாடுகள்

Contributors

வெளிநாடு செல்பவர்கள் தங்க நகைகள் எடுத்துச் செல்வது தொடர்பில் நேற்று முதல் அமுலாகும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 

இலங்கை பிரஜைகள் தமது பயணப் பொதிகள், ஆவணங்கள், அணிந்து செல்லும் நகைகள் தவிர வர்த்தக நோக்கத்துடன் நகைகளோ பொருட்களோ எடுத்துச் செல்வது, நேற்று முதல் அமுலாகும் வகையில் தடுக்கப்பட்டுள்ளது. திரும்பி எடுத்து வரும் அடிப்படையிலே பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட இருப்பதாக சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார். இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக பெருமளவில் தங்க நகைகள் கடத்தப்படுவதால் இதனை தடுக்கம் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுங்கப் பேச்சாளர் கூறினார்.

இதற்கு முன்னர் 5 முதல் 15 பவுண் வரை தங்கம் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு தங்கம் கடத்தும் நடவடிக்கைகள் அண்மைக் காலமாக அதிகரித்திருந்தது.

இந்த நிலையிலே நேற்று முதல் அமுலாகும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

5 முதல் 15 பவுண்கள் வரை எடுத்துச் செல்லுவதற்கான அனுமதி உடன் ரத்துச் செய்யப்பட்டிருப்பதாக கூறிய சுங்கப் பேச்சாளர், தங்கத்தினால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், முழுமை செய்யப்படாத பொருட்கள் என்பன தங்க உபகரணங்களாக கருதப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டார்.

பயணிகள் எடுத்துச் செல்லும் மற்றும் அணிந்து செல்லும் பொருட்களை திருப்பி எடுத்து வருவது தொடர்பில் கண்காணிக்க முறைமையொன்றை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுங்க அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வரவு செலவுத் திட்டத்தினூடாக தங்கத்தின் மீதான சுங்க வரி நீக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலை குறைவடைந்தது. இதனை பயன்படுத்தி கூடுதலான நகைகளை அணிந்தும் நகைகளை மறைத்தும் வெளிநாடுகளுக்கு கடத்திய சம்பவங்கள் அண்மை காலங்களில் இடம்பெற்றன. இவ்வாறு 20க்கும் அதிகமானவர்கள் கடந்த இரண்டு மாதத்தில் பிடிபட்டன.

Web Design by Srilanka Muslims Web Team