வேற்றுமையை இல்லாதொழித்து சமாதானம் மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் - ஜனாதிபதி » Sri Lanka Muslim

வேற்றுமையை இல்லாதொழித்து சமாதானம் மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

maith

Contributors
author image

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

பிரிவினைகள் மற்றும் சந்தேகங்களின்றி நம்பிக்கையுடன் அனைவரும் சமூகத்தில் வாழ்வதற்கான உரிமையை உறுதிசெய்வதனூடாகவே நாட்டில் பொருளாதார, சமூக மற்றும் இன அடிப்படையில் ஏற்படும் சகல பிரச்சினைகளுக்குமான தீர்வுகளைக் காணலாம் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

வேற்றுமையை இல்லாதொழித்து அனைவரும் புரிந்துணர்வுடனும், நம்பிக்கையுடனும் செயற்படும் சமூகமொன்றினை எமது நாட்டில் கட்டியெழுப்புவதற்கு சகலரும் பிரிவினைகளின்றி ஒன்றுபடவேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று (11) பிற்பகல் மாத்தறை வெஹெரஹேன பூர்வாராம ரஜமகா விகாரையில் இடம்பெற்ற வண. கிரம விமலஜோதி தேர்ருக்கு தென்னிலங்கையின் பிரதான சங்கநாயக்கர் பதவிக்கான நியமனப் பத்திரிகையை வழங்கும் புண்ணிய நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒட்டுமொத்த பெளத்த சமூகத்தினதும் நன்மைகருதி தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் விரிவான குறிக்கோளுடன் செயற்படும் வண. கிரம விமலஜோதி தேரரின் புத்த சாசனத்திற்கான மற்றும் சமூக செயற்பணியினை இதன்போது பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், அன்னார் தமது கடமைகளை மிகவும் பொறுப்புடன் நிறைவேற்றி முன்னுதாரணமான செயற்படும் ஒருவர் என்றும் குறிப்பிட்டார்.

விசேட சமய பிரசார செயற்பாடுகளில் ஈடுபட்டு பௌத்த சமயத்தின் மறுமலர்ச்சிக்காகவும், சிறந்த அறிவும், ஒழுக்கமும் கொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான அன்னாரின் அர்ப்பணிப்பினையும் ஜனாதிபதி அவர்கள் பாராட்டினார்.

உன்னதமான பிக்கு சமூகத்தின் கௌரவத்தையும், நன்மதிப்பையும் பாதுகாக்கும்வண்ணம் பிக்குகள் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தினை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள் சிறந்த நடத்தையும், கௌரவமும் கொண்ட பிக்குமாரே இன்றைய சமூகத்தின் எதிர்பார்ப்பாகும் என்று தெரிவித்ததுடன், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் சில இளம் பிக்குமார் நடந்துகொள்ளும் விதம் ஊடகங்களினூடாக உலகம் முழுவதும் காண்பிக்கப்படுவதனால் பிக்குகள் தொடர்பாக மக்களிடம் ஏற்படக்கூடிய தவறான எண்ணங்களைத் தவிர்க்க முடியாது என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

தெஹிவல நெதிமால பௌத்த கலாசார நிலையத்தின் பொறுப்பதிகாரி, வெஹெரஹேன சிறி ரேவத்த மகா பிரிவெனாவின் பொறுப்பாளர், தென்னிலங்கைக்கான பிரதான சங்கநாயக்கர் வண.கிரம விமலஜோதி தேரருக்கு ஜனாதிபதி அவர்கள் நினைவுப்பரிசொன்றையும் வழங்கினார்.

தேரர் அவர்களால் எழுதப்பட்ட தர்ம போதனை நூல்களும் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டன.

அண்மையில் மாத்தறை மாவட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்திய வௌளப்பெருக்கினால் வீடுகளை இழந்த மக்களுக்கான காணி உறுதிகள் இதன்போது வழங்கப்பட்டதுடன், சிங்கப்பூரின் மகா கருணா பௌத்த சங்கத்தின் போதனையாளர் வண. அலவ்வே குணரத்தன தேரரினால் அந்த மக்களுக்காக அன்பளிப்பு செய்யப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்குதலும் ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கோட்டே ஶ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்கர் கலாநிதி அதிவண. இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரர் புண்ணிய நிகழ்வின் தலைமைப் பொறுப்பை வகித்ததுடன், தெவுந்தர சஜமகா விகாராதிபதி ஶ்ரீ கல்யாணவங்ச மகா நிக்காயவின் அனுநாயக்கர் அதிவண. தெவுந்தர சிறி சுனந்த நாயக்க தேரர், பேராசிரியர் மிதிகம சோரத்த நாயக்கதேரர், மாத்தறை வெஹெரஹேன பூர்வாராம ரஜமகா விகாரையின் விகாராதிபதி வண. கேகாலை ரத்தனசார நாயக்க தேரர் உள்ளிட்ட மாகாணத்தின் மகாசங்கத்தினரும், பூர்வாராம ரஜமகா விகாரையின் கொடையாளர் சபையின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, அமைச்சர் மஹிந்த அமரவீர, பிரதியமைச்சர் அனுராத ஜயரத்ன, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் த சில்வா, மாகாண அமைச்சர் சந்திம ராசபுத்ர உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகள், மற்றும் பிரதேச மக்களும் இப்புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Web Design by The Design Lanka