வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோரை விமான நிலையத்தில் பதியும் நடைமுறை நிறுத்தம் - Sri Lanka Muslim

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோரை விமான நிலையத்தில் பதியும் நடைமுறை நிறுத்தம்

Contributors

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுச் செல்பவர்களை விமான நிலையத்தில் பதிவு செய்யும் நடைமுறை இன்று ஜனவரி முதலாம் திகதி முதல் நீக்கப்படுகிறது. இன்று முதல் பணியகத்தின் தலைமை அலுவலகத்திலும், பிரதான அலுவலகங்கள் சிலவற்றில் மட்டுமே பதிவுகள் மேற்கொள்ளப் படும் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளரும் பேச்சாளருமான மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.

இதுவரை காலமும் விமான நிலையத்தில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட கரும பீடத்தில் பதியும் நடவடிக்கைகள் அமுலில் இருந்தது. இன்று முதல் இந்த நடைமுறை நீக்கப்படுகிறது.

விமான நிலையத்துக்கு வருவதற்கு முன்னதாக பணியகத்தின் பிரதான அலுவலகங்களான பத்தரமுல்லையிலுள்ள தலைமை அலுவலகம், அநுராதபுரம், பதுளை, சிலாபம், தம்புள்ள, காலி, யாழ்ப்பாணம், திருகோணமலை, கல்முனை, மத்துகம, கண்டி, கேகாலை, வவுனியா போன்ற அலுவலகங்களில் பதிவு செய்ய முடியும். வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுச் செல்பவர்கள் தங்களது தொழில் ஒப்பந்தங்களை காண்பித்து பதிவு செய்த பின்னரேயே செல்ல அனுமதிக்க ப்படுவார்கள். எனவே, பதிவு செய்வது கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலர் முகவர் ஊடாக செல்லாமல் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட விசா ஒன்றின் மூலம் வேலை வாய்ப்பை பெற்றுச் செல்கின்றனர். இவர்கள் விமான நிலையத்தில் பதிவு செய்தே இதுவரை சென்றனர். இனிமேல் அவர்களும் பணியகத்தின் அலுவலகங்களில் பதிவு செய்த பின்னரே செல்ல முடியும். பதிவு செய்வதற்கு மறந்து அல்லது பதிவு செய்யாமல் செல்ல எத்தனித்து பணியக அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்படுபவர்கள் கட்டுநாயக்கா மற்றும் மத்தள விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள ‘சஹன பியச’ (நிவாரண இல்லம்)வுக்குச் சென்று பதிவு செய்த பின்னரே செல்ல அனுமதிக்கப்படுவர்.

பதிவுசெய்யாமல் வெளிநாடு செல்வதற்கு எத்தனித்து இறுதி நேரத்தில் பிடிபடுபவர்கள் வெளிநாடு செல்வதற்கு உள்ள சந்தர்ப்பத்தை இழக்க நேரிடும் என்பதையும்

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.

விமான நிலையத்தில் பதிவுகளை மேற்கொள்ளும் போது குறித்த இலங்கையர் செல்லும் நாட்டின் தொழில் வழங்குனருடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம், மற்றும் அவரது பாதுகாப்புக்கான உத்தரவாதம் என்ன என்பதை பற்றி உடனடியாக ஆவணங்களை சரிபார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது.

இதனை கருத்திற் கொண்டும் வெளிநாடு செல்லும் இலங்கையரின் தொழில் பாதுகாப்பை கருத்திற் கொண்டுமே விமான நிலையத்தில் பதிவு செய்யும் நடைமுறை நீக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.thinakaran

Web Design by Srilanka Muslims Web Team