வெளிநாட்டில் இருந்தபடி உறவுகளுக்கு எரிவாயுவை ஓடர் செய்வதற்கு புதிய செயலி - டொலரில் கொடுப்பனவு! - Sri Lanka Muslim

வெளிநாட்டில் இருந்தபடி உறவுகளுக்கு எரிவாயுவை ஓடர் செய்வதற்கு புதிய செயலி – டொலரில் கொடுப்பனவு!

Contributors

வெளிநாட்டில் வசிப்பவர்கள் தமது உறவுகளுக்காக எரிவாயுவை ஓடர் செய்வதற்கும், அதற்கான கொடுப்பனவை அமெரிக்க டொலரில் செலுத்துவதற்கும் ஏற்ற வகையில் உள்நாட்டின் முன்னணி எரிவாயு வழங்குநரான லிற்றோ கேஸ் லங்கா லிமிட்டட், தமது வீட்டு விநியோக செயலியில் புதிய அம்சத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே வழங்கிவரும் தனது சேவைக்கு மேலதிகமாக இந்தப் புதிய அம்சம் இணைக்கப்பட்டிருப்பதுடன், இலங்கை எதிர்நோக்கியுள்ள டொலர் பிரச்சினைக்கு ஆற்றல்மிக்க தீர்வாகவும் இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லிற்றோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ், ‘இந்தப் புதிய அம்சம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், ‘உள்நாட்டில் உள்ள எரிவாயு சந்தையில் 80சதவிகித பங்கைக் கொண்டிருக்கும் முன்னணி எரிவாயு வழங்குநர் என்ற ரீதியில் புதிய வழிகளின் ஊடாக எமது வாடிக்கையாளர்களின் சிறந்த அனுபவத்தை மென்மேலும் முன்னேற்றுவதில் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தி வருகின்றோம். இதற்கமைய வெளிநாட்டில் உள்ளவர்கள் தமது பாசமான உறவுகளுக்குத் தேவையான எரிபொருளை வீட்டிற்கே விநியோகத்தைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் ஓடர்களை வழங்க முடியும். நாட்டின் பொருளாதார மீட்சிக்கு அதிகம் தேவைப்படும் அமெரிக்க டொலர்களின் மூலம் இதற்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளவும் முடியும்’ என்றுள்ளார்.

‘விஸ்தரிக்கப்பட்டுள்ள எமது விநியோக வலையமைப்பானது குறுகிய காலப் பகுதியில் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளை உறுதிப்படுத்துகிறது. இது வாடிக்கையாளர்கள் சிலிண்டர்களை எடுத்துக் கொண்டு பயணிப்பதால் ஏற்படுகின்ற செலவீனம் மற்றும் சிரமங்களைக் குறைத்து வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை அளிக்கிறது’ என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் மூழ்கிச் செல்லாமல் இருப்பதற்குப் பங்காற்றிவரும் வெளிநாட்டவர்களையும் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களையும் பாராட்டும் வகையில் இந்தப் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும்

வீட்டில்  உள்ள தமது பாசமான உறவுகளின் வாழ்க்கையை எளிதாக்குவதற்காக மேற்கொண்டுவரும் அவர்களின் கடுமையான உழைப்பை மதிப்பதற்கான சிறியதொரு அடையாளமாக இது அமையும் என்றும் லிற்றோ நிறுவனத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையின் காரணமாக ஏற்பட்ட  நீண்ட வரிசையை இல்லாமல் செய்த முதலாவது அத்தியாவசிய சேவையாக லிற்றோ சமையல் எரிவாயு காணப்படுகிறது. உலக வங்கியின் நிதியுதவியுடன் நான்கு மாதங்களுக்குத் தேவையான 100,000மெற்றிக்தொன் எல்.பி.ஜி எரிவாயுவைக் கொள்வனவு செய்ததன் மூலம் இதனைச் சாத்தியமாக்க முடிந்துள்ளது.

பிரதான போட்டியாளர் தனது செயற்பாட்டைத் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்திருந்த நிலையில் லிற்றோ தனியாளாக நின்று 20நாட்களுக்குள் 2.2மில்லியன் சிலிண்டர்களை மக்களுக்கு விநியோகித்துள்ளது.

இலங்கையில் இலாபம் ஈட்டும் ஒரு சில அரசாங்க நிறுவனங்களில் ஒன்றாக லிற்றோ நிறுவனம் தொடர்ந்தும் விளங்கி வருகிறது. தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் தொடர்பில் லிற்றோ கவனம் செலுத்துவதே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. கொரோனா தாக்கம் உச்சம் பெற்றிருந்த காலகட்டத்தில் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் லிற்றோவின் வீட்டு விநியோக செயலி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. தொழில்நுட்பத்தின் ஊடாகத் தனது சேவைகள் மற்றும் உற்பத்திகளை விஸ்தரிப்பது என்ற நிறுவனத்தின் உத்வேகத்துக்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.

வீட்டு விநியோக செயலியை (ஹோம் டெலிவரி அப்) இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள லிற்றோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிலையத்தின் 1311தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ளலாம்.

Web Design by Srilanka Muslims Web Team