வைரமுத்துவின் கவிதைப் பாணியில் கவிதை படைக்கும் கவிஞர், ரிஸ்னா » Sri Lanka Muslim

வைரமுத்துவின் கவிதைப் பாணியில் கவிதை படைக்கும் கவிஞர், ரிஸ்னா

rizn

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஊவா மாகாணத்தின் தியத்தலாவையை தனது சொந்த இடமாகக் கொண்ட எச்.எப். ரிஸ்னா எழுதிய மெல்லிசைத் தூறல்கள் என்ற பாடல்களடங்கிய நூல் வெளிவந்துள்ளது. இந்த நூலில் இவர் இதுவரை எழுதியுள்ள பாடல்களில் 36 அழகிய பாடல்கள் உள்ளடங்கியுள்ளன. கொடகே பதிப்பகத்தினால் 88 பக்கங்களை உள்ளடக்கியதாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூல் மூலம் அவர் பாடலாசிரியராக தடம் பதிக்கிறார்.

இலங்கையின் வானொலி, தொலைக்காட்சி அலைவரிசைகளில் இவரது பாடல்கள் ஒலி,ஒளிபரப்பப் பட்டுள்ளன. இவர் பாடல்கள் மாத்திரமன்றி கவிதை, சிறுகதை, நூல் விமர்சனம், சிறுவர் இலக்கியம் ஆகிய துறைகளிலும் ஊடகத்துறையிலும் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றார். மெல்லிசைத் தூறல் என்ற இவரது பாடல்கள் அடங்கிய நூல் இவரது 9 ஆவது நூல் வெளியீடாகும். இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

கடன் கொடுத்துப் பார்
………………………………………

கடன் கொடுத்துப் பார்
உன்னைச் சுற்றி ஏமாற்றம் தோன்றும்
துரோகம் அர்த்தப்படும்
காலத்தின் நீளம் விளங்கும்
உனக்கும் கண்ணீர் வரும்
தலையெழுத்து மாறிப்போகும்
நண்பன் எதிரியாவான்
கடனைத் திருப்பிக்கேட்டே
உன் வாய் வலிக்கும்
கண்ணிரண்டும் இருட்டிப் போகும்
கடன் கொடுத்துப் பார்

தலையணை நனைப்பாய்
மூன்று முறை கோல் பண்ணுவாய்
ஆன்ஸர் பண்ணினால்
வருஷங்கள் நிமிஷம் என்பாய்
ஆன்ஸர் பண்ணாவிட்டால்
நிமிஷங்கள் வருஷம் என்பாய்
கடன் கேட்டவனே கவனிக்க மாட்டான்
ஆனால் அவனை நீ கவனிக்க வேணுமென உணர்வாய்
மூளைக்கும் மனசுக்கும்
உருவமில்லா வலி உருண்டை உருளக் காண்பாய்
இந்த பாசம், நேசம், அன்பு, நம்பிக்கை இந்த நட்பு எல்லாம்
பணத்தை வாங்கும் வரைக்கான ஏற்பாடுகள் என்பாய்
கடன் கொடுத்துப் பார்

இருதயம் அடிக்கடி வலியால் துடிக்கும்
நிசப்த அலைவரிசையில் கடன் வாங்கியவனின் குரல் ஒலிபரப்பாகும்
உன் பணமே எமனாகி
உன்னை வாட்டும்
கடனின் திரைச் சீலையை
பணம் கிழிக்கும்
எதிர்பார்ப்புகள்
நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
உதடுகள் காய்ந்து சகாராவாகும்
கடன் சமுத்திரமாகும்
பிறகு கண்ணீர் துளிக்குள்
சமுத்திரம் மிதக்கும்
கடன் கொடுத்துப் பார்
சுவற்றில் மோதி மோதி உடைந்து போக உன்னால் முடியுமா
நம்பியதால் துரோகத்தை அடைந்ததுண்டா
கெஞ்சுகின்ற வலி அறிந்ததுண்டா
கவலையை உனக்குள் புதைக்கத் தெரியுமா
சபையில் அழுகையை கட்டுப்படுத்தவும்
தனிமையில் சத்தமிட்டு அழவும்
உன்னால் முடியுமா

பைத்தியம் ஆக வேண்டுமா
ஐந்து அங்குல இடைவெளியில் அவனிருந்தாலும்
உன்னை காணாததுபோல் இருந்ததுண்டா
கடன் கொடுத்துப் பார்

சின்னச் சின்ன துரோகங்களை பழக வேண்டுமே அதற்காகவேனும்
கோபத்தைக் கட்டுப்படுத்தி பணிந்துபோக வேண்டுமே அதற்காகவேனும்
நம்பிக்கை என்ற சொல்லுக்கும் துரோகம் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத அர்த்தங்கள் விளங்குமே அதற்காகவேனும்
வாழ்ந்து கொண்டே சாகவும் முடியுமே
செத்துக்கொண்டே வாழவும் முடியுமே அதற்காகவேனும்
கடன் கொடுத்துப் பார்

சுயமரியாதை சட்டை பிடித்தாலும்
கௌரவம் உயிர் பிழிந்தாலும்
விழித்துப் பார்க்கையில் கடன்காரன் ஊரைவிட்டு சென்றிருந்தாலும்
ஒரே சந்தியில் இருவரும் சந்தித்துக்கொண்டாலும்
நீ தேடும் அவனோ உன்னைக் கண்டுக்காமல்விட்டாலும்
கடன் கொடுத்துப் பார்

கண்ணீர் விரக்தி இரண்டில் ஒன்று
இங்கே நிச்சயம்
கடன் கொடுத்துப் பார்!!!

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா (இலங்கை)
riznahalal@gmail.com

மூலம் – கவிப்பேரரசு வைரமுத்து
Source – Kaviperarasu Vairamuththu

rizn

Web Design by The Design Lanka